இரண்டு மாதங்களாக பரபரப்பின்றி இருந்த தலைமைச் செயலகம் கடந்த இரண்டு நாட்களாக இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. அரசின் உயரதிகாரிகள் தொடர்ச்சியாக பல மீட்டிங்குகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அதனை வைத்து உயரதிகாரிகளுடன் விவாதிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு நடத்தை விதிகள் ஜூன் 6#ந்தேதி விலக்கிக்கொள்ளப்படவிருக்கும் நிலையில், கோட்டையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் ரெக்கைக் கட்டிக்கொண்டு பறக்கின்றன. குறிப்பாக, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாற்றப்படவிருக்கிறார்; புதிய தலைமைச் செயலாளர் யார்? என பரபரத்துக் கிடக்கிறது கோட்டை.
இதுகுறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""தற்போது தலைமைச் செயலாளராக இருக்கும் சிவ்தாஸ்மீனா, இந்த வருடம் அக்டோபர் 5-ந்தேதியோடு ஓய்வு பெறுகிறார். அதற்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் தலைமைச் செயலாளர் பதவியை கைப்பற்ற கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தி-ருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் போட்டிகள் அதிகரித்துள்ளன.
ஓய்வுக்குப் பிறகும் ஏதேனும் அரசின் முக்கிய பதவிகளில் இருக்க விரும்புகிறார் சிவ்தாஸ்மீனா. அதனால், பதவிக்காலம் முடிந்து புதிய பதவிக்குச் செல்வதற்கு முன்பாகவே வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு புதிய பதவியில் உட்கார நினைத்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
அந்தவகையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் சேர்மனாக சிவ்தாஸ்மீனாவை நியமிக்க முதல்வர் ஸ்டாலினிடம் காய்கள் நகர்த்தப்படு கிறது. ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரமிக்க சேர்மன், மற்றும் 3 உறுப்பினர் பதவிகள் இருக்கின்றன. இதில் சேர்மன், 2 உறுப்பினர் பதவிகள் நீண்ட காலமாக கா-யாக இருக்கிறது. இதில் சேர்மன் பதவியில் சிவ்தாஸ் மீனாவை உட்கார வைக்கும் முயற்சிகள் வேகமெடுத்துள்ளன. அனேகமாக, ஜூன் இரண்டாம் வாரத்துக்குள் சிவ்தாஸ் மீனா மாற்றப்படலாம்.
இந்த நிலையில், தலைமைச் செயலாளர் பதவியைக் கைப்பற்ற முதல்வர் ஸ்டாலினின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். தீவிர முயற்சியில் குதித்துள்ளார். இவர், 1991 ஆம் வருட பேட்ஜ் அதிகாரி. இவர் ஓய்வுபெற இன்னும் 3 வருடங்கள் இருக்கின்றன.
அதேசமயம், முருகானந்தத்துக்கு சீனியர்களாக 1987 பேட்ஜில் டி.வி.சோமநாதன்; 1988 பேட்ஜில் விக்ரம்கபூர், அதுல்ய மிஸ்ரா; 1989 பேட்ஜில் கிருஷ்ணன், எஸ்.கே.பிரபாகர், சந்தீப் சக்சேனா, அனிதா ப்ரவீன்; 1990 பேட்ஜில் விபுநய்யார், பணீந்திர ரெட்டி, சாய்குமார், ஜவஹர்; 1991 பேட்ஜில் ராமச்சந்திரன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இருக்கிறார்கள்.
இவர்களில் பலர் மத்திய அரசு பணியில் இருந்து வருகிறார்கள். அவர்களைத் தவிர்த்து மாநில அரசு பணிகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ்.களில் விக்ரம்கபூர் மற்றும் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் தலைமைச் செயலாளர் பதவியை குறிவைத்து இயங்குகின்றனர்.
இந்த மாதமே புதிய தலைமைச்செயலாளர் மாற்றம் இருக்கலாம். அப்படி மாற்றப்படும்போது, முதல்வரின் செயலாளர்கள் உட்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் மாற்றப்படவிருக்கின்றனர். அதற்கான சூழல்கள்தான் கோட்டையை சூழ்ந்து கொண்டிருக்கிறது''‘’ என்று விவரிக்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.
புதிய தலைமைச்செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டால் அவர் வகித்து வரும் முதல்வரின் முதன்மைச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார்? அந்த பதவியை கைப்பற்றப்போவது யார்? என்கிற விவாதங்களும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடையே எதிரொலிக்கிறது.
இதற்கிடையே, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் சூழ-ல், மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார துறையில் அடிஷனல் டைரக்டராக இருக்கும் டாக்டர் ராஜமூர்த்திக்கு, அதே துறையின் இயக்குநராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டு அதற்கான அரசாணை மே 29#ந் தேதி பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மே-டத்துக்கு மிகவேண்டப்பட்டவர் என்பதால் இவரின் பதவி உயர்வுக்கு மட்டும் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதியை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.
இந்தச் சூழலில், தமிழக அரசுக்கு 5,832 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய தாது மணல் கொள்ளையில் தொடர்புடைய சுரங்கத்துறையின் துணை இயக்குநர் தங்கமுனியசாமி, கூடுதல் இயக்குநர் முருகானந்தம் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் அவர்களை ஓய்வு பெற அனுமதிக்கும் கோப்பில் கையெழுத்துப்போட்டுள்ளார் தமிழக அரசின் சுரங்கத்துறை செயலாளர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ்.
அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்திய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும், ஓய்வுபெற அனுமதிக்கவும் கனமான ஸ்வீட்ஸ் பாக்ஸ்கள் கைமாறியிருக்கிறது. ஓய்வுபெற அனுமதிக்கும் பணீந்திரரெட்டியின் கோப்பு, துறையின் அமைச்சர் துரைமுருகனின் அப்ரூவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அதிகாரிகள் தொடர்புடைய விவகாரங்களில் என்னென்ன வில்லங்கங்கள் இருக்கிறது என்பதை ஆராய்ந்துள்ள அமைச்சர் துரைமுருகன், இந்த கோப்பிற்கு அப்ரூவல் தருவாரா? தவிர்ப்பாரா? என்கிற கேள்விகள் தமிழக அரசின் கனிமவளத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தாதுமணல் கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை ஜூன் 7-ந்தேதி வரவிருப்பதால் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனின் கவனத்துக்கு இந்த விவகாரம் புகாராக சென்றுள்ளதுதான் வில்லங்கத்தின் ஹைலைட்!