பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் உளவு பார்க்கப்பட்டவர் களில் மே-17 இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் திருமுருகன் காந்தியும் அடக்கம்.
இது குறித்து அவரிடம் பேசினோம்.
நக்கீரன்: இந்த பெகாசஸ் சாப்ட்வேர் பற்றி இரண்டு ஆண்டு களுக்கு முன்பே செய்திகள் கசிந்தன? இப்போது பெரிதாக பேசப்படுவது ஏன்?
திருமுருகன் காந்தி: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாப்ட்வேர் பற்றி பேசப்பட்டாலும் ஆதாரப்பூர்வமாக இப்போதுதான் நிரூபணம் ஆகியிருக்கிறது. இந்த சாப்ட்வேரை இஸ்ரேல் நிறுவனம் தனி நபர்களுக்கு கொடுப்பதில்லை. இந்த சாப்ட்வேர் நாட்டின் அரசுகளுக்கு மட்டும்தான் கொடுக்கப்படுகிறது.
அந்த நிறுவனம் எத்தனை கோடி விலை சொன்னாலும் வாங்குவதற்குப் பல நாடுகள் போட்டி போடுகின்றன. அப்படி விலை கொடுத்தே ஆளும் மோடி அரசு இந்த சாப்ட் வேரை வாங்கி உளவு பார்த்து இருக்கிறது.
நக்கீரன்: அப்படி அதிக பணம் கொடுத்து இந்த சாப்ட்வேரை எதற்கு மோடி அரசு வாங்க வேண்டும்? அதற்கான தேவைதான் என்ன?
திருமுருகன்: மஹாராஷ்ட்டிராவின் பீமா கோரேகான் வழக்கு ஒன்று போதுமே. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தொலைபேசி உளவு பார்க்கப்பட்டவருள் ஒருவரான ரோனா வில்சன் என்பவரது மடிக்கணினி ஹேக் (ஐஹஸ்ரீந்) செய்யப்பட்டு போலியான மின்னஞ்சல்கள், அவர் அனுப்பியதுபோல புனைவு செய்யப் பட்டிருந்தது.இதை அமெரிக்காவின் டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படி போலியான தரவுகள் மூலம் பீமா கோரேகான் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ரோனா வில்சன், கவிஞர் வரவரராவ் உட்பட பல போராளிகளுக்கு ஜாமீன் கூட வழங்கப் படாமல் மூன்று ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் வைக்கப்பட்டிருப்பது போதாதா?
அதேபோல மோடி அரசின் கருத்தியலுக்கு எதிராக போராடுபவர்கள் மீது இந்த சாப்ட்வேர் நுட்பத்தை பயன்படுத்தி யாரையும் குற்றவாளியாக்க முடியும். அப்படியோர் திட்டம் தயாரிக்கப்பட்டு, என் தொலைபேசி
யின் வாயிலாக போலியான தகவல்களை நிறுவி ஏதேனும் ஒரு வழக்கில் சிக்க வைத்து, வெளியே வராதபடி சிறையிலேயே என்னைப் போன்றவர்களை அடைத்துவிடலாம் என்கிற மோடி அரசின் கீழ்த்தரமான செயலுக்கு எந்த பெருந்தொகையும் குறுந்தொகைதான். ஏற்கனவே 2018-ல் என்னை இப்படி சிக்க வைக்கும் முயற்சி ஆபரேஷன் டி.எம்.ஜி. என்ற பெயரில் நடந்துகொண்டிருப் பதாக நக்கீரன் செய்தி வெளியிட்டது சரியாக இப்போது பொருந்துகிறது.
நக்கீரன்: குறிப்பிட்டு உங்கள் அலைபேசியை மட்டும் ஒட்டு கேட்க வேண்டிய அச்சம் பி.ஜே.பி.க்கு வந்தது ஏன்?
திருமுருகன்: என் தொலைபேசி மட்டும் ஒட்டுக் கேட்கப்படுவது ஏன் என அவர்களைத் தான் கேட்க வேண்டும்? அதற்காக நான் மட்டுமே பி.ஜே.பி.க்கு எதிராக போராடுகிறேன் என்று நான் நினைக்கவில்லை. ஒரு வேளை... 2017-ல் தமிழீழ இனப்படுகொலைக்காக நினைவேந்தல் நடத்தியது, பின்னர் சிறையிலடைக்கப்பட்டு குண்டர் சட்டம் உடைக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்து, தந்தை பெரியார், அண்ணல் அம்பேதகர் சிலைகளுக்கு மாலை அணிவித்ததற்காக தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பின்னும் களத்தில் நிற்பதும், 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பதிவு செய்ததற்காகவும் கூட... அவர்கள் அச்சம் கொண்டிருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் தமிழ் ஈழம் குறித்து நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதற்காக கூட உளவு பார்த்து இருக்கலாம்.
இது எனக்கு நேர்ந்து இருக்கிறது. நாளை உங்களுக்கும் நேரலாம். நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து மோடி அரசின் இந்த பாசிச போக்கை கண்டிக்க முன்வர வேண்டும். இந்த உளவுச் செயலில் அதி கம் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்களை காப்பதற்கு அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். மோடி தன்னுடைய அரசுக்கு எதிராக போராடியவர்களை இந்த சாப்ட்வேர்க்கு எதிராகவும் போராட வேண்டும் என தூண்டியிருக்கிறார்.
அரசின் ஜனநாயக விரோத செயல்களை அம்பலப்படுத்தி, அரசின் அடக்குமுறையை அறத்துடன் எதிர்கொண்டு, பாசிசத்தை வீழ்த்திட வேண்டும் என்கிற ஓர் உச்ச நிலைக்கு நம்மை மோடி அரசு கடத்தியிருக்கிறது. அதை சரியாய் நாம் செய்யவேண்டும்.