தமிழகத்தின் தலைநகரான சென்னை, கொலைநகரமாக மாறிவருகிறது. கொலை மட்டுமா? திருட்டு, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு, போதைக்குற்றங்கள் என்று சென்னையின் முகமும் முகவரியும் வெகுகொடூரமாக மாறி, ’திக்... திக்’ திகிலை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. சென்னையின் ஆபத்தான தட்பவெப்ப நிலையை வெளிப்படுத்தும் ஒரு சில சம்பவங்களைப் பார்க்கலாம்.
சம்பவம்: 1
கடந்த 10-ந் தேதி, கஞ்சா போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த இரண்டு நபர்களைப் பார்த்த போலீஸ் அவர்களை மடக்கி, அப்படியே அபிராமபுரம் காவல் நிலையத்திற்கு அள்ளிக் கொண்டு வந்தது. அதே காவல்நிலையத்தில் கஞ்சா போதையில் வீட்டுக்கு தீவைத்த இன் னொருவனையும் இழுத்துவந்தனர். அந்த மூன்றுபேரையும் ஓரமாக உட்கார வைத்திருந்தபோது, அவர்கள் தங்களுக்குள்... "நீ எப்படிடா சிக்கினே?'’என்ற ரீதியில் உரையாட, இதைக் கவனித்த காக்கிகள்...
""உங்க மூணு பேருக்கும் என்னடா தொடர்பு?''’என்று அதட்டி விசாரித்தனர். அப்போது அவர்களில் ஒருவன்...
""சார், மூணு மாசத்துக்கு முன்னாடி கிரீன்வேஸ் சாலை பறக்கும் ரயில்நிலைய குடோன்ல, ஒரு பெண்ணைக் கூட்டிட்டு வந்து உல்லாசமா இருந்தோம். எங்க மொரட்டுத்தனத்தில் அந்தப் பொண்ணு செத்துடுச்சு. அவள் உடலை, அந்த குடோன்லயே மறைச்சி வச்சிட்டோம்''’என்று அதிரவைத்தான். கஞ்சா போதையில் உளறுகிறானோ? என்று அவர்கள் சந்தேகப்பட்டாலும்... சரி, போய்தான் பார்ப்போமே என்று கிரீன்வேஸ் ரயில்நிலைய குடோனுக்குச் சென்றனர். அங்கே ஒரு எலும்புக்கூடு அவர்களை வரவேற்று அதிரவைத்தது. ஸ்பாட்டே பரபரப்பானது. தடயவியல் டீம் உட்பட பலரும் வந்து இறங்கினர். இந்தத் தகவல் சிட்டி போலீசார் அனைவருக்கும் போக, பதட்டம் பரவியது. கிடைத்த எலும்புக்கூட்டை ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த எலும்புக்கூடு கிடைத்த இடத்திலிருந்து சில நூறுமீட்டர் தூரத்தில்தான் முதல்வர் எடப்பாடியும், அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களும் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வி.வி.ஐ.பி.க்களின் ஏரியாவிலேயே இப்படி ஒரு கொடூரக் கொடுமையா? என்ற திகைப்பு அதிகாரிகளிடம் இருந்தது.
இதுதொடர்பாக, மாநகர கிழக்கு மண்டல காவல் இணைஆணையர் பாலகிருஷ்ணனிடம் நாம் கேட்டபோது, ""கஞ்சா ஆசாமிகளிடம் இருந்து எதிர்பாராத விதத்தில் இந்த தகவல் கிடைச்சிருக்கு. அங்க பெண்பிணம் இருந்ததாச் சொல்லப்பட்டது, ஆனால் அதன்மீது ஆண்கள் அணியும் டிராக்ஸ் பேண்ட் இருந்தது. அதன் இடுப்பு மற்றும் கால் எலும்புகள் ஆணுக்கானது போல் இருந்தது. தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி யிருக்கிறோம்''’என்றார்.
""அவர்கள் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றதாகச் சொல்லியிருக்கிறார்களே?''’’ என்றோம்.
""விசாரணை நடந்துக்கொண்டு இருக்கிறது. தடயவியல் ஆய்வறிக்கை வரட்டும்''’என்று முடித்துக்கொண்டார். அந்தப் பகுதி ஆட்டோக்காரர்களிடம் நாம் விசாரித்தபோது, ""அந்தப் பசங்க ஒரு பொண்ண கூட்டிட்டு வர்றதைப் பார்த்திருக்கோம்''’என்றார்கள் தயங்கித் தயங்கி. "இந்த விவகாரத்தில் பெண்ணின் சடலத்தைத் தேடப்போய், ஆண் எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது. இது எப்படி? இது வேறு ஒருவரின் எலும்புக்கூடா? அப்படியானால் அந்தப் பெண்ணின் எலும்புக்கூடு எங்கே?' என்ற கேள்விக்கு காவல்துறைதான் பதில் சொல்லவேண்டும்.
சம்பவம்: 2
பரபரப்பான கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் நாளொன்றுக்கு இரண்டு லட்சத் திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்துசெல்கின்றனர். எப்போ தும் பரபரப்பாகக் காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில், கடந்த 10-ஆம் தேதி அதிகாலை, 2 மணி அளவில் ஒரு பெண் அலறும் சத்தம், இருளைக் கிழித்துக்கொண்டு கேட்டது. அக்கம் பக்கம் தூங்கிக் கொண்டி ருந்தவர்கள் திகைத்து எழுந்தனர். அப்போது... ஒரு பெண் உடலெல்லாம் தீப்பற்றி எரிந்த நிலையில், தரையில் உருண்டு புரண்டு கதறிக்கொண்டிருந்தாள். அருகே ஓர் ஆணும் எரிந்துகொண்டிருந்தான். உடனே காவல் துறைக்குத் தகவல் போனது. அப்போது தீப்பற்றி எரியும் பெண்ணைப் பார்த்து கதறி அழுத ஒரு மர்ம நபரை... அங்கிருந்தவர்கள் மடக்கி, அவர்தான் கொளுத்தி இருப்பார் என்ற சந்தேகத்தில், அடித்து உதைத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.
"எரிந்தவர்கள் யார்?' என காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியபோது...
எரிந்த அந்தப் பெண், வடபழனியைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி சாந்தி என்பதும், அவருடன் எரிந்தவர் துப்புரவு ஊழியர் முத்து என்பதும், இருவரும் கள்ளக் காதலர்கள் என்பதும் தெரியவந்தது. இந்தக் கள்ளக்காதல் ஜோடி, மன வருத்தத்தில் பிரிந்து வாழ்ந்த நிலையில், சாந்திக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவ ருடன் தொடர்பு ஏற் பட்டதாகவும், இதை சகித்துக்கொள்ள முடியாத முத்து, கஞ்சா போதை யுடன் வந்து, சாந்தியையும் ஸ்ரீராமையும் எரித்துக் கொல்ல முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சியில் சாந்தி மீதும், முத்துவின் மீதுமே பெட்ரோல் பட, அவர்கள் இருவரும் எரிந்த தாகவும் தகவல்கள் கிடைத்தன. இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பலத்த பதட்டத்தை ஏற்படுத்திவருகிறது.
ஏரியா வியபாரிகளோ, ""கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரியது என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அப்படிப் பட்ட இடம்தான் இப்போது பாதுகாப்பில்லாத இடமாகவும், கஞ்சா ஆசாமிகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாகவும், குடிபோதை ஆசாமிகளின் அட்டகாச ஏரியாவாகவும் மாறியிருக்கிறது. இங்கே விபச்சாரத் தொழிலும் அமோகமாக நடக்கிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபடவேண்டிய போலீஸ்காரர்களோ, அதில் அலட்சியம் காட்டுகிறார்கள். மெயின் எண்ட்ரி கேட்டில் யாரையும் சோதனை செய்வதில்லை. சோதனைக் கருவிகளும் வேலை செய்யாது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிட்டது. குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலே இங்கு இருக்கிறது'' என்கிறார்கள் வருத்த வருத்தமாய்.
சம்பவம்: 3
புளியந்தோப்பு குருசாமி நகரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான புஷ்பாவுக்கு, சுப்ரியா என்கிற மகள் இருந்தார். சுப்ரியாவுக்கும் ரூபன் என்பவருக்கும் திருமணமாகி, அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுப்ரியாவும் கள்ளச் சந்தையில் தன் அம்மாவைப் போலவே போலீசுக்கு மாமுல் கொடுத்து கஞ்சா மற்றும் மது விற்பனை செய்துவந்திருக் கிறார். இந்த நிலை யில் கடந்த வருடம் ரூபனின் அண்ணன் ரமேஷ் என்ற நாய் ரமேஷை கொல்ல... சுப்ரியா மூளையாகச் செயல்பட்டதாக, கணவர் வீட்டா ருடன் அவருக்குப் பகை இருந்து வந்தது.
இந்த நேரத்தில் கொலை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காததால், கடந்த 13-ஆம் தேதி இரவு 9 மணியளவில் சுப்ரியாவின் வீட்டுக்கு வந்த ரூபனின் சகோதரர்கள் ராம்குமார், பிரேம், சுதாகர் உள்ளிட்ட பத்துபேர் கொண்ட கும்பல், சுப்ரியாவை சரமாரியாக வெட்டி யதில், அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்துச் சாய்ந் தார். கூச்சல் கேட்டு அங்குவந்த ஏரியாவாசிகள், சுப்ரியாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும் சுப்ரியா உயிரிழந்தார்.
சுப்ரியாவின் அம்மா, "இந்தக் கொலைக்குப் பழிக்கு பழி வாங்கலாம்' என்று அந்தப் பகுதியே பீதியில் உறைந்திருக்கிறது. ஏரியாவாசிகளோ ’"போலீசாரின் மாமுல் வேட்டையால்தான் இது போன்ற சமூகவிரோத செயல்கள் அதிகரிக்கிறது. கொலை கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற வையும் அதிகரிக்கிறது. இதில் நுண்ணறிவுப் போலீசாரும் உடந்தையாக இருக்கிறார்கள். அதனால் உயரதிகாரிகளுக்கு இதுபோன்ற தகவல்கள் போய்ச்சேர்வதில்லை'’’என்கிறார்கள் ஆதங்கத்தோடு.
சென்னை வாழத் தகுதியற்ற நகரமாக மாறி வருகிறது. பெண்கள் பகலில்கூடத் தனியாக நடமாட அஞ்சும் சூழல் நிலவிவருகிறது. நிமிடத்திற்கு நிமிடம் பெருகிவரும் குற்றச் சம்பவங்களை, மாமூல் போலீஸ்காரர்களை வைத்துக் கொண்டு, எப்படி கட்டுக்குள் கொண்டுவரப் போகிறது காவல்துறை?