டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் "கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' என்று சொல்லி விட்டு பா.ஜ.க.வை ஆட்சி யமைக்கத் தேர்ந்தெடுக்கிறார்கள். மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜ.க. 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் வென்றிருக்கிறது.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க. 45.56% வாக்குகளையும், ஆம் ஆத்மி 43.57% வாக்கு களையும் காங்கிரஸ் 6.34% வாக்குகளையும் பெற்றிருக்கின்றன.
மூன்றாவது முறையாக வென்று ஆட்சியமைப்போம் என்ற கனவிலிருந்த கெஜ்ரிவால், தான் போட்டியிட்ட தொகுதியில் பின்னடைவைச் சந்தித்த துடன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பர்வேஷ் சாஹிப்சிங்கிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறார். இதேபோல் ஆம் ஆத்மி யின் வேட்பாளர்கள் போட்டியிட்ட 13 தொகுதி களில் காங்கிரஸின் வாக்குகளை இணைத்தால் வெற்றிபெற்றிருக்க பிரகாசமான வாய்ப்புகள் இருந்ததைக் காணமுடிந்தது.
மேலும், ஆம் ஆத்மியின் முன்னாள் துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா ஜங்கபுரா தொகுதியில் வெறும் 675 வாக்குகளில் மட்டுமே தோல்வியடைந்தார். இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஃபர்கத் சூரி பெற்ற வாக்குகள் 7,350.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங் கிரஸும் ஆம் ஆத்மியும் இணைந்து போட்டி யிட்டன. இருந்தும் பா.ஜ.க.வை வெல்லமுடிய வில்லை. அதேசமயம், அரியானா தேர்தலில் சீட்டுப் பகிர்வில் இரு கட்சிகளுக்கும் கசப்பு எழுந்தது. இதனால், காங்கிரஸ் இல்லாமலே சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் முடிவையெடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் மிகப்பெரிய தவறைச் செய்திருக்கிறார்.
டெல்லியின் மதுபானக் கொள்கையின் மூலமாக தனியாரிடம் மதுபான விற்பனையை ஒப்ப டைத்து ஆம் ஆத்மி ஊழல் செய்து பணம் சேர்த்திருக்கிறது. அதன் மூலம் கிடைத்த பணத் தை கோவா தேர்தலில் செலவிட்டது என்ற பா.ஜ.க.வின் விமர்சனமும், கெஜ்ரிவாலின் ஆடம்பர வீடு குறித்த விமர்சனமும், யமுனையை ஆம் ஆத்மி சீர்கெடச் செய்துவிட்ட தென்ற விமர்சனமும் மக்களிடம் எடுபட்டிருக்கிறது என்பதையே டெல்லி தேர்தல் முடிவு காட்டுகிறது.
2013-ல் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரான ஷீலா தீக்சித்தை தோற்கடித்து ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. இன்று அரவிந்த் கெஜ்ரி வாலை புதுடெல்லி தொகுதியில் பர்வேஷ் தோற்கடித்திருக்கிறார். அதேசமயம் ஷீலா தீக்சித்தின் மகன் சந்தீப் தீக்சித் இதே தொகுதியில் பெற்ற 4,568 வாக்குகளுக்கும் கெஜ்ரிவாலின் தோல்வியை உறுதிசெய்ததில் முக்கியப் பங்குண்டு.
காங்கிரஸ் மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் 1 தொகுதியைக்கூட வெல்லாமல் தோல்வியடைந்திருக்கிறது. அதே சமயம், கடந்த தேர்தலைவிட காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரித்திருப்பது மட்டுமே ஒரே ஆறுதல். போட்டியிட்ட 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது என்கிற அவப்பெயரையும் சந்தித்திருக்கிறது.
10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியி லிருந்து டெல்லி விடுதலை அடைந்துள்ளது என்ற கோஷத்துடன் டெல்லி பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் திரண்ட பா.ஜ.க. தொண் டர்கள் வெற்றியைக் கொண்டாடினர். இரட்டை இன்ஜின் வேகத்தில் இனி டெல்லி வளர்ச்சியடையும் என்றிருக்கிறார் மோடி. கிட்டத்தட்ட டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது.
தொடக்கத்தில் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் மேற்கொண்டார். அதேசமயம் தன்னை பா.ஜ.க. எதிர்ப்பாளராகக் காட்டிக்கொண்டார் என கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட் டத்தில் கலவரக்காரர்கள் போராடி யவர்களைத் தாக்கியபோது, தனக்கு சம்பந்தமே இல்லாததுபோல ஒதுங்கிநின்றார். இன்னும் பல உதாரணங்களைச் சுட்ட முடியும். இப்போது மூலக் கட்சியின் வியூகத்துக்கு வீழ்ந்திருக்கிறார் என் கிறார்கள்.
அதேபோல, வெறும் 2 சதவிகித வாக்குகளில் வீழ்ந்ததாக ஆம் ஆத்மி நினைப்பதும் தவறு. இஸ்லாமியர்கள் வேறு வழியில்லாமல் ஆம் ஆத்மிக்கு வாக்களித் திருக்கிறார்கள். தோல்வியிலிருந்து மீள, இஸ்லாமியர்களது வாக்கு சதவிகிதத்தையும் கழித்துவிட்டுப் பார்த்தால் ஆம் ஆத்மி உண்மையாகப் பெற்ற வாக்கு சதவிகிதம் தெரியவரும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கூடவே, டெல்லி வெற்றியை பா.ஜ.க. தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு, கடந்த தேர்தலில் விழுந்த வாக்கு கள், எந்த தொகுதியில், எந்தப் பூத்துகளில் வேலைசெய்ய வேண்டும் என பூத் வாரியாக சிறுசிறு தகவல்களையும் கணக்கிட்டு வேலை செய்து வென்றிருக்கிறது என சுட்டிக்காட்டு கின்றனர்.
டெல்லியின் அரசியல் தலைமை பீடத்தில் யாரை பா.ஜ.க. தலைமை நிறுத்தப் போகிறது என்று யூகங்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன. அரவிந்த் கெஜ்ரிவாலை வென்றதற்குப் பரிசாக பர்வேஷ் சாஹிப் சிங் முதல்வராவார் என்று யூகங்கள் கிளம்புகின்றன. இவரைத் தவிர ஆஷிஷ் சூட், பவன் சர்மாவும் இந்த பட்டியலில் இருப்பதாக கட்சியின் உயர் பொறுப்பிலிருப்பவர்கள் நம்புகிறார்கள். விஜிந்தர் குப்தா, ரேகா குப்தா ஆகியோரும் பட்டியலில் உள்ளனர். அதேசமயம், டெல்லியின் முன்னாள் முதல்வர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ளார். அவரது பெயரையும் பா.ஜ.க. பரிசீலிக்கலாம் என்கிறார்கள்.