இரண்டு வாரங்களுக்கு முன்பு இலங்கை நாடாளுமன்றத்தில் கொழும்பு துறைமுக நகர மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறப்பு பொருளாதார மண்டலமாக உருவாகவிருக்கும் கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கு தாரை வார்த்துள்ளனர் ராஜபக்சே சகோதரர்கள்.
இதனை கடுமையாக எதிர்க்கும் இலங்கையின் எதிர்க்கட்சிகள், ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீன தேசத்துக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். இலங்கையில் ஏற்கனவே சீனாவின் ஆதிக்கம் அதிகரித் திருக்கும் நிலையில், புதிய சட்ட மசோதா மூலம் அதன் ஆதிக்கம் விரிவடையும் என்று கவலையுடன் விமர்சிக்கின்றனர்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "இந்த சட்ட திருத்த மசோதாவின் மூலம் இலங்கைக்குள் சீன தேசத்தின் ஒரு பெரிய மாகாணம் உருவெடுக்கவிருக்கிறது. அடுத்த 20 ஆண்டுகளில் இலங்கையை முழுமையாக கபளீகரம் செய்ய திட்டமிட்டுள்ள சீனா, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நிற்கும்'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இது குறித்து கொழும்பு பத்திரிகையாளர்களிடம் விசாரித்தபோது,”"இந்த சிறப்பு பொருளாதார கொழும்பு துறைமுக நகர திட்டத்தை 2014-ல் அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே கொண்டுவந்தார். இதற்கான ஒப்பந்தத்தில் மகிந்தாவும் சீன அதிபர் ஜின்பிங்கும் கையெழுத்திட்டனர். கொழும்பு துறைமுக நகரத்தை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 10,000 கோடி (1.5.பில்லியன் டாலர்) ரூபாயில் உருவாக்க தீர்மானித்தது சீனா. இந்த திட்டத்திற்காக, 600 ஏக்கர் கடல் வழி பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2015-ல் வந்த பொதுத்தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்து மைத்ரிபால சிறிசேன அதிபராக வந்தார். சீனாவிடம் வாங்கிய கடன் தொகைக்கு வட்டி கட்டக்கூட முடியாமல் திணறியது இலங்கை. இதனால் அம்பாந்தோட்ட துறை முகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைத்தார் மைத்ரிபால சிறிசேன. மேலும், துறைமுகத்தைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பையும் சீனாவிற்கு தாரைவார்த்தனர். இதற்கு பிரதிபலனாக 1 பில்லியன் அமெரிக்கன் டாலரை கடனாக அளித்தது சீனா.
கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சேவும், பிரதமர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவும் ஜெயித்தனர். இலங்கையின் பொருளாதாரச் சரிவு 70 சதவீதத்தை கடந்து திணறியது. கடனுக்கான வட்டி கட்டவே முடியவில்லை. கொரோனா ஏற்படுத்திய தாக்கமும் அதிகம். சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சீனா விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட ராஜபக்சே, இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைச் செய்து, இந்த துறைமுக சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார். முதலீடுகள் தொடர்பாக 21 சட்ட ஷரத்து களிலிருந்து சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாடு களை கொண்டுள்ளது இந்த மசோதா.
"இந்த திட்டத்தின் மூலம் தெற்காசியாவின் வர்த்தக நகராக இலங்கை மாறும்' என்கிறார் மகிந்த ராஜபக்சே. அனைத்து விதமான பல்வேறு நவீன சர்வதேச வசதிகளுடன் உருவாகும் இந்த நகரத்தில் சீனாவின் சட்டதிட்டங்களே கோலோச்சும். கொழும்புவின் மையப்பகுதியை 99 ஆண்டுகளுக்கு சீனாவிடம் இலங்கை அரசு அடகு வைத்திருப்பது, "இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கும்'‘’என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
சட்டமசோதா நிறைவேற்றப்பட்ட இரண்டாவது நாளிலிருந்தே தனது திட்டப்பணி களுக்கான முதலீடுகளை ஈர்க்கத் துவக்கிவிட்டது சீனா. தான் உருவாக்கும் பிரமாண்டமான நகரத்தில் தமிழ் மொழிக்கு இடமில்லை என சிங்களத்தையும் சீனத்தையும் மட்டுமே அறிவிப்புப் பலகைகளில் இடம்பெறச் செய்திருக்கிறது. ஆளும் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் சீனாவின் தமிழ் மொழி அழிப்பினையும் புறக்கணிப்பையும் ஏற்கமுடியாது என ராஜபக்சேவிடம் சுட்டிக்காட்டியிருக்கிறார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் துணைத்தலைவர் செந்தில் தொண்டமான்.
அவரை தொடர்பு கொண்டு நாம் பேசியபோது,’"இலங்கையில் சிங்களமும் தமிழும் தேசிய மொழியாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் அலுவல் மொழியாகவும் இருக்கிறது. உத்யோகப்பூர்வ மொழியான தமிழ் புறக்கணிப்படுவதை எங்களால் ஏற்கமுடியாது. இது குறித்து சீன அரசாங்கத்திற்கு உத்தரவிட வேண்டும் என்பதையும் அழுத்தமாக பிரதமரிடம் வலியுறுத்தினோம்.
அதனை ஏற்றுக்கொண்ட பிரதமர், உடனே, "துறைமுக நகரத் திட்டம் நிதித்துறையின் ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மூலமாக மும்மொழிகளையும் கடைபிடிக்க வேண்டும் என உரிய தரப்பினரை வலியுறுத்துவதாக உறுதி யளித்தார். அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை யில், தமிழ் மொழியில்லாமல் எழுதப்பட்ட அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டன. இலங்கைக்குள் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வரும் எந்த ஒரு நாடும் தமிழைப் புறக்கணித்தால் நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்''‘என எச்சரிக்கிறார் செந்தில் தொண்டமான்.
சீனாவின் ஆதிக்கம் குறித்து தி.மு.க.வின் செய்தித் தொடர்பு செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ் ணனிடம் விவாதித்த போது, "ஏற்கனவே, இந்தியாவின் வட கிழக்கில் சீனாவும், வட மேற்கில் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தென்பகுதியான இந்துமகா சமுத்திரத்திலிருக்கும் இலங்கை யில் நிலைகொள்வதன் மூலம் இந்தியாவைச் சுற்றி வலைப் பின்னலை உருவாக்குகிறது சீனா.
இலங்கைக்கு அதிகமாக கடன் கொடுத்து ஏற்கனவே அம்பாந்தோட்டை துறை முகத்தை சீனா கைப்பற்றி விட்டது. இப்போது கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் மூலம் முக்கிய நிலப்பரப்புகளை தாரை வார்த்திருக்கிறார் ராஜபக்சே. இதன்மூலம் இந்தியப் பெருங்கடலில் சீன மயமாக்கலின் நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும். இலங்கையின் தென் முனையிலுள்ள அம்பாந்தோட்டம் துறைமுகத்தில் பல ஆயிரம் கப்பல்களை கையாள முடியும். அந்த துறைமுகத்தையொட்டியும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 269 ஹெக்டேர் நிலப்பரப்பையும் சீனாவுக்கு கொடுத்துள்ளது இலங்கை. இதன் வழியாக தனது கனவுத் திட்டமான புதிய பட்டுப்பாதை திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஆப்ரிக்கா, ஐரோப்பா, லத்தின் அமெரிக்க நாடுகளுக்கிடையிலான சாலைகளையும் துறைமுகங்களையும் இணைக்கும் முயற்சியில் உள்ளது சீனா. அப்பந்தோட்ட துறைமுகம்தான் இந்த திட்டத்தின் மையப் புள்ளியாக இருக்குமென்பதால் இங்கு கப்பற்படைதளத்தை அமைக்கவும் சீனா திட்டமிடுகிறது. ஏற்கனவே போர்க்கப்பல்கள் இங்கு நடமாடுவதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியிலிருந்து 290 கிலோ மீட்டர் தொலைவில் உருவாகும் சீனாவின் கொழும்பு துறைமுகத்தில் உருவாகும் சீனாவின் கப்பல் படைத்தளம் தமிழ்நாடு மற்றும் கேரளத்திற்கு மிகப்பெரிய ஆபத்துகளை எதிர்காலத்தில் உருவாக்கலாம். ராமேஸ்வரத்திற்கு அருகேயும், கச்சதீவுக்கு பக்கத்திலும் உள்ள இலங்கையின் 3 தீவுகளை தனது மின் உற்பத்தி திட்டங்களுக்காக சீனா ஏற்கனவே கைப்பற்றி யுள்ளது. திரிகோணமலையிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.
தமிழீழ இன அழிப்புக் குற்றங்களிலிருந்து தப்பிக்க, சர்வதேச அரசியலில் சீனாவின் தயவும் உதவியும் ராஜபக்சேக்களுக்குத் தேவை. அதனாலேயே சீனாவின் திட்டங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது இலங்கை. இதனை உணர்ந்து இந்திய அரசு எதிர்வினையாற்ற வேண்டும். தமிழக அரசும் கேரள அரசும் இதனைப் புரிந்துகொள்ளும் என நினைக்கிறேன்'' என்கிறார் மிக அழுத்தமாக.
ஸ்வீடனிலுள்ள சர்வதேச அரசியல் ஆய்வாளர் முனைவர் விஜய் அசோகனிடம் நாம் பேசிய போது,”"இலங்கைத் தீவில் தற்போது நிகழ்ந்து வரும் சீனாவின் ஆதிக்கம் குறித்து தமிழ்நாடு, தமிழீழம், சிங்களம் என மூன்று கோணங்களில் ஆராய வேண்டியதிருக்கிறது. இன்றைய சூழலில், சீனாவின் ஆதிக்கம் தமிழ் நாட்டிற்கு உடனடியாக எந்த தீமையையும் ஏற்படுத்திடாது. தற்சமயம் இலங்கைக்குள் நடந்துவருவதை அவதானிக்கும்போது, சிங்கள தேசத்தின் இறையாண்மை அரசியல் போராட் டங்களிலும் பொருளாதாரச் சிக்கல்களிலும் அவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அது, அவர்களின் பிரச்சனை. சர்வதேச நாடுகளின் உதவியுடன் தமிழீழ இன அழிப்பை நடத்த ஆடிய ஆட்டத்தின் விளைவு, ஏதோ ஒரு நாட்டின் புவிசார் அரசியலுக்குள் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இலங்கை. அதன்படி, சீனாவின் பக்கம் சாய்ந்திருக்கிறார்கள் ராஜபக்சேக்கள்'' என்கிறார்.
இந்தச் சூழலில், இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கத்தால் இந்தியா எதிர்கொள்ள விருக்கும் ஆபத்துகளை விவரித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான வைகோ, "ஐ.நா.வின் மேற்பார்வையில் தமிழீழ தேசத்தை உருவாக்க உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பினை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்துள்ளார்.
எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் இந்திய ஒன்றிய அரசுக்கு சீனா மூலம் சவால் விட்டுள்ளனர் ராஜபக்சே சகோதரர்கள்.