நெட்ஃபிளிக்ஸில் நவரசா
கொரோனா ஊரடங்கு காரணமாக கடும் நெருக்கடி யைச் சந்தித்துள்ள திரைத்துறைக்கு நிதி திரட்டும் நோக்கோடு இயக்குநர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து 'நவரசா' என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ், கௌதம் மேனன், பிரியதர்ஷன், கார்த்திக் நரேன் உட்பட 9 இயக்குநர்கள் இயக்க, சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, சித்தார்த், பிரகாஷ் ராஜ், அதர்வா, பார்வதி, ரம்யா நம்பீசன், அதிதி பாலன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இத்தொடர், மனிதர்களின் ஒன்பது வகை உணர்வுகளை வெளிக்காட்டும் ஒன்பது குறும்படங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில், எந்தெந்த கதையில் யார் நடிக்கிறார்கள் என்ற விவரமும், அந்த ஒன்பது குறும்படங்களின் தலைப்புகளும் அண்மையில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் ரிலீஸுக்கான எதிர்பார்ப்பை ஏற்றியது. இந்நிலையில், இத்தொடர், ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளதாக நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அம்மணி அட்வைஸ்!
"பெட்ரோல்-டீசல் விலை உயர்வு பற்றி கவலைப்படாதீங்க எல்லாரும் சைக்கிள் ஒட்டி பழகுங்க. உடம்பு ஸ்லிம்மாயிடும்'' என ஃபிட்னஸ் அட்வைஸ் தந்துள்ளார் நடிகை சன்னி லியோன். எல்லாரும் ஓட்டுங்க... சைக்கிளை!
ப்ரைமில் சார்பட்டா
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2018ஆம் ஆண்டு ‘காலா’ வெளியான பின்பு, தயாரிப்பில் கவனம் செலுத்திவந்த பா.ரஞ்சித், ஒரு சிறிய பிரேக் எடுத்து இயக்கியுள்ள இப்படம், வடசென்னை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை போட்டியைக் கதைக்களமாகக் கொண்டது. ஆர்யா, துஷாரா, கலையரசன், ஜான் விஜய் எனப் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாகத் தடைப்பட்டிருந்த ‘சார்பட்டா பரம்பரை’ இறுதிக்கட்ட பணிகள் தற்போது கிட்டத்தட்ட முடிந்துள்ள சூழலில், இத்திரைப்படம் வரும் ஜூலை 22ஆம் தேதி நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'டெடி' படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இப்படமும் தற்போது நேரடியாக ஓடிடி-யில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்-அப் with சிவக்குமார்
அஜித், அருண் விஜய், பரத் என தமிழ் சினிமாவின் பல முன்னணி நாயகர்களுடன் பல படங்களில் ஃபிட்னஸ் ட்ரைனராக பணியாற்றியவர் சிவக்குமார். நடிகர் ஆகும் ஆசையில் திரைத்துறைக்குள் நுழைந்து, இன்று பல முன்னணி நடிகர்களுக்கு ஆஸ்தான ட்ரைனராக மாறியுள்ள அவரது திரைத்துறை அனுபவங்கள் பற்றி அவருடன் பேசினோம். அந்த உரையாடலின் ஒரு பகுதியாக நடிகர் அஜித் உடன் ஆரம்பம், வீரம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அனுபவம் குறித்தும், அஜித்தின் உடற்பயிற்சி வழக்கங்கள் குறித்தும் கேட்டோம்.
அதற்கு பதிலளித்த அவர், "ஒரு ஃபைட்டரா அவரோட வலியும் கஷ்டமும் எனக்கு நல்லா தெரியும். அவருக்கு எவ்வளவு இன்ஜுரிஸ் ஆகியிருக்குன்னு தெரியும். அவர் அளவுக்கு அடிபட்டவங்க நிக்கிறதே கஷ்டம். வீரம், ஆரம்பம், வேதாளம் இந்த மாதிரி நான் பண்ண படங்கள்லேயே இதுக்காக அவ்ளோ ஒர்க் பண்ணாரு. அவர் ஒரு கடின உழைப்பாளி. நான் அவருக்கு ட்ரைனரா இருந்தப்ப, அவர் எவ்ளோ கஷ்டப்பட்டு உழைச்சிருக்காருன்னு பக்கத்தில் இருந்து பார்த்தேன். நார்மலா அவர் ட்ரெட்மில் எல்லாம் யூஸ் பண்ண மாட்டார். ரோடு வாக் அப்படி இல்லன்னா சைக்கிளிங்... இதுதான் பண்ணுவார். ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில நாங்க இருந்தப்போ கூட, அவர் தினமும் நடப்பார். என்னால கூட அவ்வளவு தூரம் நடக்க முடியாது. ஆனால், அவர் கண்டினியூவா வாக்கிங் போவார். ரெண்டு மணிநேரம் வரைக்குமெல்லாம் கூட நாங்க நடப்போம். அவ்வளவு வலி இருந்தாலும், வாக்கிங் போவார். ஒர்க்அவுட் பண்ண மெஷின் எதுவும் யூஸ் பண்ண மாட்டார். "ட்ரெட்மில் யூஸ் பண்ணா முதுகெல்லாம் சஃபர் ஆகும், அதனால் வேண்டாம்" அப்டின்னு சொல்லிடுவார். ஃபேமிலி விஷயங்களெல்லாம் கேப்பாரு. உள்ள வந்ததுமே "எல்லாம் ஓகே தானே, ஒன்னும் பிரச்சனை இல்லையே, ஒர்க்அவுட் போலாமா'' அப்படின்னு தினமும் கேட்டுட்டுதான் வேலையை ஆரம்பிப்பார். நான் அவர் கூட ஒர்க் பண்ண நாலு வருஷத்துல ஒரு நாள் கூட அவர் இத கேக்காம இருந்ததில்லை. அதுவே பழக்கமாகி, நானும் என் கிளெய்ன்ட்ஸ் எல்லாரையும் கேக்க ஆரம்பிச்சுட்டேன்" என்றார். அதேபோல, விஜய்யின் உடற்பயிற்சி வழக்கங்கள் குறித்து கேட்டபோது, அவருடன் பணியாற்ற முயற்சித்து வருவதாக கூறியதோடு, விஜய் கார்டியோ சம்பந்தமான உடற்பயிற்சி களை தொடர்ந்து செய்வதாக கேள்விப்பட்டதாகவும் கூறினார்.