மிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாள் அரசுப் பயணமாக கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி மாலை நீலகிரி மாவட்டத்தை வந்தடைந்தார். உதகை செல்லும் வழியில் குஞ்சப்பண்ணை பகுதியில் கான்வாயிலிருந்து இறங்கி சாலையில் நடந்தபடி பழங்குடி மக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார்.

stalin

பின்னர் கோத்தகிரியில் நீலகிரி மாவட்டச் செயலாளர் கே.எம்.ராஜி ஏற்பாட்டில் வரவேற்பு வழங்கப்பட்டது. வரும் 2026 தேர்தலை எதிர்கொள்வதைப் பற்றி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். மறுநாள் காலை வணிகர் சங்க மாவட்டத் தலைவர் பாரூக்கிடம் இ-பாஸ் காரணமாக வியாபாரிகள் பாதிக்கப்படுவதைப் பற்றி கேட்டறிந்தார். பின்னர் ஊட்டியில் 130 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட ஊட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வர் திறந்துவைத்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், அமைச்சர் கே.என்.நேரு, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஊட்டி கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் 727 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்து, புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டி, 102 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் .

Advertisment

விழாவில் பேசிய முதல்வர், "மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி 9.69% வளர்ச்சியுடன் நாட்டிலே அதிக வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் பெஸ்ட் பொருளாதார வளர்ச்சிவிகிதம் இதுதான். தமிழகம் டாப் கியரில் போகிறது'' எனச் சுட்டிக்கட்டினார்.

ss

மேலும், "தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க சதி நடக்கின்றது. தொகுதி மறுவரை என்ற பெயரில் மிகப்பெரிய சதி நடக்கவுள்ளதை முதன்முதலில் உணர்ந்து மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தமிழகம். இந்த சதியை தடுக்கும்விதமாக நாடு முழுவதும் கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து அந்தக் குழு சார்பில் பிரதமரைச் சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்திய மாநிலங்களின் தொகுதி சதவீதம் குறையாது என்ற உறுதிமொழியை தமிழக மண்ணில்நின்று பிரதமர் வழங்க வேண்டும். அதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றவேண்டும். புதுச்சேரியுடன் சேர்ந்து 40 எம்.பி.க்கள் இருக்கும்போதே தமிழகத்தின் குரலை நாடாளு மன்றத்தில் நசுக்குகின்றனர். இந்த எண்ணிக்கை யும் குறைந்தால் தமிழகத்தையே ஒழித்து விடுவார்கள். அனைத்து எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஜனநாயகத்திற்கு விரோதமாக வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளனர்.

Advertisment

மக்களவையில் ஆ.ராசா, மாநிலங்களவை யில் திருச்சி சிவா இம்மசோதாவை எதிர்த்து உணர்ச்சிப்பூர்வமாக பேசினர். நாங்கள் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட அன்று காலையிலே சட்டப்பேரவையில் கருப்புப் பட்டை அணிந்துவந்து எதிர்ப்பைப் பதிவு செய்தோம். வக்ஃபு திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர் வோம்'' என்று அறிவித்தார்.

ss

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு நிராகரித்துள்ளது. இதில் அடுத்தகட்ட சட்ட, அரசியல் நடவடிக்கை களை தீர்மானிக்க, வரும் 9-ஆம் தேதி அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டவுள்ளேன். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வு அச்சத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு தி.மு.க.வை குற்றம்சாட்டி அறிக்கை விடுகிறார்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வு வந்ததா? கலைஞர் முதல்வராக இருந்தவரை நீட் இல்லை, ஏன் ஜெயலலிதா இருந்தவரைகூட நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை! அவர் மறைவுக்குப் பிறகுதான் ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பா.ஜ.க.வின் பாதம் தாங்கிகளாக இருந்துகொண்டு நீட் தேர்வை அனுமதித்தனர். நான் இப்போது கேட்பது நீங்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தபோதும், கூட்டணியாக தேர்தலில் சந்தித்தபோதும் நீட் விலக்கு வேண்டும் என்று நீங்கள் ஏன் பா.ஜ.க.விடம் நிபந்தனை விதிக்கவில்லை.?

எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக மாணவர்கள் மேல் துளியாவது அக்கறை இருந்தால், பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு போவதற்கு முன்னாள் நீட் விலக்கு தந்தால்தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா?'' என்று சவால்விட்டார்.

"தமிழ்நாட்டை எத்தகைய அரசியல் சூழ்ச்சிகளும் வீழ்த்திடமுடியாது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வீழ்த்தவும் விடமாட்டான். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்'' என்ற சூளுரையுடன் தன் பேச்சை நிறைவுசெய்தார். -அரவிந்த்