ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி வந்தது முதல் மெல்ல... மெல்ல பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. முதலில் இருபாலர் வகுப்பறை, கல்லூரிகளில் திரை தொங்கவிடப்பட வேண்டுமென்றவர்கள், உயர் கல்வியில் குறிப்பிட்ட பாடங்கள் படிக்கக்கூடா தென பெண்களைத் தடுக்க ஆரம்பித்தனர்.
பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் மறுக்கப்பட்டுள்ளது. இப்போது பெண்கள் ஜிம்களுக்கு வருவதைத் தடை செய்துள்ளனர். தவிரவும் பூங்காக்கள் போன்ற பொதுஇடங்களுக்கு ஹிஜாப் அணிந்து வரவேண்டுமென கெடுபிடிகள் விதிக்கத் தொடங்கியுள்ளனர். ஜிம்மில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பாக நல்லொழுக்கத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "பெண்கள் இத்தகைய இடங் களில் ஹிஜாப் அல்லது முக்காடு போட்டுவர வேண்டும் என விதிகள் வகுக்கப்பட்டுள்ளதை மீறிவருகின்றனர். ஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் காணப்படுகின்றனர். ஜிம்மில் ஆண்களுக்கு ஒரு நாளும் பெண்களுக்கு ஒரு நாளும் தனித்தனி வருகை என பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எல்லாம் மீறப்பட்டதாலேயே தடைவிதிக்கப்பட்டுள் ளது''’எனத் தெரிவித்தார். கற்காலத்துக்கே போய்டுவாங்க போல!
பதஞ்சலி நிறுவனம் மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் அழகு மற்றும் மருந்துப் பொருட்கள் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துவதாக ஏற்கெனவே சர்ச்சைகளுக்கு ஆளாகியிருக்கிறது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் கே.வி.பாபு என்பவர், ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் திவ்யா பார்மசி மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிட், பிபிகிரிட், லிப்பிடோம் மாத்திரைகளை தயாரித்து விற்பனை செய்கிறது. இவை விதிகளை மீறும் வகையிலும், குறிப்பிடும் நோய்களைக் குணப் படுத்தாத வகையிலும் உள்ளதாக உத்தரகாண்ட் மாநில ஆயுர்வேதம் மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகத்தில் புகார் செய்தார். இதையடுத்து, இந்த மருந்துகள் சர்க்கரை, கண்ணழுத்த நோய், ரத்தக்கொழுப்பு போன்றவற்றைக் குணப்படுத்த வில்லை என்பதை இவ்வமைப்பு கண்டறிந்தது. எனவே இம்மருந்துகளுக்கு தடை விதித்ததுடன், இவற்றின் நோய்தீர்க்கும் தன்மையை நிரூபித்து அனுமதி பெற்றுக்கொள்ளச் சொல்லியும் கடிதம் எழுதியது. இடையில் என்ன நடந்ததோ, மறுக்கப் பட்ட அனுமதியை திரும்ப அளித்து விற்பனைக்குத் தடையில்லை என்றிருக்கிறது உத்தரகாண்ட் அரசு. அனுமதியிலேயே உள்ளே -வெளியே ஆடுறாங்களே!
எல்கர் பரிஷத் வழக்கில் கைதுசெய்யப்பட்ட 15 நபர்களில் ஒருவரான கௌதம் நவல்கானின் உடல்நலக் குறைவையும், அவரது வயதையும் மனதில்கொண்டு, அவரை வீட்டுச் சிறையிலேயே இருக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்த வழக்கு பதியப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையிலும் விசாரணை தொடங்கப்படவில்லை. எனவே நவல்காவின் வழக்கறிஞர் கபில்சிபல் சார்பில் வீட்டுச் சிறை கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கே.எம். ஜோசப், ஹிரிஷிகேஷ் ராய் அமர்வு வீட்டில் கணினி, இன்டர்நெட்டுக்கு அனுமதியில்லை, டி.வி.க்கு அனுமதி, தொலைபேசி அழைப்புகள் போலீஸ் முன்பே பேசப்படவேண்டும், வீட்டின் நுழைவாயிலிலும் வெளியேறுமிடத்திலும் கண்காணிப்புக் கேமரா, காவலுக்கு நிறுத்தப்படும் காவலர்களின் செலவுக்கு ரூ 4 லட்சம் உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஒரு மாதம் வீட்டுக் காவலுக்கு அனுமதியளித்துள்ளது. வழக்கு எப்ப எடுக்கிறது? பிணக்கு எப்ப முடியறது?
சமீபத்திய மருத்துவக் கண்டுபிடிப்பு ஒன்று பலரையும் பதற வைத்திருக்கிறது. அதாவது கொரோனா ரெண்டாவது, மூன்றாவது முறை தொற்றுவது மரண அபாயத்தை அதிகரிக்கிறது என்பதே அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு. ஒன்றுக்கு மேற்பட்ட முறை கொரோனா தொற்றியவர்களுக்கு சுவாச, இதய, நீரிழிவு, செரிமானம், சிறுநீரக, மனநலம் சார்ந்த, ரத்தம் தொடர் பான அபாயங்கள் அதிகரிப்பதாக ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. அதேபோல தடுப்பூசி போடாத, ஒரேயொரு ஊசி போட்ட, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசி போட்டவர்களிடம் இந்த அபாய விகிதம் வேறுபடுகிறது. தடுப்பூசி போட்டவர்களுக்கு அபாய விகிதம் குறைவாகவும், தடுப்பூசியே போடாதவர்களுக்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், கோவிட் வந்தவர்களுக்கு மூளையின் செயல்திறன் குறைவு, ஒற்றைத் தலைவலி, தலை வலி, ஞாபகமறதி, மனஅழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளும் ஏற்படுவதாகவும் இந்த ஆய்வு எச்சரிக்கிறது. ஆய்வு முடிவுன்னாலே பதறுதே!
தனிமரம் தோப்பாகாது. ஆனால் தனி மனிதர் தோப்பு… என்ன... வனத்தையே உரு வாக்கலாம். அதை நிரூ பித்துள்ளார் மணிப்பூரைச் சேர்ந்த லோயா. மணிப்பூர் மாநிலம் லேகாய் பகுதியைச் சேர்ந்தவர் மொய்ராங்தம் லோயா. சென்னையில் கல்லூரிப் படிப்பை முடித்த இவர், தன் சொந்த ஊருக்குத் திரும்பிய போது, இவர் வசிக்குமிடம் மனிதர்களின் பேராசையால் அதிகளவில் மரங்கள் அழிக் கப்பட்டு தரிசாக மாறத் தொடங்கியிருந்தது. இப் பகுதியை பழைய நிலைக்கு மீட்டெடுக்க உத்வேகம் கொண்டு வனத்துறை அதிகாரிகளின் துணையுடன் இப்பகுதியில் மரங்களை நட ஆரம்பித்தார். மூங்கில், தேக்கு, பலா, ஓக் மரக்கன்றுகளை நடுவதையே முழுமூச்சாக மேற்கொள்ள ஆரம்பித்தார். அவரது 20 வருட உழைப் புக்குத் தற்போது பலன் கிடைத்துள்ளது. இப்பகுதி மீண்டும் வனமாக மாறியுள்ள துடன் மான், முள்ளம்பன்றிகளும் வசிக்கத் தொடங்கி யுள்ளன. சபாஷ் லோயா!
-நாடோடி