வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு வருவாயை ஈட்டிவரும் பத்திரப் பதிவுத் துறையில், இதுவரை நடக்காத அளவுக்கு கிடுக்கிப்பிடிகளும் அதிகரித்து வருவதால் அரண்டுபோயிருக்கின்றனர் பதிவுத்துறை அலுவலர்கள்.
நிலமோசடியைத் தடுப்பதற்காக 2011-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 36 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், அவை சரிவரச் செயல்படவில்லையென புகார்கள் எழுந்த நிலையில், தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் போலி பத்திரப்பதிவுகளை ரத்துசெய்யும் நடைமுறை செயல்படுத்தப்படும் என உறுதியளித்திருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
அதன்படி, மோசடி மற்றும் போலி பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் மத்திய பதிவுச்சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், பதிவாளரே போலிப் பதிவுகள் குறித்து ஆய்வுசெய்து அவற்றை ரத்து செய்யமுடியும். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே ஆய்வுசெய்யப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கும் அனுப்பப்பட, அந்த சட்டத்திற்கு சமீபத்தில் ஒப்புதலளித்தார் ஜனாதிபதி. இதன்மூலம் கடந்த மாதம் 28-ஆம் தேதி முழுமையாக அமலுக்கு வந்தது அந்த சட்டம்.
இச்சட்டப்படி, பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ ரத்து செய்யலாம். பதிவுத்துறைத் தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு. பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப் பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்து செய்யப் பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவுத்துறைத் தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். அதற்கு மேல், பதிவுத்துறைத் தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் அதுவரை வந்திருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக் களை விசாரணை செய்து அவற்றை ரத்துசெய்யும் நடை முறையையும் சட்டம் அமுலுக்கு வந்த அதே நாளில் துவங்கி வைத்தார் ஸ்டாலின்.
அதனடிப்படையில், அங்கீகாரமற்ற மனைப்பதிவுகள், போலி பத்திரப்பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டார் தமிழக பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சரான மூர்த்தி. அப்போது, தேனி மாவட்டத்தில் ஏராளமான அரசு நிலங்கள் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக புகார் எழவே, அதுகுறித்து அதிகாரிகள்ஆய்வு செய்தனர். இந்நிலையில், ‘வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சிலர் வீடுகள் கட்ட நில வரைபட அனுமதியை பேரூராட்சி நிர்வாகத்திடம் பெறவில்லை. இதனால் பேரூராட்சிக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலத்தை புஞ்சை என சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். முறைகேடாக பத்திரம் பதிந்ததால் பிளாட்களை வாங்கியோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அங்கீகாரம் இல்லாத பிளாட்களை பதிவுத்துறை சட்டப்படி பதிவுசெய்யக்கூடாது. இதை மீறி சில மூன்றாம் நபர்கள் பயனடை யும் நோக்கில் தேனி சார்பதிவாளர் உஷாராணி செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க பதிவுத்துறைத் தலைவருக்கு உத்தர விடவேண்டும்’ என தேனி பழநிசெட்டிய பட்டி சரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடவே, அதனடிப்படையில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்தான் பதிவுத்துறை அலுவலர் கள் மத்தியில் பதட்டத்தை பரவச் செய்துள்ளது.
இதுகுறித்து பதிவுத்துறையின் தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி கள் சிலரிடம் பேசியபோது, "2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் மட்டும் கிட்டத் தட்ட 31,625 அங்கீகாரமில்லாத லே-அவுட்டுகள் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தெரிய வந்தது. அதன் அடிப் படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 7 பேர் சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 123 அலுவலர்களுக்கு ‘மெமோ’ கொடுக்கப் பட்டுள்ளதோடு 6 பேருக்கு துறை ரீதியிலான தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல, கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 செப்டம்பர் 30 வரை திருநெல்வேலி மண்டலத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் பல புகார்கள் வந்துள்ள நிலையில், அங்குள்ள 85 சார்பதிவாளர் அலுவலகங் களிலும் அக்டோபர் 20-ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு சிறப்பு தணிக்கை செய்து அதன் அறிக்கையை அனுப்புமாறு சர்க்குலர் அனுப்பியுள்ளார் பதிவுத்துறை தலைவர் சிவனருள்''’என்றனர்.
முதலில் தேனி, அடுத்து நெல்லை என தமிழகம் முழுக்க நடக்கவிருக்கும் தணிக்கை அதிரடிகளால் ஆடிப்போயிருக்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.