முதல்வரிடம் முன் வைத்த கோரிக்கை!

பத்திரிகையாளர்களையும் முன்களப்பணியாளர் களாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், அவர் கொரோனா கள ஆய்வுக்காக ஈரோட்டுக்கு 29-ந் தேதி வருகை தந்தார். மறுநாள் காலை, மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்கம் சார்பில், நமது செய்தியாளர் ஜீவா தங்கவேல் தலைமையில் சங்க நிர்வாகிகளான பத்திரிகையாளர்கள் மூர்த்தி, நவீன், ஃபோட்டோகிராபர் ரவிச்சந்திரன், டி.வி.பழனிச்சாமி, சண்முகம், மகேந்திரன், வேலுச்சாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து, அவரது அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.

signal

அப்போது, முதல்வர் நிவாரண நிதிக்கு எங்களால் முடிந்த சிறிய உதவித் தொகை என்று, ஈரோடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் காசோலையை அவர்கள் முதல்வரிடம் வழங்கினர். அந்தச் சந்திப்பின் போது, மாவட்ட அளவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கும் அரசின் அங்கீகார அட்டை வழங்க வேண்டும் என்றும், தாலுகா நிருபர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்றும், ஆந்திர அரசு வழங்குவதுபோல், பத்திரிகையாளர்களில் குழந்தைகளுக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளை வைத்தனர்.

Advertisment

-ஜீவாதங்கவேல்

தடுப்பூசிக்குப் பரிசு

signal

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ள எம்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பிதுரை. இவர் ஒரு போட்டோ கிராபர். அந்தப் பகுதியில் கொரோனா வுக்குப் பலரும் பலியாகி வருவதைப் பார்த்து மனம் வெதும்பிய தம்பிதுரை, "எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்' என்று கிராம மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனாலும் யாரும் அதற்கு முன்வரவில்லை. அதனால், ஒரு டெக்னிக்கைக் கையாள நினைத்த அவர், தான் சேர்த்து வைத்திருந்த 5,500 ரூபாயை எடுத்துக்கொண்டு நேரடியாகக் கடைக்குச் சென்று, எவர்சில்வர் தட்டு, கிண்ணம், டம்ளர், தாம்பூலத் தட்டு, செம்பு, ரப்பர் குடம் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு வந்தார். "கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பரிசு தரப்படும்' என்று அவர் அறிவித்தார். இதனால் கிளியூர், எம்.குன்னத்தூர் பகுதி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முண்டியடித்தனர். அவர்கள் அத்தனை பேருக்கும் பரிசுகளைக் கொடுத்து உற்சாகமூட்டினார் தம்பிதுரை.

சமூக ஆர்வலர்களும் அதிகாரிகளும் தம்பிதுரையின் டெக்னிக்கையும் உள்ளத்தையும் பாராட்டி வருகின்றனர்.

-எஸ்.பி.எஸ்.

ஆக்ஸிஜன் மையம் -சாதித்த யூ-டியூபர்கள்

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள திருவண்ணா மலை மாவட்டத்தில், அங்குள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உரிய ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லாமல் இருந்தது. அதனால் அதை ஏற்படுத்தும் முயற்சியில் ரோட்டரி பிரைட் அமைப்பு களமிறங்கியது. இது குறித்து நம்மிடம் பேசிய அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி அன்பரசு, “"இந்த ஆக்சிஜன் பிளாண்ட் அமைப்பதற்கான மொத்த மதிப்பு 72 லட்ச ரூபாய். அதில் எங்களால் ஆன தொகையை மாவட்ட ஆட்சியரிடம் முதல்கட்டமாக வழங்கினோம். மீத நிதிக்காக யூ-டியூபர்களின் உதவியை எதிர்பார்த்தோம். அவர்கள் செய்த உதவியை மறக்கவே முடியாது''’என்றார்.

signal

பிரபல யூ-டியூபர் ஐயன்.கார்த்திகேயனோ, "’ஆக்ஸிஜன் உற்பத்தி பிளாண்ட்டையும் ஆக்சிஜன் வசதியோடு 500 பெட்டுகளையும் அமைக்கும் பெரிய முயற்சி இது. அதனால் நானும், தமிழ்க் கேள்வி செந்தில்வேல், பிரசன்னா, ஆவுடையப்பன், மதன், ஹாசிப், குருபாய், மாரீஸ், மைனர், சுமி, நக்கலட்டீஸ், அரவிந்த், விஜய் வரதராஜ், ஜென்ராம், பிளாக் ஷிப், ஜென்சன் என 26 யூ டியூபர்கள் இணைந்து "தமிழ் டிஜிட்டல் கிரியேட்டர் அசோசியேஷன்' என்கிற பெயரில், ஏப்பம்பட்டி அணி, பாப்பம்பட்டி அணி என அணிகளை உருவாக்கி, யூடியூப்பில் நிகழ்ச்சி ஒன்றை மே 30-ஆம் தேதி நடத்தினோம். அனைத்து சேனல்களிலும் அது லைவ்வாக ஒளிப்பரப்பப்பட்டது. நிகழ்ச்சி நடக்கும்போதே சுமார் 20 லட்ச ரூபாய் கலெக்ஷன் ஆனது. இது நாங்கள் எதிர்பாராதது. இதேபோல் இந்தியா முழுவதுமுள்ள யூ-டியூபர்களுடன் இணைந்து நடத்திய நிகழ்வில் 50 லட்ச ரூபாயும், கேரளா மாநில யூ-டியூபர்கள் நடத்திய நிகழ்ச்சியில் 1 லட்சமும் வசூலானது''” என்றார் பூரிப்பாய்.

"தமிழ் கேள்வி' யூ-டியூப் செந்தில்வேலிடம் பேசியபோது, "இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக, நடத்த வேண்டும் என்று முடிவெடுத்தோம். என்னை டிக்டாக் புகழ் ஜீ.பி.முத்து போல் பேசச் சொன்னார்கள், ஜென்ராம் தோழர் பாடல் பாடினார். இப்படி ஒவ்வொருவரும் ஜாலியாக நிகழ்ச்சியை நடத்தினோம். நிதி தந்தவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிடும்போது, "என் அண்ணன் இறந்தார், என் தாய் இறந்தார், என் தந்தை இறந்தார்... ஆக்ஸிஜன் இல்லாமல் இனி யாரும் இறக்ககூடாது என்பதற்காகவே நிதி வழங்குகிறேன்' என குறிப்பிட்டி ருந்தார்கள். அதை வாசிக்கும்போதே மனம் கலங்கியது''’என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாடலாசிரியர் யுகபாரதி, தனது பாடல் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு சுவாரஸ்யமாக பதில் சொன்னார். இப்படியாக யூ-டியூபர்கள், ஆக்சிஜன் பிளாண்ட் அமைத்து சபாஷ் போட வைத்திருக்கிறார்கள்.

-து.ராஜா