நெல்லை மாவட்டத்தின் களக்காடு பக்கமுள்ள சிங்கிகுளம் கிராமத்தை ஒட்டிய மலைப்பகுதியில் கடந்த சில நாட் களாகவே மர்ம நபர்களின் நடமாட்டமிருப்பதாகவும், அவர்கள் வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருக்கிறார்கள் எனவும், கடந்த 10-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரான மணிவண்ணனுக்குத் தகவல் போயிருக்கிறது.
எஸ்.பி. ஆபீஸோடு தொடர்புடைய களக்காடு ஸ்டேஷனுக்குத் தகவல் பறக்க, போலீஸ் படையுடன் ஸ்பாட் டுக்குப் பறந்த இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷின் படை, இரவில் அந்த மலைப் பகுதியின் பொத்தையடியைச் சலித்தெடுத்ததில், பதுங்கி யிருந்த சிலர் போலீஸ் படையைக் கண்டு தப்பி ஓட்டமெடுத்தனர். சேஸ்பண்ணிய போலீசாரிடம் நான்குபேர் சிக்க... அவர்கள் பதுக்கிவைத்திருந்த வெடிகுண்டுகள், அரிவாள்களோடு அவர்களை அப்படியே அள்ளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
நாங்குநேரி, விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த இளம் கூலிப்படையான இவர்கள், போலீசாரின் கவனிப்பில் முத்துமனோ, சந்திரசேகர், பொத்தையடியின் கண்ணன், மாதவன் என அடையாளம் தெரியவந்தது. காதல் விவகாரத்தில் மாணவியின் காதலனைத் தீர்த்துக்கட்ட அவளால் ஏவப்பட்டவர்கள் நாங்கள் என்று சொன்னதுதான், அத்தனை காக்கிச் சட்டை களையும் வியர்வையில் ஈரமாக்கிவிட்டது.
நெல்லை மாவட்டத்தின் பணகுடி பக்கமுள்ள புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ். அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் பயிலும் ப்ளஸ் 2 மாணவன். இவனும், இதே பள்ளியில் ப்ளஸ் 2 பயின்று வரும் மாணவியும் கடந்த இரண்டரை வருடமாக காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகம் என்றாலும், கண்ணில்லாத காதல் வெளியிலும், செல்போனிலுமாக வளர்ந்திருக்கிறது.
அதேநேரத்தில் களக்காடு பகுதியில் கடைகள் வைத்திருக்கும் வளமான வாலிபரின் நட்பு மாணவிக்குக் கிடைத்திருக்கிறது. இந்த திடீர் திருப்பத்தால் விக்னேஷ் அதிர்ச்சியடைந் தாலும் தன் செல்போனில் அவர்கள் மிகக் நெருக்கத்திலிருந்தபோது பதிவுசெய்த படங்களைக் காட்டி, தன்னைக் கைவிட்டால் இந்தப் படங்களை பகிரங்கப்படுத்திவிடுவேன் என மாணவியை மிரட்டியிருக்கிறான்.
"இவனை விட்டுவைத்தால் நம்மை வாழவிடமாட்டான்போல, தொலைத்துக் கட்ட வேறுவழி பார்க்கவேண்டியதுதான்' என்ற எண்ணத்தில், அந்த மாணவி நேராக, தனது உறவினர் வீடிருக்கும் களக்காடு பக்க முள்ள சிங்கிகுளம் கிராமத்திற்குப் போயிருக் கிறாள். தன் காதல் விஷயத்தில் நடந்தவை களைச் சொல்லி, தனது நெருங்கிய உறவின ரிடம் கண்களைக் கசக்கியவள் அவனைத் தீர்த் தால்தான் தனது வாழ்க்கை என்றிருக்கிறாளாம்.
வில்லங்கமான அவளது உறவினர், மாணவன் விக்னேஷைத் தீர்த்துக்கட்ட நாங்குநேரி மற்றும் விஜயநாராயணம் பகுதியிலுள்ள கூலிப்படையை ஏற்பாடு செய்திருக்கிறார். அவர்களின் திட்டப்படி, மாணவன் விக்னேஷை செல்லில் தொடர்பு கொண்ட மாணவி, "அன்னைக்கி ஏதோ ஒரு நெனைப்புல நா அப்புடிப் பேசிட்டேன்... பேசியிருக்கக்கூடாதுதான்' என்று இறங்கி வந்ததுடன், அவசர உதவியாக இருபத்தைந் தாயிரம் கேட்டு இரண்டு மூன்று இடங்களுக்கு வரச்சொல்லி அலைக்கழித்திருக்கிறாள். அலைக்கழிப்பிற்குப்பின் கடைசியாக பெத்தானியா மலைப்பகுதிக்குச் சென்றிருக் கிறான் விக்னேஷ்.
அவன் வந்ததைப் பார்த்த மாணவி 6 பேரைக் கொண்ட கூலிப்படையினரோடு வெளியே வந்திருக்கிறாள். "இவன்தான்... இவன் உயிரோடிருந்தால் என்னை வாழவிட மாட்டான்' என்று கத்தியவளையும் ஆயுதங்களுடன் அவள் பின்னால் நிற்கும் கூலிப்படையையும் கண்டு விதிர்விதிர்த்துப் போனான் விக்னேஷ். "மாணவியின் வழிக்கே வரமாட்டேன்' என காலில் விழுந்து திரும்பிப் பார்க்காமல் ஓடியிருக்கிறான் விக்னேஷ்.
இதையடுத்தே இவர்களின் நடமாட்டம் பற்றிய தகவல் மாவட்ட எஸ்.பி. மணி வண்ணனுக்குப் போக, நாம் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.
இதுதொடர்பாக நாம் களக்காடு இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷிடம் பேசியதில். ""இந்தக் கூலிப்படையிலுள்ள ஆறுபேரில் நான்குபேர் மட்டுமே சிக்கியுள்ளனர். தப்பிய ப்ளஸ் 2 மாணவி, தீபக்ராஜ், ஊசிபாண்டியன் மூன்றுபேரையும் வளைத்துவிடுவோம். இந்த நான்குபேர் மீதும் வழிப்பறி வழக்கிருக்கிறது. அதோடு ஒருவன்மீது கொலைவழக்கும் இருக்கு. பள்ளிப்படிப்பைத் தாண்டாத பருவத்தில் இப்படி நடந்துகொண்டிருக்கிறாள் அந்த மாணவி''’என்றார் அதிர்ச்சியாக.