ஃப்ரீடம் 251’ இந்தப் பெயரை நினைவிருக்கிறதா? பிரதமர் மோடியின் பிரஸ் மீட்டைப் போலவே, இந்தியர்கள் இதுவரை பார்த்திராத ஸ்மார்ட்போன் மாடல்தான் அது.
உலக ஸ்மார்ட்போன் சந்தை யாக இந்தியா மாறிக்கொண்டிருந்த சமயம். யாரும் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ரூ.251 என்ற மலிவான விலையில், இந்த ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது நொய்டாவில் இயங்கிவந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம். அன்றுவரை உள்ளூரில்கூட தெரியாமலிருந்த இந்த நிறுவனத்தைப் பற்றி, சர்வ தேச ஊடகங்களே தலைப்புச்செய்தி எழுதின. பா.ஜ.க.வினர் கொடுத்த ஃப்ரீ புரமோஷனில், இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் ஃப்ரீடம் மொபைலைப் பற்றித்தான் பேச்சு. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா என மோடி அரசின் திட்டங்களை இதற்காக வரிசைப்படுத்தினார்கள்.
2016, பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த இதன் அறிமுக விழாவில், பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கலந்துகொண்டார். தொடக்கநிலை ஸ்மார்ட்போனுக்குரிய எல்லா வசதிகளும் இதில் இருக்குமென்று இதனை அறிமுகம் செய்த ரிங்கிங் பெல்ஸ் சி.இ.ஓ. மோகித் கோயல், “தூய்மை இந்தியா, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களோடும் இந்த போன் இருக்கும்’ என்றார். பிப்ரவரி 18ந்தேதி முதல் ஆன்லைனில் புக்கிங் தொடங்கியது. முன்கூட்டியே பணம் செலுத்தவேண்டிய கட்டாயம் இருந்தாலும், சொற்பக் காசுதானே என்ற மிதப்பில் நான்கைந்தாக ஆர்டர் செய்தார்கள் பலர்.
புக்கிங் தொடங்கிய சில மணிநேரத்தில், ஃப்ரீடம் மொபைல் இணையதளம் திணறியது. புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதில் செய்தி வெளியானது. இந்த புக்கிங்கில் 30 ஆயிரம் போன்களுக்கான பணம் மட்டுமே வசூலிக்கப் பட்டதாகவும், ஏழுகோடி பேர் இதனை வாங்குவதற்காக ரெஜிஸ்டர் செய்திருப்பதாகவும் ரிங்கிங் பெல்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. உண்மையில் பணம் செலுத்தியவர்களின் எண்ணிக்கை இதைவிட பலமடங்கு அதிகமாக இருக்கும் என்றே பேசப்பட்டது.
பிப்ரவரி மாதம் முடிந்தது. புக்கிங் செய்தவர்களுக்கு ஸ்மார்ட்போன் கிடைக்கவில்லை. பிறகு ஜூன் 30க்குள் 25 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பதாகக் கூறி, பின் அதை 2 லட்சமாக சுருக்கியது ரிங்கிங் பெல்ஸ். ஜூலை 2க்கு டெலிவரி தேதி மாற்றப்பட்டது. அப்போதும் எதுவும் நடக்க வில்லை. பணத்தைச் செலுத்தியவர்கள் கொதிக்கத் தொடங்கியதும், முன்கூட்டியே பணம் செலுத்தியவர்களின் அக்கவுண்டுக்கு பணத்தைத் திருப்பி அனுப்பிவிட்டோம் என்றார்கள். அதற்கும் அதிகாரப்பூர்வ தகவலில்லை.
ஜூலை 8ந்தேதி மீண்டும் மோகித் கோயல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ""பிரதமர் மோடிக்கு இலவசமாக ஒரு போன் வழங்குவோம். மற்றவர்களில், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்திருப்பதால், இனி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து வெற்றியாளருக்கு போனை வழங்கப் போகிறோம். முதற்கட்டமாக 5 ஆயிரம் யூனிட்டுகள் கொடுக்கப் படும்'' என தெரிவித்திருந்தார். குலுக்கலும் கலகலப்பை ஏற்படுத்தவில்லை.
இதற்கிடையே, மோகித் கோயல் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். “குறித்த தேதியில் ஸ்மார்ட்போன்களை டெலிவரி செய்ய அரசின் உதவி தேவைப்படுகிறது. இதற்காக இந்த ப்ராஜெக்டில் ரூ.50 ஆயிரம் கோடியை அரசு முதலீடு செய்யவேண்டும். இதன்மூலம், இந்தியா வின் 75 கோடி பொதுமக்களிடம் ஸ்மார்ட்போன் வசதி சென்றடையும். உங்கள் அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் ஊக்குவிக்கலாம் என்று அதில் குறிப்பிடுகிறார். அரசு கண்டு கொள்ள வில்லை.
இந்நிலையில், ஃப்ரீடம் மொபைலுக்கான விநியோகஸ்தர்கள் சிலர், தங்களிடம் பணமோசடி செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக மோகித் கோயல் மீது புகாரளித்தனர். இதில் ஆறுமாத சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. இன் னொருபுறம், இந்திய செல்லுலார் அசோசியேஷன், குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாவது விலை வைத்தால்தான், ஃப்ரீடம் போன் கட்டுப்படியாகும். எனவே, தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் இதுபற்றி விசாரிக்க வேண்டுமெனக் கூறியது.
மேலும், ஃப்ரீடம் 251 ஸ்மார்ட்போனின் அறிமுக விழாவில், தங்களது செல்போனில் ஸ்டிக்கர் ஒட்டித்தான் ரிங்கிங் பெல்ஸ் விளம்பரப் படுத்தியது என்றொரு குண்டைப் போட்டது ஆட்காம் நிறு வனம். அதேபோல் ஆப்பிள் ஐபோனின் ஐகான் களைத் திருடி அதைக்கொண்டு டிசைன் செய்து, ஃப்ரீடம் போனுக்கு விளம்பரம் செய்ததும் அம்பலமானது.
இன்று இந்த போனுக்காக பணம் செலுத்தி விட்டு, காத்திருந்து ஏமாந்துபோன பலருக்கு தெரி யாது, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தை 2018லேயே கோ-டாடி என்ற நிறுவனம் விலைக்குவாங்கிய தகவல். ‘2016ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில் நுட்ப ஊழல், டிஜிட்டல் காலத்து பெரு மோசடி’என்று சர்வதேச ஊடகங்கள் இதுபற்றி மீண்டும் எழுதின. ஒவ்வொருவரிடமும் நூறுரூபாய் வாங்கிக்கொண்டு வடிவேலு பணக்காரர் ஆவதைப் போலவே, மக்களை ஏமாற்றி பலநூறு கோடிகளை ஏப்பம் விட்டிருக்கிறது மோகித் கோயல் மற்றும் அவரது கும்பல்.
தங்களது திட்டங்களைச் சொல்லியே ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மோசடி செய்தது என்றாலும், இதில் பெரியளவில் கவனம் செலுத்தாத அரசுத்தரப்பு, தற்சார்பு பாரதம் என்றொரு புதிய பர்னிச்சரை இப்போது கையில் எடுத்து உடைக்க ஆரம்பித்திருக்கிறது.
- ச.ப.மதிவாணன்