"எல்லையில் ராணுவ வீரர்கள் குளிரிலும், பனியிலும்...' என்று ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்தின் போதும் ராணுவ வீரர்களைப் போற்றுவதுபோல் உருக்கமாகப் பேசி, தேச பக்தியை உசுப்பேற்றி, பாகிஸ்தானைத் தாக்கிப்பேசி வாக்குச் சேகரிப்பது, தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசுக்கு கைவந்த கலை. ஆனால் தற்போது அந்த ராணுவத்துக்கு ஆள்சேர்ப்ப தற்காக அறிவித்துள்ள புதிய திட்டமே, மோடி அரசுக்கு எதிராக, பா.ஜ.க. அலுவலகங்களைச் சூறை யாடும் அளவுக்கு இளைஞர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளது.

agnipath

கடந்த ஜூன் 14, செவ்வாயன்று, இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான சிப்பாய்களுக்கு ஆளெடுப்பதற்கான 'அக்னிபத்' திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி, நடப்பாண்டில் 46,000 ராணுவ வீரர்களை நான்கு ஆண்டுகளுக்கான ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளார்கள். இந்த வீரர்கள், அக்னி வீரர்கள் என்றழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.30,000 - ரூ.40,000 வரை நிர்ணயிக்கப்பட்டு, அதில் 30% பிடித்தம் செய்யப்படும். இப்படி பிடித்தம் செய்யப்படும் தொகையோடு, அரசின் பங்களிப்பும் சேர்த்து, நான்காண்டுகள் முடிவடைந்ததும், சேவா நிதியாக சுமார் 11.71 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு, பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். 17.5 - 21 வயதுடையவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கான அடிப்படைக் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு. தேர்வு செய்யப்பட்ட வீரர்களில், அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் 25% பேர் மட்டும் ராணுவத்தில் தொடர அனுமதிக்கப்படுவார்கள்.

அக்னிபத் ஏன்?

அக்னிபத் திட்டத்தைக் கொண்டுவருவதால் ராணுவத்தில் துடிப்பான இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றெல்லாம் கூறப்பட்டாலும், ராணுவ வீரர்களுக்காகச் செலவழிக்கும் தொகையை மட்டுப்படுத்தும் நோக்கம் மட்டுமே இதற்கான உண்மையான காரணமாகக் கூறப்படுகிறது. இந்திய அரசு, தனது பட்ஜெட்டில் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவரு கிறது. கடந்த 2022-23 பட்ஜெட்டில், ராணுவத்துக் கான நிதி ஒதுக்கீடு 9.8% அதிகரிக்கப்பட்டு 5.25 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. பொதுவாக ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பில், ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் குறைந்தபட்சம் 17 ஆண்டு காலத்துக்கு பணிப்பாதுகாப்பு உண்டு. அதற்குப் பிறகும் மருத்துவக்காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பிற சலுகைகள் பலவும் தொடரும். ஆனால் அக்னிபத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, நான்காண்டு கள் ஒப்பந்தத்தின் காரணமாக, ராணுவ வீரர்களின் காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பல சலுகைகள் பறிக்கப்படுவதால், பெரிய அளவில் மிச்சப்படுத்த முடிகிறது.

Advertisment

dd

போராட்டத்தில் இளைஞர்கள்

நான்கே ஆண்டுகளோடு ராணுவத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற விதிமுறை, ராணுவத்தில் சேரும் லட்சியக்கனவோடு இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. 'அக்னிபத்' பெயருக்கேற்ப இத்திட்டத்தின் அறிவிப்புக்குப்பின் இந்தியாவி லுள்ள பல மாநிலங்கள் கொழுந்துவிட்டு எரிகின் றன. நான்காண்டுகள் மட்டுமே பணி, வயதுவரம்பு போன்ற அறிவிப்புகளால், ஏற்கெனவே கொரோனா காலகட்டத்தில் இரண்டாண்டுகளுக்கும் மேல் ராணுவத்தில் சேரும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பலரின் கனவும் சிதைந்துபோனது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் வன்முறையில் இறங்கினார்கள். அந்த வன்முறை தற்போது ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, டெல்லி, தெலுங்கானா என இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.

Advertisment

agnipath

பீகார் மாநிலத்தில் பல்வேறு ரயில்நிலையங் களுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கு நின்றுகொண்டிருக்கும் ரயில்களுக்கு தீ வைத்தனர். பெகுசராய் மாவட்டத்தில் ரயில் நிலையத்தினுள் புகுந்த இளைஞர்கள், ரயில்களுக்கு தீ வைத்ததோடு, கல்லெறிச் சம்பவத்திலும் ஈடுபட்டனர். சமஸ்திப்பூர் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகளுக்குத் தீ வைத்ததில், இரண்டு பெட்டிகளும் கொழுந்து விட்டு எரிந்தன. உத்தரப்பிரதேசத்தில் பல்லியாவி லுள்ள ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ரயில் பெட்டிக்கு தீவைத்தனர். ரயில் நிலைய அலு வலகத்தினுள் புகுந்து அங்குள்ள பொருட்களை அடித்துநொறுக்கி சேதப்படுத்தினர். ரயில் நிலை யங்களில் தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள், ரயில் தண்டவாளத்தின்மீது அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதேபோல, பல்வேறு மாவட்டங்களில் பா.ஜ.க. அலுவலகங் களுக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அலுவலகத்தை அடித்து நொறுக்கி தீவைத்தனர். கல்வீசிச் சேதப்படுத்தினார்கள்.

ஹரியானா மாநிலம் குருகிராமில் போராட்டம் அதிகரித்ததால், அதைத்தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. தெலுங்கானா ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்களின் வன்முறையைக் கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியிலும் பாலியா ரயில் நிலையத்திலும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினார்கள். ரயில் நிலையங்களைக் குறிவைத்து போராட்டக்காரர்கள் தாக்கிவருவதால், நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடந்த வன்முறையில், பீகார் மாநிலம், மேற்கு சம்பாரண் மாவட்டத்தில், பெட்டியா என்ற இடத்தில், துணை முதல்வர் ரேணு தேவியின் வீடு தாக்குதலுக்குள்ளானது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, "ராணுவத் தில் சேரத்துடிக்கும் இளைஞர்களை தீயில் இறக்கி நடக்கவிட்டு அவர்களின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம்" என்று மோடிக்கு அறிவுறுத்தியுள் ளார். ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதில் "இத்தகைய நடவடிக்கை நாட்டின் எதிர்காலத்துக்கு மிகவும் ஆபத்தானது" என்று சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியிருக்கிறார். அக்னிபத் திட்டத்தின் தேவை குறித்து ட்வீட் செய்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா காரணமாக இரண்டாண்டுகளாக ராணுவத்துக்கு ஆளெடுப்பது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதைச் சரிசெய்வதற்காகவும், நாட்டிலுள்ள இளைஞர்கள் மீது அக்கறை கொண்டும் நரேந்திர மோடி இத்த கைய முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது எழுந்துள்ள கடுமையான எதிர்ப்புக்களை அடுத்து, அக்னிபத் திட்டத்திற்கான வயது வரம்பை, நடப்பாண்டுக்கு மட்டும் 21 வயதிலிருந்து 23 வயதாக உயர்த்தியுள்ளனர். அதேபோல், அக்னிபத் திட்டத்திலிருந்து விடுவிக்கப்படும் வீரர்களுக்கு, அவர்களுக்கேற்ற பணியில் நியமிப்பது குறித்தும் ஒன்றிய அரசு ஆலோசித்துவருகிறது. பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் சிலவற்றில், அக்னி வீரர்களுக்கு காவல் துறையில் பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ag

முன்னாள் ராணுவ வீரர்கள் கருத்து

அக்னிபத் திட்டம் குறித்து ஓய்வுபெற்ற ராணுவத்தினர் சிலரிடம் கேட்டபோது, "இத் திட்டத்துக்கான செயல்பாடுகளை இரண்டாண்டு களுக்கு முன்பே ஒன்றிய அரசு தொடங்கியிருந்தது. இடையில் பிபின் ராவத் திடீர் மறைவையடுத்து சற்று கிடப்பில் போடப்பட்டு தற்போது அறிவித்துள்ளார்கள். பொதுவாக, ராணுவத்திலிருந்து அடுத்த ஆண்டில் 1000 பேர் பணி ஓய்வு பெறப்போகிறார்கள் என்றால், அதற்குப் பதிலாக 1,000 பேருக்கு பயிற்சியளிப்பது இப்போதே தொடங்கப்படும். இதுபோல் ஆட்களைச் சேர்ப்பதும், பணி ஓய்வும் சீராக நடைபெற்றுவரும். ஆனால், கொரோனா பொதுமுடக்கம் காரணமாகக் கடந்த இரண் டாண்டுகளாக எந்தவித ஆட்சேர்ப்பு நடவடிக்கை யும் ராணுவத்தில் எடுக்கப்படவில்லை. ஆனால், பணி ஓய்வு பெற்றுச்செல்வது தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. தற்போது ராணுவத்துக்கு அதிக வீரர்களைச் சேர்க்க வேண்டியிருப்பதால், சிக்கன நடவடிக்கைக்காக இத்திட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகத் தெரிகிறது.

தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும், ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டையும் நான்காண்டுகளுக்குப் பின் காலி செய்வது வேதனைக்குரியது. நான்காண்டுகளுக்குப் பின் அவர்களில் 25% பேரை திறமை அடிப்படை யில் ராணுவத்தில் தக்கவைக்கப்போவதாகக் கூறுகிறார்கள். 6 மாத பயிற்சிக்காலம் போல மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளுக்குள் ஒரு ராணுவ வீரரின் திறமையைக் கண்டறிவது அவ்வளவு எளி தல்ல. இப்படி ராணுவ வீரர்களுக்கு நியாயமாகத் தரப்பட வேண்டிய நிதியைக் குறைக்கும் முயற்சிக்குப் பதிலாக, தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம். எண்ணற்ற வகைகளில் நிதியை வரம்புக்கு மீறிச் செலவழிப்பதைக் கட்டுப்படுத்தி னாலே நிறைய மிச்சப்படுத்தலாம். அதைவிட்டு விட்டு அக்னிபத் போன்ற திட்டங்களைக் கொண்டுவருவது ராணுவ வீரர்களை வருத்தப்பட வைக்கவே செய்யும். பீகார் போன்ற மாநிலங்களில் ராணுவத்தில் சேரும் ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. எனவே தான் அங்கே எதிர்ப்பு வலுவாக உள்ளது. ஒன்றிய அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்' என்றார்கள்.

நாடெங்கும் அக்னியை அணைக்குமா ஒன்றிய அரசு?