ஃபேஸ்... பழசு! நியூஸ்... புதுசு!

sarojadeviசென்னை எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து ""என்னால் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. ஆனால் எம்.ஜி.ஆரின் ஆட்சியைத் தரமுடியும்'' என பேசி... அரசியல் பரபரப்பை உருவாக்கினார் ரஜினி.

எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு, எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் ஜோடியாக நடித்த நாயகிகளுள் ஒருவராகவும், "எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான ஜோடி' என எம்.ஜி.ஆர். ரசிகர்களால் சிலாகிக்கப்படுபவருமான சரோஜாதேவி... மிகுந்த கோபத்தில் இருக்கிறார்.

என்னவாம் சேதி?

Advertisment

""இந்த சிலை திறப்புவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி சரோஜாதேவியிடம் "எம்.ஜி.ஆர். கல்வி ஆராய்ச்சி நிறுவனம்' நிறுவனர் ஏ.சி.சண்முகம் கேட்டுக்கொண்டதுடன், "எம்.ஜி.ஆரை நன்கு அறிந்த பிரபலங்களில் இப்போது இருக்கும் முக்கியமானவர் நீங்கள்தான். ரஜினியுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர். சிலையை நீங்களும் திறந்துவைக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டதால்... பெங்களூருவிலிருந்து தனது சென்னை வீட்டுக்கு வந்தார் சரோஜாதேவி.

விழா அரங்கிற்கு தன்னை அழைத்துச் செல்ல வந்த காரை பின்னால் வரச்சொல்லிவிட்டு... எம்.ஜி.ஆருடன் நடித்த நாயகிகளுள் ஒருவரான நடிகை லதாவை தன் வீட்டுக்கு வரச்சொல்லி... லதாவின் காரிலேயே உற்சாகமாக வந்து சேர்ந்தார் சரோஜாதேவி.

"ரஜினி வரும்வரை இங்கே வெய்ட்பண்ணுங்கள்' என... எம்.ஜி.ஆர். விருது பெற வந்திருந்த நட்சத்திரங்களுடன் தங்கவைக்கப்பட்டார் சரோஜாதேவி.

Advertisment

ரஜினி விழா இடத்திற்கு வந்ததும்... காத்திருப்பு அறையில் இருந்த பிரபு உள்ளிட்ட சிலரை ஜாடைமாடையாக சமிக்ஞை செய்து அழைத்துக்கொண்டு போனார்கள் சிலை நிறுவப்பட்ட இடத்திற்கு.

அதாவது... இவர்கள் தங்கியிருந்த இடம் விருதுவிழா மேடைக்கு அருகில்! சிலை திறப்பு விழாவோ இன்னொரு இடத்தில்.

அங்கே... ரஜினி சிலையைத் திறந்து வைத்த நிகழ்வு நடந்துகொண்டிருக்க... அது தெரியாமல் சரோஜாதேவி இங்கே காத்திருந்தார்.

சிலை திறக்கப்பட்ட பிறகு... வந்த விழா ஏற்பாட்டாளர்கள் "சிலை திறப்பு விழா முடிஞ்சது. நீங்கள்லாம் விருதுவிழா மேடைக்கு வாங்க' என அழைக்க... எல்லா நட்சத்திரங்களும் கிளம்பினர்.

jamuna

சரோஜாதேவி பயங்கர டென்ஷனாகிவிட்டார்.

"ரஜினியும் நானும் சேர்ந்து சிலை திறக்கணும்னு சொல்லித்தானே கூப்பிட்டீங்க. நானும் எல்லா வேலைகளையும் விட்டுட்டு வந்தேன். இப்படி இன்சல்ட் பண்ணிட்டீங்களே? ரஜினி கையால் விருது வாங்கவா நான் வந்தேன்?' என கோபமாக சரோஜாதேவி... விழாவைப் புறக்கணித்துவிட்டு, தனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காரில் ஏறி வீட்டுக்கு வந்துவிட்டார்.''

சிவாஜி, ஜெய்சங்கர்... உட்பட அன்றைய பிரபல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஜமுனா. மறைந்த "நடிகையர் திலகம்' சாவித்திரியின் நெருங்கிய தோழி.

தமிழ்-தெலுங்கில் "மகாநதி' என்ற பெயரில் சாவித்திரியின் வாழ்க்கை திரைப்படமாகி வருகிறது. இதில் சாவித்திரியாக கீர்த்திசுரேஷ் நடித்துவருகிறார்.

savithiri

""சாவித்திரி வாழ்க்கையை படமாக்குபவர்கள்... சாவித்திரியின் தோழியான என்னிடம் ஆலோசிக்கவில்லை. உண்மை தெரியாமல் எப்படி படம் எடுப்பார்கள்? சாவித்திரியாக நடிக்கிற கீர்த்திசுரேஷுக்கு... அதற்கான தகுதியும் இல்லை'' என கோபப்பட்டிருக்கிறார் ஜமுனா.

கீர்த்திசுரேஷ் கூலாக...

"சாவித்திரி மேடம் நிறைய காபி சாப்பிடுவார். எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. அவருக்கு கிரிக்கெட்டில் ஈடுபாடு உண்டு. எனக்கும் ஈடுபாடு உண்டு. சாவித்திரியம்மா போலவே நானும் கார் ஓட்டுவதில் விருப்பமானவள். அவருக்கு நீச்சலடிப்பது பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். சாவித்திரியம்மாவின் மகள் சாமுண்டீஸ்வரி என்னிடம் சாவித்திரியம்மாவின் நடை, உடை மற்றும் மேனரிஸங்களைச் சொல்லியுள்ளார். அதை உள்வாங்கித்தான் நடித்து வருகிறேன்'' எனச் சொல்கிறார்.

-இரா.த.சக்திவேல்