பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக உள்ளவர் சத்யா பன்னீர்செல்வம். இவரது கணவர் பன்னீர்செல்வம், முன்னாள் நகர் மன்ற தலைவராக இருந்தவர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில், பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுவதற்குக் கட்சித் தலைமையிடம் சீட்டு கேட்டார். கட்சித் தலைமை, அவரது மனைவி சத்யாவிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. அவரும் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றார்.
ஆரம்பம் முதலே எம்.எல்.ஏ. தரப்பிற்கும், இதே தொகுதிக்காரரான அமைச்சர் சம்பத் தரப்பிற்கும் ஒத்துவரவில்லை. எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் எம்.எல்.ஏ. பாண்டியன், மேற்கு மாவட்டச் செயலாளர் அருள்மொழித்தேவன் இவர்கள் ஒரு அணியாகவும், அமைச்சர் சம்பத் தரப்பு ஒரு அணியாகவும், இரு பிரிவாகக் கடந்த 5 ஆண்டுகளாக முட்டலும்மோதலுமாகச் செயல்பட்டுவந்தனர்.
இந்த நிலையில், நடந்துமுடிந்த தேர்தலில் எப்படியும் மீண்டும் தங்களுக்கே போட்டியிடும் வாய்ப்பு கிடைக்குமென்று எம்.எல்.ஏ. சத்யா தரப்பு நம்பிக்கையோடு, தொகுதியில் தாராளமாகச் செலவு செய்துவந்தது. கோவில் புனரமைப்பு, கும்பாபிஷேகம், அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துவது எனப் பம்பரமாகச் சுழன்று வேலைபார்த்தனர். ஆனால், குறிஞ்சிப்பாடி முன்னாள் எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரனுக்கு கட்சித்தலைமை சீட்டு கொடுத்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா தரப்பு, அரசியல் துறவறம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்ததோடு, குடும்பத்தினருடன் கோவில் கோவிலாக வழிபாடு செய்யப் புறப்பட்டுவிட்டனர். தேர்தல் முடியும்வரை தொகுதிக்குள் வரவேயில்லை. தேர்தல் முடிந்தபின்னர், கடந்த 10ஆம் தேதி, பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ. சத்யா, அவரது கணவர் பன்னீர்செல்வம், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பெருமாள், அண்ணா கிராமம் ஒன்றியச் செய லாளர் மார்ட்டின் லூயிஸ், பாபுநெல்லிக்குப்பம் நகரச் செயலாளர் சௌந்தர், வீரப்பெருமாநல்லூர் கூட்டுறவு சங்கத் தலைவர் ராம்குமார் ஆகியோர், கட்சிக் கட்டுப் பாட்டை மீறி, எதிர்த்தரப்புக்குச் சாதகமாகத் தேர்தல் வேலை பார்த்ததாகக்கூறி, கட்சியி லிருந்தே நீக்கியது தலைமை.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம், ""நாங்கள் தேர்தல் முடியும் வரை ஊரிலேயே இல்லை. அப்படியிருக்க அ.தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக வேலை செய்ததாக, அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறிக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள். அமைச்சர் சம்பத்தும், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனுமே இதற்குக் காரணம்'' என்று கொந்தளித்தனர். பண்ருட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செய்தி, மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் தரப்போ, ""சத்யா என்ற பெயர் வைத்ததே எம்.ஜி.ஆர். தான். நாங்கள், அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லக் கடுமையாக உழைத்ததால், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மீண்டும் கிடைக்குமென்று எதிர்பார்த்தோம். இங்கு போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரன், மரியாதைக்காகக்கூட எங்களிடம் பேசவுமில்லை, எங்கள் ஒத்துழைப்பைக் கேட்கவுமில்லை. இதனால் அரசியல் துறவறத்தை அறிவித்து, கோவில்கோவிலாகச் சுற்றிக்கொண்டிருந்த நாங்கள், கட்சி வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்டதாகக்கூறி கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளனர். சொரத்தூர் ராஜேந்திரனும், சம்பத்தும் சேர்ந்து எங்களுக்கெதிராகச் சதிசெய்ததே இதற்குக் காரணம். நாங்கள் இப்பவும் அ.தி.மு.க. தான்"" என்றனர்.
சொரத்தூர் ராஜேந்திரனோ, ""சிட்டிங் எம்.எல்.ஏ.வான சத்யாவையும், அவரது கணவரையும் சந்தித்து ஆதரவு கேட்கப் பல முறை முயன்றும் சந்திக்க மறுத்ததால் அதுகுறித்து கட்சித்தலைமையிடம் எடுத்துக் கூறப்பட்டது'' என்று மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.
இதுகுறித்து விசாரிக்க அமைச்சர் சம்பத்தைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. "உண்மையில் என்ன நடந்தது என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும் என்கிறார்கள்' அ,தி.மு.க. தொண்டர்கள்.