பொள்ளாச்சியில் ஜனவரி 13 அன்று நடந்த சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில் இங்கி லாந்து, பிரேஸில், நெதர்லாந்து, கனடா, பெல்ஜியம், ஸ்பெயின், வியட்னாம், பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து நாடுகள் கலந்துகொண்டன. வழக்கமாக பொள்ளாச்சியில் நடைபெறும் இவ் விழா, கோவிட் தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக நடக்க வில்லை. இவ்விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தனது மனைவியுடன் கலந்துகொண்டு, அவரும் ஒரு பலூனை பறக்கவிட்டார். வெறுமனே பலூன் வடிவத்தில் மட்டுமல்லாமல் டைனோசர், கார்ட்டூன் சித்திரங்கள் போன்ற வடிவிலும் காணப்பட்ட பலூன்கள் குழந்தைகளையும் சிறுவர்களையும் ஈர்த்தன. சராசரியாக 60 அடி முதல் நூறு அடி உயரம் வரை பலூன்கள் பறந்து தரையிறங்கிய காட்சி உள்ளத் தைக் கொள்ளை கொள்வதாக இருந்தது. பறக்கும் பலூன்னா உற் சாகத்துக்கு கேட்கவா செய்யணும்!

dd

தங்களது நாயகன் நடிக்கும் படத்துக்கு நூறு அடியில் கட்அவுட் வைப்பது, அதற்கு பாலாபிஷேகம் செய்வது, போட்டி நடிகரின் போஸ்டருக்கு சாணம் அடிப்பது, தியேட்டருக்குள் நாயகன் தோன்றும் காட்சிகளிலெல்லாம் ஊளையிடுவது, காகிதங்களைக் கிழித்துவீசுவது இந்திய ரசிகர்களின் தனிக்குணம். அப்படிப்பட்ட ரசிகர்கள் அமெரிக்கா போனால் மட்டும் மாறியா விடுவார்கள். சமீபத்தில் தெலுங்கு நடிகர் பாலய்யா நடித்த பாலசிம்ஹாரெட்டி படம் அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் வெளியானது. இதற்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்த நிலையில் காட்சி ஆரம்பமானது. பாலையா திரையில் தோன்றும்போதெல்லாம் ரசிகர்கள் கோஷமிட்டதுடன், காகிதங்களைக் கிழித்தும் வீசியதால் தியேட்டர் நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது. இதனால் படத்தை நிறுத்திவிட்டு போலீஸுக்கு தகவல் தெரிவித்துவிட்டனர். போலீஸார் வந்து, "இங்கு இப்படி நடந்துகொள்வது சட்டவிரோதமானது. அதனால் நீங்களாக தியேட்டரைவிட்டு வெளியேறுங்கள். இல்லையெனில் நாங்கள் வெளியேற்ற வேண்டியிருக்கும்' என எச்சரித்தனர். பிடித்து உள்ளே வைத்தால் ஜாமீனுக்குக்கூட ஆளிருக்காது என்பதால் அவர்கள் அமைதியாக வெளியேறியிருக்கிறார்கள். பாலய்யா ஷோவை பாழாக்கிட்டாங்களே!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத பொருளாதாரப் பிரச்சனையை இலங்கை எதிர்கொண்டுவருகிறது. அதனால் நாட்டின் அமைச்சர்கள், ஆலோசகர்கள் எதிலெல்லாம் செலவைக் குறைக்கலாம் என ஆலோசனை வழங்கிவருகிறார்கள். அதில் லேட்டஸ்ட்டாக வழங்கப்பட்ட ஆலோசனை, இராணுவத்தின் அளவைக் குறைக்கலாம் என்பது. தற்போது இலங்கை ராணுவத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் வீரர்கள் இருக்கிறார்கள். இதனை அடுத்த வருடத்துக்குள் 1,35,000 வீரர்களாகக் குறைத்து, 2030-க்குள் 1 லட்சம் வீரர்களாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் குறித்த கவலையால்தான் இலங்கை தன் ராணுவ பலத்தை பெருக்கிக்கொண்டே சென்றது. அவர்கள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில், இத்தனை ராணுவ பலம் தேவையில்லை. இவர்களில் பெரும்பாலோர் வீணே தமிழர் பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை அகற்றுவதன் மூலம் செலவையும் குறைக்கலாம். நாட்டின் நிதிநிலையையும் மேம்படுத்தலாம் என்பது திட்டமாம். "ராணுவச் செலவு என்பது பெருமளவிலும் நாட்டின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் நிர்வகிக்கக்கூடிய செலவு'’ என ராணுவ அமைச்சர் தென்னகோன் தெரிவித்துள்ளார். அப்புறம் என்ன, தமிழர்கள் பகுதிகளில் இருக்கிற ராணுவத்தை நீக்கி, அவர்களை நிம்மதியா விடுங்க! அணுகுண்டு தயாரிக்கிற செலவுல அரிசி பருப்பை விளைய வைங்க!

oo

Advertisment

சென்னையிலுள்ள கடற்கரைகளிலேயே பெசண்ட் நகர் கடற்கரை சுத்தமான கடற்கரை என்ற பெருமையைப் பெற்றுள்ளது. கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கடைகளின் முன் குப்பைபோட தொட்டி வைப்பது, முழு அளவிலான கடற்கரை சுத்தம் மேற்கொள்வது, கடற்கரையிலுள்ள கழிவறையின் சுத்தம் என பல்வேறு அளவீடுகளை வைத்து இந்த மதிப் பீட்டை மேற்கொண்டது. இந்த மதிப்பீட்டில் 98.6 மதிப்பெண்கள் பெற்று பெசண்ட் நகர் கடற்கரை முதலிடமும், திருவான்மியூர் கடற்கரை இரண்டாமிடமும் பெற்றன. உலகப் புகழ்பெற்ற மெரினா 92.9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. திருவொற்றியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை கடற்கரைகளும் இந்தப் போட்டியில் இடம்பெற்றன. சுகாதாரப் பணியாளர்கள் மூலம் இந்த அனைத்துக் கடற்கரைகளுமே சுத்தம் செய்யப்பட்டாலும், இந்தக் கடற்கரைகளில் குப்பைகள் நிறைய காணப்பட்டன. அக்கரை கடற்கரையில் கழிப்பிடம் இல்லை. கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் கமிஷனரான ககன்தீப்சிங் பேடி, ""கடற்கரையை சுத்தமாக வைத்துக்கொள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருந்தாலும், பிளாஸ்டிக் உறைகளைக் கொடுக்காமல் இருந்தாலுமே போதும்'' என்கிறார். பீச் இருந்தாமட்டும் போதாது... பியூட்டிபுல்லா இருக்கணும்!

-நாடோடி

Advertisment