தமிழுணர்வும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட சந்தக்கவிஞர் தமிழ் ஒளியின் 97-ஆவது பிறந்தநாள், கடந்த 21-ஆம் தேதி அவர் பிறந்த புதுவை மாநிலத்திலும், தமிழகத்திலும் இலக்கிய அன்பர்களால் கொண் டாடப்பட்டது.
நொந்து கிடப்பவர் வாழவில்லை எனில் நொள்ளை விடுதலை யாருக்கடா?
-என முழக்கமிட்ட தமிழ் ஒளி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வழிவந்தவர். இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ் மரபைப் போற்றுதல், ஒடுக்கப் பட்டோர் விடுதலை, தொழிலாளர் வர்க்க உரிமைகளை முழக்குதல், சோசலிச சிந்தனைகளை விதைத்தல் என்றபடி தனக்கென்று ஒரு கவிப் பாதையை வகுத்துக்கொண்டவர் இவர். "வீராயி', "விதியோ வீணையோ', "மாதவி காவியம்' போன்ற சாகா வரம்பெற்ற படைப்புகளை தமிழுக்கு இவர் அளித்திருக்கிறார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் சிகரம் ச.செந்தில்நாதன், இரா.தெ.முத்து, வே.மணி உள்ளிட்டோர் அடங்கிய தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக்குழு, 2024-ல் தமிழ் ஒளியின் நூற் றாண்டு தொடங்க இருப் பதால், அதை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்றும் சென் னையில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்றும் சென்னையின் சாலை ஒன்றுக்கு அவர் பெயரைச் சூட்ட வேண் டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறது. மேலும், பல்கலைக் கழகம் ஒன்றில் அவர் பெயரில் இருக்கை அமைத்திட வேண்டும் என்றும் வேண்டுகோளை வைத்திருக் கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையி லான தமிழக அரசு, கவிஞர் தமிழ் ஒளியின் கவிதை ஒளியைக் கொண்டாட வேண்டும் என்பது ஒட்டுமொத்த இலக்கிய உலகின் கோரிக்கையாகும்.
-கீரன்
உள்ளாட்சித் தேர்தலிலிலும் போட்டி!
வெற்றியா… தோல்வியா… என்பது அடுத்து, கள மிறங்குவதுதான் முக்கியம் என்பதுதான் தேர்தல் மன்னன் பத்மராஜனின் கொள்கை. குடியரசுத் தலைவர் தேர்தல் முதல், விதவிதமான தேர்தல்களில் வெவ்வேறு ஆளுமைகளை எதிர்த்துநின்ற பத்மராஜன், நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட முடிவுசெய்துள்ளார். இதுவரை இவர் 221 முறை பல்வேறு பதவிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்து கின்னஸ் சாதனை மற்றும் லிம்கா புத்தகங்களில் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திறங்கிய பத்மராஜன், ஏற்கனவே தயார் செய்து எடுத்துவந்திருந்த ஆவணங்களுடன் சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட வி.அலம்பலம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும், அம்மையகரம் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கும், சின்னசேலம் ஒன்றியத்திற்குட்பட்ட 11-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கும், அதே பதினோராவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் என நான்கு பதவிகளுக்குப் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்து, அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
நீட் தேர்வு மற்றும் தோல்வி பயத்தால் தற்கொலை மனநிலைக்கு ஆளாகிறவர்களைப் பார்த்து, "நான் எத்தனையோ தோல்விகளை எதிர்கொண்டும் விடாமல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். உடலில் தெம்பும் உயிரும் உள்ளவரை தேர்தலில் போட்டி யிடுவேன்''’என்கிறார் நம்பிக்கையாக.
-எஸ்.பி.எஸ்.
பாதையால் வந்த மோதல்!
அமைதியான அந்த கிராமம், இரண்டு குடும்பத்தினரால் தகிப்பான தகிப்பில் இருக்கிறது. குமரி மாவட்டம் குன்னங்காடு கிராமம், முழுக்க முழுக்க நெசவாளர்களைக் கொண்ட கிராமமாகத் திகழ்ந்து வருகிறது. இவர்களுக்காக, கூட்டுறவு சங்கம் மூலம் ’நூற்பாவு ஆற்றுவதற்கு ஓரிடத்தை ஒதுக்கிக் கொடுத்தனர். அந்த இடத்திற்கு உரிய வரியையும் அவர்கள் கட்டி வருகின்றனர்.
மேலும், அவர்களுக்கான அந்த இடத்தில் ஒரு கோயிலையும் அப்பகுதி மக்கள் நிறுவி, ஆண்டாண்டு காலமாக சித்திரைத் திருவிழாவையும் கோலாகலமாக நடத்திவருகின்றனர். இப்போது, இந்த கோயிலை மையமாக்கி சிக்கல்கள் வெடித்து வருகின்றன.
இந்தக் கோயிலின் வலது புறத்தில் இரண்டு குடும்பங்கள், பாதையை ஆக்கிரமித்து வீடுகளை கட்டிக்கொண்டு, வசித்து வந்த நிலையில், அவர்கள், தாங்கள் புதிதாக வாங்கிய நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்காக, அந்தக் கோயில் படிகளை உடைத்து நிரவினர். இதை ஊர்மக்கள் தட்டிக் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டது.
அப்போது, அந்த ஆக்கிரமிப்பு நபர்களில் ஒருவர், தன் உடையை அவிழ்த் துக் காட்டி, ஆபாசமாக ஊர்மக்களைத் திட்ட, இதனால் ஏரியாவாசிகள் கொதித்துப் போனார்கள். கோயில் படிக் கட்டுகளை இடித்ததோடு, அதுபற்றிக் கேட்டவர்களை திட்டி அசிங்கப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, மண்டைக்காடு காவல் நிலையத்திலும், குளச்சல் டி.எஸ்.பி.யிடமும் அவர்கள் புகார் கொடுத்தார்கள். இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி நள்ளிரவில் அடியாட்களோடு வந்த அந்த நபர்கள், கோயில் படிகள் இடிக்கப்பட்ட இடத்தில் அவசரமாக கான்கிரீட் பாதை ஒன்றை அமைத்து, அதற்கு "காமராஜர் தெரு' என்று பெயர் பலகையையும் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
போலீஸ் வந்ததும், அந்தக் கும்பல் ஓட்டம் பிடித்துவிட்டது. இந்த விவகாரம், தற்போது கலவரமாக மாறும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது.
-நமது நிருபர்