நான்கு ஆண்டுகால எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் நடந்த ஊழல்களை துறைவாரியாக ஆய்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. துறையின் இயக்குநர் டி.ஜி.பி. கந்தசாமியுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு ஆய்வுப் பணிகள் வேகமெடுக்கின்றன. உள்ளாட்சி, நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணி, போக்குவரத்து ஆகிய துறைகளின் வரிசையில் தற்போது பால்வளமும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கியிருக்கிறது.
தமிழக பால்வளத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆவின் நிறுவனத்தின் வருடாந்திர வரவு செலவு 65,000 கோடி ரூபாய். ஆனால், தமிழகம் முழுவதும் ஆவின் ஒன்றியங்களுக்குப் படியளக்கும் பால் உற்பத்தியாளர்களோ பால் விவசாயிகளோ இப்போதும் வறுமையில்தான் இருக்கிறார்கள். ஆவின் நிறுவனம் என்பது கூட்டுறவுத் துறையின் சட்டதிட்டங்களின்படி உருவாக்கப் பட்டிருப்பதால் ஆவின் நிறுவனத் திற்கு பால் உற்பத்தியாளர்கள்தான் முதலாளிகள். ஆனால், அதனை மறந்துவிட்டு, ஆவினின் உயரதி காரிகளாக வரும் ஐ.ஏ.எஸ். அதி காரிகள் முதல் பொது மேலாளர்கள் வரை முதலாளிகளாக வலம் வருவதும் கோடிக்கணக்கில் லஞ்சம் பெறுவதும் தான் துரதிர்ஷ்டமானது என்கிறார் ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளர் ஒருவர்.
இப்படிப்பட்ட சூழல்களால், ஆவின் நிறுவனத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊழல்கள் புரையோடியிருக்கும் நிலையில் தற்போது 2 மெகா ஊழல்கள் அம்பலமாகியிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பால்வளத்துறையின் அதிகாரிகள், "தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் 23 மாவட்ட பால் ஒன்றியங்கள் இருக்கின்றன. இதில், மதுரை, தேனி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், காஞ்சிபுரம்-திருவள்ளூர் ஆகிய மாவட்ட பால் ஒன்றியங்கள் மற்றும் சென்னை நந்தனத்திலுள்ள ஆவின் தலைமையகம் ஆகியவற்றில் மேனேஜர், டெபுடி மேனேஜர், டெக்னீசியன், ப்ரைவேட் செக்ரட்டரி, இளநிலை பொறியாளர் என 15-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு 236 நபர்களை நியமிக்க முந்தைய எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் திட்டமிடப்பட்டது.
அதற்கான உத்தரவை ஆவினின் அப்போதைய நிர்வாக இயக்குநர் (எம்.டி.) வள்ளலார் ஐ.ஏ.எஸ்.க்கு பிறப்பித்தார் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி. இந்த பணியிடங்கள் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் திரட்ட வள்ளலாருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு வள்ளலார் சம்மதிக்கவில்லை. இதனால் வள்ளலாரை உடனடியாக மாற்றிவிட்டு ஆவின் எம்.டி.யாக நந்தகோபாலை கொண்டுவந்தார் ராஜேந்திரபாலாஜி. பதவிகளின் தன்மைக்கேற்ப 10 லட்சம் முதல் 50 லட்சம்வரை ரேட் ஃபிக்ஸ் செய்யப்பட்டு நபர்களை கண்டறியும் பணிகள் வேகமெடுத்தன.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை 26-2-2021-ல் வெளியிட்டது தேர்தல் ஆணையம். அப்போதிலிருந்தே நடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. இதனால் பதட்டமடைந்த ராஜேந்திரபாலாஜி மற்றும் நந்தகோபால் கூட்டணி, அதுவரையில் பணம் வசூலிக்கப்பட்டிருந்த 236 நபர்களுக்கும் முன் தேதியிட்டு பணி நியமன ஆணை வழங்கியது. மேற்கண்ட 8 மாவட்ட பால் ஒன்றியம் மற்றும் ஆவின் தலைமையகத்தில் 236 பேரும் பணியில் அமர்த்தப்பட்டனர். ராஜேந்திரபாலாஜிக்கு எல்லாமுமாக இருக்கும் பலராமன் என்பவர் இதனை முழுமையாக கவனித்துக் கொண்டார். மீதமுள்ள 147 பணியிடங்களுக்கு ஆட்களை கண்டறிவதையும் துரிதப்படுத்தினார் ராஜேந்திரபாலாஜி.
இந்த நிலையில், முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மே 7-ந் தேதி பதவியேற்பது முடிவான நிலையில், அ.தி.மு.க. நிர்வாகத்தின் கீழ் அவசர அவசரமாக மே-4 மற்றும் மே-5 ஆகிய தேதிகளில் சில பணி நியமனங் களையும் நடத்தினர். இந்த நியமனங்களுக்கான எழுத்து தேர்வில் பணம் கொடுத்த கேண்டிடேட்டுகளுக்கு கேள்வித்தாளை ஆவின் நிர்வாகமே முன்கூட்டி ரகசியமாக கொடுத்து எழுத வைத்தது. அதேபோல, நேர்முகத் தேர்வு நள்ளிரவு நடந்தது. அன்றைய தினமே பணி நியமனத்துக்கான ஒப்புதலை வழங்கினார் நந்தகோபால். தேர்வில் தோல்வியடைந்த சிலருக்கு மதிப்பெண்களை அதிகப்படுத்திப் போட்ட கூத்துகளும் நடந்தன. நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது சட்டவிதிகளுக்குப் புறம்பாக நடக்கும் பணி நியமனங்களை தடுத்து நிறுத்துமாறு தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதாசாஹுவுக்கு அவசர மின்னஞ்சல் அனுப்பினார் வழக்கறிஞர் ஆதித்விஜய். இதனை விசாரித்த சத்யபிரதாசாஹு, புகார் உண்மையென அறிந்ததும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு பால் வளத்துறையின் உயரதிகாரிக்கு உத்தரவிட்டார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நியமனங்கள் மூலம் திரட்டப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் துறையின் அ.தி.மு.க. அமைச்சர், துறையின் உயரதிகாரி, ஆவின் நிர்வாக இயக்குநர், மாவட்ட ஒன்றியங்களின் சேர்மன்கள், பொதுமேலாளர் என படிநிலைகளின் அடிப்படையில் பங்குகள் பிரிக்கப்பட்டன. இந்த பணி நியமனங்களில் நடந்துள்ள ஊழல்களும், முறைகேடுகளும் ஆட்சி மாற்றத்திற்குப் பின் தி.மு.க. ஆட்சியின் உயரதிகாரிகளுக்கு சென்றிருக்கிறது. இதன்மீது நேர்மையாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் தேனி மாவட்ட பால் ஒன்றிய சேர்மன் ஓ.பி.ராஜா (ஓ.பி.எஸ். சகோதரர்) உட்பட பலரும் சிக்குவார்கள்'' என்று விவரிக்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் பால், சோழிங்கநல்லூர், அம்பத்தூர், மாதவரம், காக்களூர் ஆகிய 4 பால் பண்ணைகளிலும் 4 வகையான பால் பாக்கெட்டுகளாகவும், பல்வேறு உப பொருட்களாகவும் உருமாற்றம் செய்யப்பட்டு, சென்னையில் விநியோகிக் கப்படுகின்றன. சென்னையில் ஒரு நாளைக்கு 13 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. இதில் 7 லட்சம் லிட்டர் பால், முன்கூட்டியே பணம் செலுத்தும் மாதந்திர அட்டைதாரர்களுக்கும், மீதமுள்ள 6 லட்சம் லிட்டர் பால் ஹோட்டல்கள், டீ கடைகள், மளிகை கடைகள், ஷாப்பிங் மால்கள் என பல்வேறு வர்த்தக இடங்களுக்கும் விற்கப்படுகிறது.
இந்த 6 லட்சம் லிட்டர் பாலையும் 4 பால் பண்ணைகளிலிருந்தும் வாங்கி வந்து வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பதற்காக 50-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை டீலர்கள் சென்னையில் இருந்தனர். அப்படி விற்பனை செய்ய ஒரு லிட்டர் பாலுக்கு 2 ரூபாய் 50 காசுகள் கமிஷனாக அவர்களுக்கு கொடுத்தது ஆவின் நிறுவனம். இதனை ஆவின் பொது மேலாளர் (மார்க்கெட்டிங்) ரமேஷ்குமார் கவனித்துவந்தார். ஒரு லிட்டருக்கு 25 பைசா கமிஷன், ரமேஷ்குமார் வசூலித்துக்கொள்வார்.
50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து கமிஷன் வசூலிப்பது சிரமமாக இருந்ததால் அதனை சுருக்கும் வகையில் மொத்த விற்பனையாளர்களில் தனக்கு மிக நெருக்கமான 11 நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களை சூப்பர் ஸ்டாக்கிஸ்டுகளாக நியமித்து ஹோல்சேல் டீலர்ஷிப்பை மொத்தமாக கொடுத்தார் ரமேஷ்குமார். அவர்களுக்கான கமிஷன் தொகையை 2 ரூபாய் 50 காசுகளிலிருந்து 75 பைசாவை கூடுதலாக்கி 3 ரூபாய் 25 பைசாவாக நிர்ணயித்தார். இந்த 75 பைசாவில் 50 காசுகள் ரமேஷ்குமாருக்கு கொடுத்துவிடவேண்டும்.
இதன்மூலம் தினசரி 3 லட்சம் ரூபாய் என வருடத்திற்கு சுமார் 11 கோடி ரூபாய் ரமேஷ்குமாருக்கு கிடைத்து வருகிறது. இதுமட்டுமல்ல இவரது நிர்வாகத்தில் பல்வேறு இனங்களில் ஆவினுக்கு 61 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என ரமேஷ்குமார் மீது ஆதாரப்பூர்வமாக குற்றம்சாட்டியிருக்கிறது தணிக்கைத்துறை. பொது மேலாளராக கடந்த 4 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கும் ரமேஷ்குமாரின் இத்தகைய ஊழல்களை அறிந்து அவரை கன்னியாகுமரிக்கு தூக்கியடித்தார் ஆவின் எம்.டி.யாக இருந்த காமராஜ் ஐ.ஏ.எஸ். ஆனால், ராஜேந்தி ரபாலாஜிக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்து தனது இடமாறுதலை ரத்து செய்யவைத்தார் ரமேஷ்குமார்.
இப்படிப்பட்ட சூழல்களின் பின்னணியில்தான் ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, பால்வளத்துறையின் செயலாளராக டி.எஸ்.ஜவஹரையும், ஆவின் நிர்வாக இயக்குநர் நந்தகோபாலுக்கு பதிலாக கந்தசாமியையும் நியமித்தது. இவர்கள் மூலம் ஆவின் ஊழல்கள் தடுக்கப்படும் என்றும், ஊழல்களுக்கு காரணமான ராஜேந்திரபாலாஜி மற்றும் ஆவின் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி தண்டிக்கப்படுவார்கள் எனவும் பால் உற்பத்தியாளர்களும் முகவர்களும் எதிர்பார்த்தனர். அதற்கேற்ப தலைமைச்செயலாளர் இறையன்பு மற்றும் உயரதிகாரிகளின் கவனத்துக்கு இந்த புகார்கள் சென்றன. அதனை விசாரித்து புகார்கள் உண்மை என அறிந்ததும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க பால்வளத்துறையை கவனிக்கும் முதல்வரின் நான்காவது செயலாளர் அனுஜார்ஜையும், துறையின் செயலாளர் ஜவஹரையும் கேட்டுக்கொண்டார் இறையன்பு. அதன்படி ஆவின் எம்.டி. கந்தசாமியை அழைத்து உத்தரவிட்டார் அனுஜார்ஜ். அதேபோல, ரமேஷ்குமாரை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் எனவும் ஜவஹர் உத்தரவு பிறப்பித்தார். இந்த இடத்தில்தான் மீண்டும் ஒரு ட்விஸ்ட் நடந்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய உயரதி காரிகள்,”ரமேஷ்குமாரை இடமாறுதல் செய்து விட்டுதான் விசாரணையை துவக்கியிருக்க வேண்டும். அதற்கேற்ப ரமேஷ்குமாரை இடமாறுதல் செய்ய கந்தசாமி நடவடிக்கை எடுத்தபோது, தி.மு.க.வின் தோழமைக்கட்சி தலைவர் ஒருவரின் உதவியை ரமேஷ்குமார் நாடினார். அந்த தலைவரின் தலையீட்டால் இடமாற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல, 4 ஆண்டுகால ஊழல்களுக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசா ரணைக்கு பரிந்துரைக்கும் ரிப்போர்ட்டை தயாரிக்குமாறுதான் கந்தசாமிக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், அப்படிப்பட்ட விசாரணை நடந்தால் நான் சிக்கிக்கொள்வேன் என உயரதிகாரிகளிடம் ரமேஷ்குமார் வலியுறுத்த, 2021 ஜனவரி முதல் நடந்த பணி நியமனங்களுக்கு மட்டும் மாநில விஜிலென்ஸ் விசாரணை கோரும் ரிப்போர்ட் தயாரானது.
இதற்கிடையே, மாநில விஜிலென்ஸ் விசாரணைக்கு உத்தரவிடபடவிருக்கிறது என்பதையறிந்து பதட்டமான ராஜேந்திரபாலாஜி, தனது பினாமியான பலராமனிடம் சில விசயங்களைச் சொல்ல, தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரை அவசரம் அவசரமாக சந்தித்தார் பலராமன். இந்நிலையில், மாநில விஜிலென்ஸ் விசாரணை என்பது ஆவினில் உள்ள விஜிலென்ஸ் விசாரணையாக மாற்றி யமைக்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், ஊடகத்தினரைச் சந்தித்து... "ஆவின் பணி நியமன முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்தார்.
ரமேஷ்குமாரிடம் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது, "என்னுடைய எதிரிகள் செய்கிற வேலை இது. என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. தணிக்கைத் துறையில் சொல்லப்படுகிற இழப்புகளுக்கு, அதிகாரிகளிடம் பதிலளித் திருக்கிறேன். உயரதிகாரிகளுக்குத் தெரி யாமல் நான் எதையும் செய்திட முடியாது'' என்கிறார்.
நேர்மையான நிர்வாகத்தைக் கொடுக்க நினைக்கும் முதல்வர் ஸ்டாலினின் நோக்கத்தை நிறைவேற்ற தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பிறப்பித்த உத்தரவுகளையே துறையில் உள்ளவர்கள் நீர்த்துப்போக வைத்திருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆவினில் இன்னமும் அ.தி.மு.க. ஆட்சிதானா என கேட்கிறார்கள் உண்மை அறிந்தவர்கள்.