என்னதான் அரசும், அரசுத்துறை நிர்வாகமும் தீவிரக் கண்காணிப்பில் இருந்த போதும், அவற்றை மீறி ஆங்காங்கே ஆன்லைன் சூதாட்டமும், லாட்டரி விற்பனையும் மக்களை இழுத்தபடியேதான் இருக்கின்றன. ஈரோட்டைச் சேர்ந்த நூல் வியாபாரி, ஆன் லைன் லாட்டரியில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்ததாக வீடியோவில் பதிவிட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒராண்டுக்கு முன்பே ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக சசிமோகன் வந்த பிறகு லாட்டரிச் சீட்டை ஒழிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். சென்ற ஜூன் முதல் தற்போதுவரை, தடை செய்யப் பட்ட மற்றும் ஆன்லைன் லாட் டரி விற்பனை தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 215 நபர்கள் கைது செய்யப் பட்டனர். இப்படி எஸ்.பி. மிகவும் கறாராக இருந்த போதும் சில இடங்களில் மறைமுகமாக லாட்டரிச் சீட்டு விற்பனை வாட்ஸ்-ஆப் மூலமாக நடந்துவந்துள்ளது.
ஈரோடு எல்லப்பாளையம், முல்லை நகரைச் சேர்ந்தவர் 54 வயது ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு திவ்யபாரதி, ஆனந்தி என்ற இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் திவ்யபாரதியின் கணவர் இறந்ததால் தனது பெற்றோ ருடன் வசித்து வருகிறார். ஆனந்தி குமாரபாளையத்தில் உள்ள கணவருடன் வசித்து வருகிறார். ராதாகிருஷ்ணன் முதலில் சொந்தமாக தறிப் பட்டறை நடத்தி வந்தார். அந்தத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நூல் கமிஷன் ஏஜென்டாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் தான் ராதாகிருஷ் ணன், 13-ம் தேதி மாலை வாட்ஸ்-ஆப் வீடியோவில் "நான் ஆன்லைன் லாட்டரிச் சீட்டை நம்பி 62 லட்சம் ரூபாய்வரை இழந்துவிட்டேன். இனிமேலும் உயிரோடிருந்தால் அதற்கு மேலும் அடிமையாகி விடுவேன். அதனால் நான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்'' என்றும், அந்த லாட்டரி ஏஜென்ட் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்றும் பதிந்த பின், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்திவருகின்றனர்.
"தற்கொலை செய்து கொண்ட ராதாகிருஷ்ணன், 62 லட்சத்தை எந்த காலகட்டத்தில், எவ்வாறு இழந்தார் என்பதற் கான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இப்போது முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன? தற்கொலைக்குத் தூண்டிய நபர் யார் என் பதை புலன் விசாரணை செய்துவருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் எவ்வித சட்டவிரோத செயல் களுக்கும் இடமில்லை. தொடர் கண்காணிப்புடன் மிகக்கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அரசு உத்தரவுப்படி, குற்றச்செயலில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும்'' என உறுதியுடன் தெரிவித்தார் மாவட்ட எஸ்.பி. சசி மோகன்.