ந்த சாலை வளைவை நெருங்கினாலே, திகிலில் உறைந்து விடுகிறார்கள் ஏரியாவாசிகள். காரணம், உயிர்ப்பலி வாங்கிக் கொண்டிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத மரணம். அண்மையில் மட்டும் 17 முறை பெரிய அளவிலான விபத்துக்கள் அரங்கேறிய தால், அந்தச் சாலைப் பகுதியே, மணல் கொட்டி மறைத்த போதும், ரத்தக் கறை படிந்து காட்சியளிக்கிறது.

மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில், மதுரை எல்லை முடியும் இடத்தில் ஆரல் சூரான் பட்டி விலக்கு என ஒரு ஜிக்ஜாக் வளைவு இருக்கிறது. அதுதான் எல்லோரையும் நடுங்கவைக்கிறது. நாம் அந்தப் பகுதிக்குச் சென்ற போது, நம் வண்டிக்கு முன்னால் சென்ற கார், கொஞ்சம் வேகமாக விலகிச் சென்று, நடுவில் இருந்த சென்டர்மீடியனில் மோத, நம் கண் எதிரிலேயே டிரைவர் தூக்கி வீசப் பட்டார். உள்ளே இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். அடுத்த நிமிடம், அந்தப் பகுதியே அலறல் சத்தத்தால் நடுங்கியது. புளியங்குளம், ஆரல்வாய் விலக்கு என சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்த மக்கள், ஓடிவந்து விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ, அங்கிருந்த செக்போஸ்டில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் ஜெயமணி, காரில் அடிபட்டவர்களுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தார்.

road

அடிபட்ட அனைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர் நம்மிடம்... "இங்க அடிக்கடி ஆக்சிடண்ட் நடக்குது. பல உயிர்கள் பறிபோறதை என் கண்ணால் பார்த்திருக்கேன். என்னால் இங்கு நிம்மதியா வேலையே பார்க்க முடியலை. ஒவ்வொரு நாளும் இன்னைக்கி என்ன நடக்குமோ?ங்கிற பதட்டத்தோடுதான் இங்கு வர்றேன். ரோட்டின் அமைப்பு இங்கே வித்தியாசமா இருக்கு. வலது பக்கம் இடம் அதிகம் விட்டு சென்டர் மீடியன் போட்டிருக்காங்க. இந்த ரோட்டை ஒட்டியே அருகில் இருக்கும் கிராமங்களுக்கு செல்லும் சர்வீஸ் ரோடு போகுது. அங்கிருந்து வருபவர்களும் ரோட்டை கிராஸ் பண்ணிதான் செல்லமுடியும். அதே போல் எதிர்புறத்திலும், சென்டர்மீடியன் குழப்பத்தால், வர்றவங்க திகைக்கிறாங்க. இதுதான் விபத்துக்குக் காரணம்னு நினைக்கிறேன்''”என்றார் கவலையோடு.

Advertisment

விருதுநகர் வணிகர் சங்க தலைவர் செல்வமோ, "இது மிக அபாயகரமான வளைவு. இங்கே சென்டர்மீடியனை காண்ட்ராக்ட் ஆட்கள் அலட்சியமா அமைத்ததால்தான் விபத்து நடக்குது. இதை சரி செய்யாட்டி, இன்னும் பல உயிர்களை இழக்க வேண்டிவரும்''”என்றார் கலக்கமாய். அங்கிருந்த ஊர் பெரியவர் கருப்பையா நம்மிடம், "இது நான்கு ஊர்களை இணைக்கும் இடம். இந்த விலக்குல முக்குல முனியசாமி இருக்குது. ரோடு போடும்போது, இங்க இருந்த ஒரு நடுகல்லை புல்டோசர் வச்சு எடுத்துட்டாங்க. அதனால்தான் அது அப்பாவி உயிர்களைக் காவு வாங்குது. முறையா பூசை, பரிகாரமெல்லாம் செஞ்சா எல்லாம் சரியாயிடும்''’என்றார், இந்த இடத்தை நோக்கி கை கூப்பியபடியே.

அந்த மரண வளைவை சரி செய்ய, அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் இறங்கவேண்டும்.

Advertisment