புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகில், மீனவர்கள் 18-ஆம் தேதி இரவு நெடுந்தீவை ஒட்டிய பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களின் விசைப்படகின் மீது திட்டமிட்டு மோதி மூழ்கடித்தது. இதில், கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட நிலையில்... விசைப்படகை ஓட்டிவந்த ராஜ்கிரண் படகுக்குள் சிக்கி கடலில் மூழ்கி இறந்தார்.
இவ்வாண்டு ஜனவரி 18-ஆம் தேதி இலங்கை கடற்படை திட்டமிட்டு மோதியதில் மெசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம்சன் ஆகிய நான்கு மீனவர்கள் கொல்லப்பட்டனர். சமீப காலங்களில் இந்திய மீன்பிடிப் படகுகள் மீது இலங்கைக் கடற்படைக் கப்பலைக் கொண்டு முட்டி மோதி கொல்லப்படுவது அதிகரித்துவருகிறது. இதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்ப்பதாலே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது என்கிறார் கள் மீனவக் கூட்டமைப் பினர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் வளத்தை அழிப்ப தாகக் கூறி இலங்கை வடக்குப் பகுதியில் மீனவர் களும், தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கையின் முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை கடலில் போராட்டங்கள் நடத்திய நிலையில், எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களைப் பிடிக்க இலங்கை கடற்படை யினர் தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டனர். அதன் எதிர்விளைவுதான் ராஜ்கிரண் படகு மூழ்கடிக்கப்பட்டது.
இலங்கைக் கடற்படையால் காலம்காலமாக தமிழர்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது காரணங்கள் மட்டும் மாற்றிச்சொல்லப்படும். ஒரு காலகட்டம் வரை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்றனர். அதன்பிறகு, இலங்கைக் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்ப தால் இலங்கை மீனவர் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி தாக்குதல் நடத்தினர். தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும், இழுவலை மீன்பிடி முறைகளையும் பயன்படுத்தி, கடல் வளங்களை அழிக்கின்றனர் என்றனர்.
இந்திய -இலங்கை பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில், இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை கடற்படை அத்துமீறி தாக்கும் போதும், சுட்டுக்கொல்லும்போதும், மீனவ மக்களின் மீன்பிடிக் கலன்களை சேதப்படுத்தி, பொருளாதார இழப்பும் ஏற்படுத்திய போதும், இந்திய மீனவர்கள் "கச்சத்தீவை மீட்க வேண்டும், இந்திய மீனவர்களின் பாரம் பரிய மீன்பிடி உரிமையை மீட்கவேண்டும்' என்றே குரல் கொடுத்து வந்தனர்.
இந்திய, இலங்கை மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதாக கூறி, ஒன்றிய பா.ஜ.க. அரசு, இழுவலை படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றத் திட்டமிட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல்கட்டமாக 500 படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்ற ரூ.286 கோடியை ஒதுக்கி பிரதமர் மோடி திட்டத்தை துவக்கி வைத்தார்.
மேலும் 2000 படகுகளை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆழ்கடல் படகாக மாற்றத் திட்டமிட்டனர். ஒரு ஆழ்கடல் மீன்பிடிப் படகின் விலை ரூ.80 லட்சம் என கணக்கிட்டு, ஒன்றிய அரசு 50 சதவீதம் மானியம், மாநில அரசு 20 சதவீதம் மானியம், பயனாளி பங்களிப்புப் தொகை 10 சதவீதம், வங்கிக் கடன் 20 சதவீதம் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஆழ்கடல் படகுகள் கட்டுவதற்கு சுமார் ஒரு கோடியும், அதற்கான மீன்பிடி வலைகள் ரூ.30 லட்சமும் ஆனதால், திட்டமிட்டபடி இத்திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ.க. அரசும், அன்றைய அ.தி.மு.க. அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது வரை சுமார் ரூ.28 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டு, 42 படகுகள் மட்டுமே கட்டிமுடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தென்னிந்திய மீனவர் நலச்சங்க தலைவர் கு.பாரதி பேசும்போது, “"மத்திய அரசு ஆணைப்படி இரண்டு ஆண்டுக்குள் 2,500 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றியிருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. 2021 இந்திய கடல் மீன்வளச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தில் இந்த அரசு இருக்கிறது. இச் சட்டத்தின்படி மீன வர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டும் என்றால் அனுமதி வாங்கித் தான் கடலுக்குள் செல்ல வேண்டும், மீன்பிடிக்கும் இடத்தையும் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அந்த படகுகள் சிறைபிடிக்கப்படும்.. அதை நடைமுறைப் படுத்தினால் இதுபோன்ற பிரச்சினை வராது என்று மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் கூறுகிறார்.
புதிய சட்டத்தில் நிறைய ஆட்சேபகரமான விஷயங்கள் இருக்கின்றன. தவிரவும், தென்னிந்திய கடலுக்குள் மீன்வளம் முழுமையாக இல்லாத காரணத்தால்தான், தமிழக மீனவர்கள் ஆந்திரா, கேரளா, ராமேஸ்வரம் எல்லை களைத்தாண்டி மீன்பிடிக் கச் செல்கிறோம். ஒன்றிய அரசு தன்னுடைய கட லுக்குள் மீன்வளத்தைப் பெருக்க வழிவகை செய்தால், நாங்கள் ஏன் மற்ற எல்லைக்கு செல்லப்போகிறோம்? எங்களின் கடலுக்குள் மீன்வளத்தை உயர்த்தும் பணிகளையும், ஆழ்கடல் மீன்பிடிப்படகுகளும் தந்தாலே இதற்கான தீர்வு கிட்டும்''’என்றார்.