திட்டக்குடி நகராட்சி வளர்ச்சி இல்லாமல் தேங்கி இருக்கிறது என்று காற்று வாக்கில் நம் காதுக்கு செய்திவர, இது குறித்த விசாரணையில் இறங்கினோம்.
பேரூராட்சியாக இருந்து கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டிருக்கிறது திட்டக்குடி. இது சட்டமன்றத் தொகுதியின் தலைநகரமாகவும் திகழ்கிறது. எனினும் "வளர்ச்சிப் பணிகளில் இங்கே எந்தவித மான பெரிய முன்னேற்றமும் இல்லை' என்கிற மனக்குறை அங்கே பலரிடமும் இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இது தவிர "நகராட்சியில் அதி காரிகள், அலுவலர்கள் பற்றாக்குறை நிலவுவதாக வும், நிர்வாகத்தில் இருப்பவர்கள் தலைவர் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களை மதிப்ப தில்லை' என்றும் நகராட்சித் தரப்பில் மனக்குறை நிலவுகிறது. "திட்டக்குடிக்கு என்று நகராட்சி ஆணையர் நியமிக்கப்படாத நிலையில், திருவாரூர், சிதம்பரம் நகராட்சிகளின் பொறுப்பு ஆணையரே இங்கும் பொறுப்பு ஆணையராக இருக்கிறார் என்றும், அவர் வாரத்துக்கு ஒருமுறை மட்டும் வந்து செல்கிறார்' என்றும் சொல்கிறார்கள்.
திட்டக்குடியின் நிலவரம் குறித்து கவுன்சிலர்கள் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என விசாரிக்கத் தொடங்கினோம்.
கவுன்சிலரான கோழியூர் சேதுராமன் நம் மிடம், "நகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. இங்கு நகராட்சிக்கு தென்புறம் நீண்டு ஓடுகிறது வெள்ளாறு. வடபுறம் வெலிங்டன் நீர்த்தேக்க கால்வாய் இருக்கிறது. இதனால் நகர விரிவாக்கம் நடைபெற போதுமான நிலப்பரப்பு இல்லை. இருக்கும் குறைந்த இடங்களில் வாழும் மக்கள்கூட வீடு, கடை கட்ட அனுமதி கேட்டால் ஈவு இரக்கமில்லாமல் பேரம் பேசுகிறார்கள். நகராட்சி பிளானிங் அப்ரூவல் கொடுக்கும் பெண் அதிகாரி நிர்மலாதேவி சமீபத்தில்தான் ஆவடி நகராட்சியில் இருந்து இங்கு பணிக்கு வந்துள்ளார். இவர் கூடுதலாக வடலூர் நகராட்சி அப்ரூவல் அதிகாரியாகவும் பணி செய்து வருகிறார். ஆக்கிரமிப்புகள் பல இடங்களில் உள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி, அதை அகற்றவேண்டியது பொறியாளரது பணி. ஆனால் அவர் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் பணம் கறப்பதில் காட்டும் அக்கறையை, இதில் காட்டுவதில்லை.
நகராட்சியில் ஆணையர், சானிடரி இன்ஸ் பெக்டர், மேலாளர் இப்படி பல பதவிகள் காலியாக உள்ளன. இருக்கும் கொஞ்சநஞ்ச அலுவலர் களும் அவரவர்கள் இஷ்டம்போல செயல்படுகிறார் கள். கவுன்சிலர்களை அதிகாரிகளும் சரி தலைவரும் சரி மதிப்பதே இல்லை. வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாற்றத்தில் நிற்கிறோம்'' என்கிறார்’ஆதங்கமாய்.
மற்றொரு கவுன்சிலரான அலெக்சாண்டரோ, “"இங்கே நகரமன்றத் தலைவர் பெண். மேலும் அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு உரிய மரியாதையை நகராட்சி நிர்வாகம் தரவில்லை. நகரமன்றத் தலைவருக்கு தனி நாற்காலி போட்டு, தனியே அமர வைத்தார்கள். இப்படி பல்வேறு பாகுபாடு நகராட்சியில் நடக்கிறது. இது குறித்து பிரச்சினை எழுப்பிய பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. தலைவரைப் பொறுத்த வரை சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறார். நகராட்சியில் புதிய வீடு கட்ட அனுமதி கொடுக்க பொறியாளர் நிர்மலாதேவி அதிக பணம் கேட்ப தாக, உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது''’என்றார். இதுகுறித்தெல்லாம் நகராட்சித் தலைவர் வெண்ணிலா கோதண்டம் என்ன நினைக் கிறார்? என்பதை அறிய, அவரையும் சந்தித்தோம்.
"நகராட்சிப் பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கவுன்சிலர்களுக்கு கட்சி பாகுபாடு பார்க்காமல் ஒப்பந்தப் பணிகள் வழங்கப்படுகின்றன. வீடு, கடைகள் கட்ட அனுமதி கேட்பவர்களிடம் அதிக பணம் கேட்பதாகக் கூறுவது தவறு. 11 பேர் அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளனர். அதை ஆய்வு செய்யும் பணி மட்டுமே நடைபெற்று வருகிறது. யாருக்கும் வீடு, கடை கட்ட அப்ரூவல் அதிகாரி இதுவரை அனுமதி அளிக்கவில்லை. அப்படி இருக்கும்போது அதிக அளவில் பணம் கேட்பதாகக் கூறுவது எப்படி சரியானதாக இருக்கும்? நகராட்சி எல்லை யில் உள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் குடிநீர் வடிகால் வாரியம் பைப்லைன் அமைக்க சாலையைத் தோண்டி போட் டுள்ளது உண்மை. அந்தச் சாலையை செப்பனிடும் பணியை, நகராட்சி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையிடம் கேட்டோம். அவர்கள் கொடுக்கவில்லை. எங்களிடம் சாலையை ஒப்படைத்தால், தரமான முறையில் விரைந்து சாலைப் பணிகளை சீரமைப்போம். நகராட்சி ஆணையர் உட்பட சில பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்பக் கோரி அரசிடம் கேட்டிருக்கிறோம்.
மேலும் அமைச்சர் சி.வி.கணேசன், நகராட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றி வருகிறார். நகராட்சி வளர்ச்சிக்காக அவரது சட்ட மன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒரு கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார். அதன்மூலம் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப் பணிகள் மிகத்தரமான முறையில் நடைபெற்று வருகிறது. அதேபோல் வார்டுகளில் தார்ச் சாலை அமைக்க ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் நிதியையும் அமைச்சர் பெற்றுத் தந்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திட்டக்குடி, முதல்தரமான நகராட்சியாக வளர்ச்சியடையும்''’என்கிறார் நம்பிக்கையோடு.
திட்டக்குடியின் தலையெழுத்து மாறுமா?