stalin

"நாற்பதும் வென்றோம்! நாட்டையும் காப்போம்!' என்கின்ற முழக்கத்துடன் கோவையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், 2026ல் தி.மு.க.வின் இலக்கு 221 சீட்களே என சூளுரைத்துள்ளார் தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின்.

Advertisment

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெற்ற நிலையில், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, வெற்றிக்காக பாடுபட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழா, கோவை கொடிசியா மைதானத்தில் கடந்த சனிக்கிழமையன்று (15.6.24) நடைபெற்றது. தேதி அறிவிக்கப்பட்டது முதலே கோவையின் பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி தலைமையிலான அணியினர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். போதாக்குறைக்கு அமைச்சர் எ.வ.வேலுவின் மேற்பார்வை வேறு!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற எம்.பி.க்கள், கூட்டணிக்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்காக 1 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டன. மேடையில் சுமார் 8 அடி உயரத்தில் கலைஞரின் இரண்டு திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டன. சனிக்கிழமையன்று பகல் 12 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர்கள் முத்துச்சாமி, எ.வ.வேலு, சாமிநாதன், ஆ.ராசா எம்.பி. ஆகியோர் வரவேற்றனர். ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளரான துரை வைகோ எம்.பி., ""தமிழகத்தில் பா.ஜ.க. வாஷ்அவுட் ஆகியுள்ளது. குறிப்பாக, 11 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. உத்திரபிரதேசமும் மதவாதத்திற்கான மண் அல்ல எனத் தெரிய வந்துள்ளது'' என்றார்.

Advertisment

காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகையோ, ""இது ஒரு மகிழ்ச்சியான தருணம். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோவைக்கு வந்தபோது, "ஒருபோதும் தமிழ் மண்ணில் பாசிசமும், பா.ஜ.க.வும் காலூன்ற முடியாது' என்றார். அந்த அடிப்படையில் 40க்கு 40 என வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு முழுக்காரணமாக இருந்த முதல்வருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது."" என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன் பேசுகையில், ""வள்ளுவர் வாக்கிற்கு இணங்க வாழ்ந்தவர் கலைஞர். கலைஞரின் வாக்குப்படி மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவருகிறார். தமிழகத்தில் வாழும் அனைத்து சமுதாய மக்களும் இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் காட்டுகிறது. தமிழகத்தில் உருவாகியுள்ள மதச்சார்பற்ற கூட்டணி இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை. இந்த திராவிட மாடலை பிற மாநிலங்கள் பின்பற்றியிருந்தால் மதவாதம் விரட்டியடிக்கப்பட்டிருக்கும். நூற்றாண்டு விழா கொண்டாடும் கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்."" என வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன், ""உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து செம்மொழி மாநாட்டை நடத்திய கலைஞருக்கு வீரவணக்கம். அவர் விட்டுச் சென்ற பணிகளை நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். தென்னிந்தியாவில் பா.ஜ.க. காலூன்ற முடியாத ஒரே மண் தமிழ்நாடு. அதனை உறுதிப்படுத்தியவர் மு.க.ஸ்டாலின். மழைக்கால தவளை போல் ஒருவர் கத்திக்கொண்டிருக்கிறார், தி.மு.க.வை வெல்வோம் என்று! அவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தவர் மு.க.ஸ்டாலின். இந்தியா கூட்டணியில் பல மாநிலத் தலைவர்களை ஒருங்கிணைத்து பலம்பெறச் செய்தவர் மு.க.ஸ்டாலின். சனாதன சக்திகளை வீழ்த்த, ஸ்டாலின் தலைமையில் கைகோர்த்து தொடர்ந்து களமாடுவோம்'' என்றார்.

சி.பி.எம்.மின் பாலகிருஷ்ணனோ, ""கோவையை மதவெறிக் காடாக மாற்ற முயன்ற பா.ஜ.க.வுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நாற்பதும் இந்தியா கூட்டணி வசம் வந்துவிட்டாலும் நாடு நம்மிடம் இல்லை என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருந்துகின்றனர். எதிர்காலத்தில் முதல்வர் ஸ்டாலின் கை காட்டும் நபர் இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நாள் உருவாகும் என்ற நம்பிக்கையோடு நாம் பணியாற்ற வேண்டும். 40 நமக்கு உடனே கிடைத்துவிட்டது, நாடும் நமக்கு சற்று தாமதமாகக் கிடைக்கும் நிலை இருக்கிறது. எந்த வேட்பாளரை எங்கு நிறுத்துவது என்று யூகம் அமைத்து தேர்தலில் வெற்றியை முதலமைச்சர் பெற்றுத்தந்திருக்கிறார். இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டுகிற மாநிலமாக இருக்கிறது'' என்றார்.

""இடைத்தேர்தல் நியாயமாக நடக்காது என அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது. தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம். பாதுகாப்பாக இருப்பது துணை ராணுவம். அ.தி.மு.க. தேர்தல் புறக்கணிப்பின் மூலம் நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். இதை உணர்ந்து இந்தியா கூட்டணி தேர்தல் பணியாற்ற வேண்டும்'' என்றார் சி.பி.ஐ.யின் முத்தரசன்.

நிகழ்ச்சியில், தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற 40 எம்.பி.க்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நினைவுப்பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். சிறப்புரையாற்றிய தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின், ""கடந்த முறை கோவைக்கு வந்து பங்கேற்ற கூட்டம், இந்தியா முழுவதும் ட்ரெண்டானது. அந்த கூட்டத்திற்கு வந்த ராகுல், ஓர் இனிப்பைக் கொடுத்து மனதை வென்றார். அதுவே மக்களவைத் தேர்தல் வெற்றியின் முதல் இனிப்பு. நாற்பதும் நமதே என்ற நம்பிக்கை எனக்கு முதலிலேயே இருந்தது. இந்த வெற்றி விழா, தனிப்பட்ட ஸ்டாலினுக்கு நடைபெறும் பாராட்டு விழா அல்ல. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் நடத்தப்படும் பாராட்டு விழா! இந்த பாராட்டு விழாவை தொண்டர்களாகிய உங்களுக்கு காணிக்கையாக வழங்குகிறேன். தமிழக அரசின் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு கிடைத்த வெற்றி இது. நாம் அடைந்த வெற்றி, திராவிட மாடல் அரசு மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. தொடர் வெற்றிக்கு கூட்டணி ஒற்றுமை தான் அச்சாணி. கூட்டணிக் கட்சித்தலைவர்களுடன் தேர்தல் உறவு மட்டும் கிடையாது, கொள்கை உறவு தான் இந்த வெற்றிக்கு காரணம்'' என்றவர் தொடர்ந்து, ""இந்தியா கூட்டணி இணைந்து தேர்தலை சந்திக்க தயாரானபோது, கட்சிகளை ஒன்று சேரவிடாமல் தடுக்க, பா.ஜ.க. பல தடங்கல்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, ஐ.டி., இ.டி. சோதனை நடத்தி பலரையும் கைது செய்து, பா.ஜ.க. அரசு மிரட்டியது. பா.ஜ.க.வுக்கு எதிராக 237 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் நுழைந்திருப்பதால், பா.ஜ.க.வால் மக்கள் விரோதமான சட்டங்கள் எதுவும் இயற்ற முடியாது. 40 எம்.பி.க்களும் கருத்துக்களால் பா.ஜ.க.வின் ஆணவத்தை சுடுவார்கள். மக்களுக்கான குரல் நாடாளுமன்றத்தில் வலுவாக ஒலிக்கும். நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில், சட்டசபை தொகுதிவாரியாக பார்த்தால் 221 தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை வகித்துள்ளது, அடுத்து வரக்கூடிய 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் தி.மு.க. வெல்லும்'' என சூளுரைத்தார்.

வெற்றிகரமாக நடந்துமுடிந்த முப்பெரும் விழாவில், சில கேள்விகளும் உடன்பிறப்புக்கள் மத்தியில் வலம் வருகின்றன. குறிப்பாக, லட்சம் நபர்கள் திரண்ட இந்த முப்பெரும் விழாவில், 40 ஆயிரம் பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் 40 ஆயிரம் தண்ணீர் கேன்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டது. மீதம் எங்கே? என்கின்ற கேள்வியுடன், எம்.பி. தேர்தலின்போது மாநகர மா.செ.வின் சொந்த தொகுதியில், சொந்த பூத்திலேயே தி.மு.க. இரண்டாவது இடம் பிடித்ததின் மர்மம் என்ன? போன்ற கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. இது இப்படியென்றால், மற்றைய மா.செ.க்களின் நிலை குறித்தும் கேள்விகள் உள்ளன. அதுபோல் தான் வசூலை வாரிக்குவிக்கும் மேயரின் நிலையும்! விரைவில் கோவையில் மா.செ.க்கள் மற்றும் மேயர் மாற்றம் நிகழும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். குறிப்பாக, தனது சிறப்புரையின்போது அனைவரையும் வரவேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ஆற்றல்மிகு செயல்வீரர் என கோவையின் பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமிக்கு மட்டும் புகழாரம் சூட்டிவிட்டு, வேண்டுமென்ற மா.செ.க்களின் பெயர்களை தவிர்த்ததையும் குறிப்பிடுகின்றனர். இதனால் மா.செ.க்கள், மேயர் மத்தியில் உதறல்கள் எழுந்துள்ளது உண்மை. "28 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வசம் வந்திருப்பதும், மேற்கு மண்டலத்தில் தி.மு.க. வலிமையாக இருக்கிறது என்பதை நிலை நிறுத்தவும் மாற்றங்கள் நிச்சயம் உண்டு' என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.