கோயில்கள் என்பவை தமிழர்களின் உணர்வோடு இரண்டறக் கலந்தவை. தமது ஆன்மிக மரபு குறித்த மௌனமான பெருமித உணர்வு தமிழர்களுக்கு எப்போதும் உண்டு. அந்நியப் படையெடுப்புகள் நடந்தபோது கோயில்களுக்கும், விக்ரகங்களுக்கும் எந்த ஆபத்தும் நேராவண்ணம் விக்ரகங்களை மண்ணில் புதைத்து வைத்தும், அதிஉயரமான மதில் சுவர் எழுப்பியும் காத்தவர்கள் நம் முன்னோர்கள்!

jaggi

"கோயில் சிலைகள் களவுபோகின்றன. கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன. அதைத் தடுத்து நிறுத்த கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறையிடம் இருந்து விடுவித்து (பக்தர்கள் என்ற பெயரில்) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும்'' என்று கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் கூறுகிறார். "தமிழ்நாட்டின் கோயில்களை, யார் நிர்வகிக்க வேண்டும் என்பதைக் கர்நாடகா விலிருந்து வந்த ஜக்கி வாசுதேவ் பேசுவதே அறமற்ற செயல்' என்பதையும் தாண்டி, அவரும், அவரைப் பின்னின்று இயக்கும் சில சக்திகளும் முன்வைக்கும் வாதத்தை அலசுவோம்.

சிலை கடத்தல்கள் நடந்திருக்கிறதுதான். ஆயினும் அவை கண்டுபிடிக்கப்பட்டதும் அறநிலையத்துறைப் பொறுப்பில் இருக்கும்போதுதான். பருத்தியூர் நடராஜர் சிலை மாற்றி வைக்கப்பட்டு அசல்சிலை வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்டது. அன்றாடம் அந்தச் சிலையைத் தொட்டு அபிஷேகம் செய்த அர்ச்சகர் அதைச் சொல்லவில்லை. ஆராய்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர்தான் (ஒரிஜினல் சிலையின் போட்டோ அவரிடம் இருந்தது.) சிலை மாற்றப்பட்டிருப்பதை அம்பலப் படுத்தினார்.

Advertisment

களவு என்பதும், களவைக் கண்டுபிடித்தல் என்பதும் காலங்காலமாக நடப்பதுதான்.

thilagavathi

பொருளாதாரக் குற்றப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் ராஜசேகரன் நாயர் இருந்தபோதும், பிரதீப் வி பிலீப் இருந்தபோதும், ராஜேந்திரன் இருந்த போதும், நான் இருந்தபோதும் களவு போயிருந்த ஏராளமான சிலைகளை மீட்டுக் கொண்டுவந்திருக்கிறோம். அறநிலையத்துறை எங்கள் கைகளைக் கட்டிப் போட்டதில்லையே!

Advertisment

கோயில்கள், "பக்தர்கள்' என்று சொல்லப் படும் தனியார்வசம் இருந்தபோதும் சிலைத் திருட்டுகளும், கோயில் நிலங்களில் முறைகேடுகளும் நடைபெற்றன. அப்போதுதான் அதிகளவில் நடைபெற்றன என்ற வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்கலாம்...

இந்து திருக்கோயில்களை அரசு நிர்வகிப்ப தற்கான தமிழ்நாடு இந்து சமயச் சட்டம் ஏதோ கலைஞர் கருணாநிதி கொண்டு வந்ததோ, தி.மு.க. ஆட்சியின் போது அறிமுகப்படுத்திய சட்டமோ அல்ல. அதன் சுருக்கமான வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.

இந்து சமயக் கோயில்களுக்குக் கடந்த நூற் றாண்டின் தொடக்கத்திலேயே பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துக்களும் இருந்து வந்துள்ளன. இவற்றை நிர்வாகம் செய்வதில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் மட்டுமே இருப்பதாகவும், ஊழல் மிகுந்து காணப்படுவதாகவும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே புகார்கள் வரத்தொடங் கின. அப்போது ஆட்சி செய்த மன்னர்களிடமும், பிரிட்டிஷ் நிர்வாகத்திடமும் இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் பொதுமக்களிடமிருந்து வந்தன.

இந்நிலையில் 1817-ம் ஆண்டு முதல் முறையாக மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குபடுத்தும் சட்டம் என்ற பெயரில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது.

ja

இந்தச் சட்டம் திருக்கோயில்களுக்கு வழங்கப்படும் நிதி முதலான அறக்கொடைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும், தனிப்பட்டவர் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வழிவகை செய்தது. இந்த அதிகாரம் அப்போதிருந்த வருவாய் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது தொடங்கி 1849-ம் ஆண்டுக்குள் 21 மாவட்டங்களில் இருந்த 8,292 கோயில்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரப்பட்டன. ஊழல் புரிந்த தர்மகர்த்தாக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். தர்மகர்த்தாக்கள், ஜமீன்தார்களின் வீடுகளிலிருந்த ஏராளமான கோயில் நகைகள் மீட்கப்பட்டன. மூடிக்கிடந்த கோயில்கள் வழிபாட்டுக்குத் திறந்து விடப் பட்டன.

1858-ம் ஆண்டு, இந்தியாவின் ஆட்சி கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து விக்டோரியா மகாராணியிடம் நேரடியாகச் சென்றது. தங்கள்மீது இந்திய மக்களுக்கு இருந்த வெறுப்பைக் குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவுமான தேவை விக்டோரியா மகாராணிக்கு இருந்தது. இதனால் அவர், ‘’"மத விவகாரங்களில் பிரிட்டிஷ் அரசு தலையிடாது'’என கவர்ச்சி வாக்குறுதி அளித்தார்.

இது விக்டோரியா மகாராணியின் செப்பு சாசனம் எனப் புகழ்பெற்றது. இதையடுத்து, கோயில்களும் அவற்றின் சொத்துகளும் முன்பு யார், யார் வசம் இருந்தனவோ, அதே ஊழல் பெருச்சாளிகள் வசம் சென்றன. அவர்கள் பழையபடி அவற்றைத் தங்கள் சுயலாபத் துக்குப் பயன்படுத்தத் தொடங்கினர்.

கோயில்களின் உள்ளே இருந்த விலை உயர்ந்த தங்க நகைகள், விக்கிரகங்கள் உள்ளிட் டவை தவறாகப் பயன் படுத்தப்படுவதாகவும், சொத்துகளில் ஊழல் மலிந்து விட்டதாகவும் மீண்டும் பொதுமக்களின் புகார்கள் குவிந்தன.

தர்மகர்த்தாக்கள், கோயில் நிலங்களை நிர்வகிப் பதன் வழியே கிடைக்கும் பெரும் வருவாயை அரசு கஜானாவுக்குக் கொண்டு சேர்க்காமல் முறைகேடு செய்தனர். இதன்மூலம் கோயில் நிலங்கள் ஏலத்துக்கு வந்தன. அப்படி ஏலத்துக்கு வரும்போது குறைந்த விலைக்கு அவர்களே வேறு நபர்களின் பெயரில் வாங்கிக்கொண்டார்கள்.

‘"விசாகப்பட்டினம் முதல் திருநெல்வேலி வரை இப்படியாக அப்பட்டமாக முறைகேடு செய்து கோயில் சொத்துகளைக் கொள்ளையடித்த 65 வழக்கு விவரங்களை நான் தொகுத்து வைத்திருக் கிறேன். விருப்பம் உள்ளவர்கள் படித்துக்கொள்ள லாம்'’என்றார், பின்னாளில் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.

1919-ம் ஆண்டு தென்னிந்திய நல உரிமை சங்கம் தொடங்கப்பட்டது. (இதுவே பின்னாளில் நீதிக் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது.) அதேஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தின் விளைவாக இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்றது. 1920-ம் ஆண்டு நடந்த மதராஸ் மாகாணத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. பனகல் அரசர் ராமராய நிங்கர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்துத் திருக்கோயில்களையும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர முயற்சி செய்தார். இதற்காக 1922-ம் ஆண்டு இந்து பரிபாலன சட்டத்தை முன் மொழிந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் இருந்தும், உயர்சாதி அமைப்புகளில் இருந்தும் கடுமை யான எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றையும் மீறி 1925-ம் ஆண்டு இந்து பரிபாலன சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

மதத்தில் அரசு தலை யிடுவதாகக் குற்றம்சாட்டிய சத்தியமூர்த்தி அய்யர், ’"ஆண்டவனை சட்டம் போட் டுக் கட்டுப்படுத்துவதா?'’என ஆவேசமாகக் கேட்டார். (அன்றைக்கு சத்தியமூர்த்தி ஐயர் வாயிலாக ஒலித்த வார்த்தைகள் சனா தனத்தின் குரல். அதே வார்த்தைகளை இன்றைக்கு எதிரொலிக்கும் ஜக்கி வாசுதேவின் குரல் வணிக லாபத்தை நோக்கமாகக் கொண்டது. )

சுதேசமித்திரன், இந்து உள்ளிட்ட பத்திரி கைகள் இந்தச் சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்து எழுதின.

எல்லா எதிர்ப்புகளையும் புறம்தள்ளி பனகல் அரசர் அன்றைய வைஸ்ராய் இர்வின் பிரபுவிடம் எடுத்துச் சொல்லி இந்தச் சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்றார். இறுதியில் 1927-ம் ஆண்டு ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. திருக்கோயில்களின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

1947-லிருந்து 1949 வரையிலான இரண்டு ஆண்டு காலம் ஓமந்தூர் ராமசாமி, சென்னை ராஜதானியின் முதலமைச்சராக இருந்தார். அப்போது தமிழகக் கோயில்களில் நடந்த எண்ணற்ற ஊழல்கள், முறைகேடுகளுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை அவர் எடுத்தார். வைணவ நெறிகளைப் பின்பற்றிய முழுமையான ஆத்திகவாதியான ஓமந்தூரார், கோயில்களும் மடங்களும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டதால்தான் நாட்டில் நாத்திகம் வளர்கிறது என்று கூறினார். எனவே அறநிலையத் துறை சட்டங்களில் மேலும் பல திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

கோயில் சொத்துகளைக் குறைந்த குத்தகைக்குக் கொடுப்பதை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்திய ஓமந்தூரார் மடங்களில் உள்ள நகைகள், பதிவேட்டில் பதிக்கப்பட்டு அரசுக்குத் தெரிவிக்க ஆணை பிறப்பித்தார்.

1959-ல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் அறநிலையத் துறையின் சட்டங்களில் உள்ள குறைகள் களையப்பட்டு திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன்பிறகு இன்றுவரை தொடரும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இயற்றப்பட்டது.

வலதுசாரி ஆதரவாளர்கள் உருவாக்கிய போலி பிம்பம் போல திராவிடர் இயக்க ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத் துறை உருவாக்கப்படவில்லை.

அரசுத் துறைகளின் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக இந்து சமய அறநிலையத் துறையிலும் பிராமணர் அல்லாதார் ஏராளமானோர் பணியில் சேர்ந்தனர். இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே திருக்கோயில்களின் செயல் அலுவலர்களாக ஆக முடியும் என்றிருந்த நிலையும் ஒரு சட்டப் போராட்டத்தின் மூலம் மாற்றப்பட்டது. கடவுளின் முன் அனைவரும் சமம் என்பதும், அரசமைப்புச் சட்டத்தின் முன்பு அனைத்துக் குடிமக்களும் சமம் என்பதும் இதன் மூலம் நிலைநாட்டப்பட்டது.

இதெல்லாம் சனாதன சக்திகளின் கண்களை உறுத்துகிறது.

"கலைஞர் கருணாநிதி நாத்திகர் என்பதால் அவர் இந்து சமயத்துக்கு விரோதமாகச் செயல்பட்டார்' என்ற சிலரது வாதத்தையும் வரலாற்றின் நியாயத் தராசில் சீர்தூக்கிப் பார்ப்போம்.

நி தி. மு. க. கடந்த முறை ஆட்சி செய்த 2006-2011 காலகட்டத்தில் அரசின் இந்து அறநிலையத்துறை மூலம் 5,000 க்கும் மேற்பட்ட கோயில்களுக்குத் திருப்பணியும், குடமுழுக்கும் (கும்பாபிஷேகம்) நடத்தப்பட்டன!

நி 22 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த ஆசியாவின் மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரை, தான் முதல் முறை ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டே பழுது பார்த்துப் புனரமைத்து 1970-ம் ஆண்டில் பிரம்மாண்டமான தேரோட்டம் நடத்தினார் கலைஞர்!

நி தஞ்சை பெரிய கோயிலின் 1000-வது ஆண்டு விழாவை, 2010-ம் ஆண்டு சிறப்பாக முன்னின்று நடத்தியவர் கலைஞர்!

எனவே, ஆட்சியாளர் இறை நம்பிக்கை உள்ளவரா, இல்லையா என்பது முக்கியம் அல்ல. ஆட்சியில் கோயில் சொத்துகளுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதும், பக்தர்களின் உணர்வுகள் மதிக்கப்படுகிறதா என்பதுமே முக்கியம். இந்து அறநிலையத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தி அத்துறையை வலுப்படுத்த வேண்டுமே அல்லாமல், கோயில்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பது என்பது பகுத்தறிவுக்கு முரணானதும், பக்திக்குத் தீங்கானதும் ஆகும்.