எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின்போது மே-17 இயக்கத்தினர் மீது போடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்திருக்கிறது சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம். இதனை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கொண்டாடிவரு கின்றனர்.
கடந்த 2017-ல் சென்னை பெசன்ட் நகரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த அறிவிப்பு செய்தது மே-17 இயக்கம். இதற்கான அனுமதி எடப்பாடி அரசால் மறுக்கப்பட்டது. தடையும் விதிக்கப் பட்டது. தடையை மீறி நிகழ்ச்சியை நடத்த முயற்சித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prabakaran-b'day.jpg)
அதனைத் தடுத்த போலீசார், மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட தோழர்கள் 17 பேர் மீது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது, தடையை மீறி நிகழ்ச்சியை நடத்த முயற்சித்தது என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்தனர். இதனையடுத்து, திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார், தனஞ்செயன், சிவா, சுரேஷ், தஞ்சை தமிழன், கோகுல் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மே-17 இயக்கத்துக்கு எதிரான இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுப் பிரிவான சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நடத்தியது. வழக்கின் விசாரணையில், நினைவேந்தும் உரிமையை நிலைநாட்டும் வகையில் மே-17 இயக்கத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பழனிவேல் தலைமையிலான வழக்கறிஞர்கள் வாதம் வைத்தனர். காவல்துறையின் பொய் வழக்கை முறியடிக்கும் விதமாக வழக்கறிஞர்களின் வாதங்கள் இருந்தன.
7 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், டிச.3-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை யில், காவல்துறையினர் முன்வைத்த குற்றச்சாட்டினை நிராகரித்து, 17 தோழர்களையும் விடுதலை செய்ததுடன், அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என உத்தரவிட்டார் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதியரசர். இந்த விடுதலையை தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து திருமுருகன் காந்தியிடம் நாம் பேசிய போது, "கடந்த 2017 நினைவேந்தல் நிகழ்வு, பல்வேறு நெகிழ்வான நினைவுகளை எங்களுக்குக் கொடுக்கிறது. கடுமையான அடக்குமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான உணர்வாளர்கள் நினைவேந்தலுக்கு திரண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/prabakaran-b'day1.jpg)
அய்யா ஓவியர் வீரசந்தானம், இறுதியாக பங்கேற்ற நிகழ்வு அது. அனைவர் மீதும் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது காவல்துறை. என்னை தனிமைப்படுத்தி காவலர்கள் தாக்கு வதைக் கண்ட தமிழர் விடியல் கட்சியின் டைசன், இளமாறன், அருண்குமார் உள்ளிட்ட தோழர் கள் எனக்கு அரணாக நின்றார்கள். அதனால் அவர்களும் என்னுடன் சிறைப்பட்டார்கள்.
எங்கள் நால்வர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குகளை பதிவதாகவும், மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் பிணை (ஜாமீன்) வழங்க ஏற்பாடு செய்வதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனை கடுமையாக எதிர்த்தோம். இரண்டு வாரத்தில் அருண்குமா ருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்தது. நான்கு வருட போராட்டத்திற்குப் பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் உறுதி செய்யப்பட்ட திருமணம் அது.
இந்த சமயத்தில்தான் அவர் என்னுடன் சிறைப்படுத்தப்பட்டார். எங்கள் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டது. 17 நாட்கள் சிறைவாசத் திற்கு பின்னர் எங்கள் நால்வரைத் தவிர, மற்றவர்களுக்கு பிணை கிடைத்தது. சிறையில் இருந்ததால் அருண்குமாரின் திருமணம் நின்று போனது. ஆனால், அவரது இணையர் உறுதி யோடு ஆதரித்து நின்றார். ஒரு கட்டத்தில், சிறையிலிருந்து அருண்குமார் வெளியே வந்ததும் அவர்களின் திருமணம் நடந்தது. எங் கள் மீது பொய்யாக புனையப்பட்ட குண்டர் சட்டத்தை உடைத்து பிணை கிடைக்கச் செய்தார் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ.
சிறையிலிருந்த 4 மாத காலகட்டத்தில், பிணை எடுக்க இயலாமலும், வழக்கறிஞர் வைத்து வாதாட வாய்ப்பில்லாமலும் இருந்த 30 அப்பாவி ஏழை சிறைவாசிகளுக்கு பிணை ஏற்பாட்டினை செய்து கொடுத்தோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு 8 மாதங்களாக சிறையிலிருந்த அப்பாவிகள் இவர்கள்.
சிறையிலிருந்து பிணையில் நாங்கள் வெளியே வந்ததும் பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலையிட்டோம். இதற்காக எங்கள் மீது 3 தேசத்துரோக வழக்கை அப்போதே பதிவு செய்தனர். அதன் பிறகு, மோடிக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், காவிரிக்காக ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டம், சேலம் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான போராட்டம், பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம் என நாங்கள் நடத்திய பல போராட்டங்களுக்காக எங்கள் மீது 27 வழக்குகள் போடப்பட்டன. இவற்றில் பெரும்பாலான வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டோம்.
நினைவேந்தல் நிகழ்வு வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் குற்றமற்றவர் கள் என விடுதலை செய்திருக்கிறது நீதிமன்றம்.
டைசன் என்பவர் மார்ட்டினின் மகன் என்றும், அவரிடமிருந்து பல கோடி ரூபாய் பெற்று இயக்கம் நடத்துவதாக மாரிதாஸ் என்பவரும் பா.ஜ.க.வும் பொய் களைப் பரப்பினார்கள். எங்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இந்த அவதூறுகளுக்கு எதிராக காவல்துறையில் நாங்கள் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதன் மூலம் எங்கள் போரட்டம் வெற்றியடைந் திருப்பதுடன், நினைவேந்துவது தமிழர் உரிமை; நினைவேந்துவது குற்றமாகாது என்பது நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எங்களுக்காக ஆதரவளித்த அனைவரையும் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறோம். மக்களின் கோரிக்கைக்கான எங்களின் போராட்டம் தொடரும்''’ என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார் திருமுருகன் காந்தி.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-12/prabakaran-bday-t.jpg)