ரிசையாக நிற்கும் ஆம்புலன்ஸ்களில் இருக்கும் நோயாளிகள் மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நாளொன்றுக்கு 30 ஆயிரத்தை நெருங்கு கிறது கொரோனா தொற்று. சென்னையில் கடும் தாக்கம் என்றால் தமிழ்நாட்டின் கிராமங்களிலும் கண்ணுக்குத் தெரியாத இரண்டாவது அலை பரவியுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்து என எல்லாமும் தட்டுப்பாடாக உள்ளது.

போர்க்கால அடிப்படையில் நிலைமையைச் சமாளிக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணி யன் தலைமையிலான டீம் களத்தில் தீவிரமாகப் பணியாற்றுகிறது. அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர் என்றும், டாக்டர்களே கூட இந்த நோயாளிகளை நெருங்குவதில்லை என்றும் நமக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தபடியே உள்ளன. சென்னையில் அரசு ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 படுக்கைகளும் நிரம்பியுள்ள நிலையில் வெளியே கூடாரம் அமைத்து அதில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது.

c

புழலைச் சேர்ந்த சாந்தா என்பவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளார். சில தினங்களுக்கு முன்பு இவருக்கு நோய்த்தொற்று குறைந்துவிட்டதாகக் கூறி வீட்டிற்கு அனுப்பி விட்டனர் மருத்துவர்கள். வீட்டிற்கு வந்த அடுத்த நாளே பிராண வாயு சுவாசிக்கும் அளவு 70 ஆக குறைந்துவிட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து பிராணவாயு வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மாலை ஆறுமணி அளவில் அழைத்து வந்தனர். இவருக்கு முன்பாக சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையில் நின்றன. எப்படியும் இரண்டு மூன்று மணி நேரங்களில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையில் காத்திருக்க... இரவு முழுவதும் எந்த நடவடிக்கையும் இல்லை. "எங்களை வீட்டிற்கே அனுப்பிவிடுங்கள், நாங்களே பாதுகாத்துக் கொள்கிறோம்' என்றார் அவருடைய மகன் கணேஷ்துரை.

Advertisment

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு நேரில் சென்றோம். படுக்கை வசதியில்லாமல் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன. நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இரவு 12 மணிக்கு மேல்தான் இரண்டு இரண்டு பேராக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். செவிலியர்கள்தான் சிகிச்சை மேற்கொண்டனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் செவிலியர்களே அனைவரையும் கவனிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

c

Advertisment

தொடர்ச்சியான பணிச்சூழலில், மே 11-ந் தேதி செவிலியர் சாமுண்டேஸ்வரி உயிரிழந்தார். இதற்கு முக்கிய காரணமாக செவிலியர்கள் கூறுவது, "கொரோனா பாதிக்கப்பட்ட மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். டாக்டர்கள் போதிய அளவு இல்லை, சீனியர்கள் வார்டுக்கு வருவதில்லை. அவர்களுக்கான பணி அதிகம். மேற்படிப்பு படிக்கும் மருத்துவ மாண வர்கள்தான் இந்த நோயளிகளை கவனித்துவரு கிறார்கள். மற்ற மருத்துவர்கள் கண்டுகொள்வதே இல்லை. செவிலியர்கள் நான்குபேர் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டுபேர் பணி புரிந்துவருகிறோம். அதே போல 6 மணி நேர வேலையை 12 மணிநேரமாக உயர்த்திய நிலையில், கூடுதல் பணி செய்கிறோம். எங்களுக்கு ஓய்வு கிடைப்பதில்லை, டீனும் இதை கண்டுகொள்வதே இல்லை'' என்கிறார்கள். மருத்துவமனையின் வெளியே நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்களில் கொரோனா பாதித்த மக்கள் காத்துக்கிடக்கும் நிலையில்... ஆம்புலன்ஸ் டிரைவரிடம் மருத்துவர்கள், "எதற்கு இவர்களை நீங்கள் அழைத்துவருகிறீர்கள்? என்று கேள்வி கேட்கும் நிலைதான் உள்ளது. இந்த ஆம்புலன்ஸ்களில் ஆக்ஸிஜனை 16 லிட்டர் வரையும் சேமித்துவைக்கும் திறன் இருப்பதால், 5 மணி நேரத்துக்கு பெரிய பிரச்சினையில்லாமல் செலுத்தமுடியும், அதன் பிறகு நாங்கள் என்ன செய்ய முடியும்'' என்று புலம்புகின்றனர் ஆம்புலன்ஸ் சேவையில் உள்ளவர்கள்.

ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் டாக்டர் ராஜனிடம் கேட்டபோது "போதுமான படுக்கை இல்லாத காரணத்தால்தான் காத்திருக்க வைத்தோம். அதன்பிறகு குணமாகி இருந்தவர் களை இடம் மாற்றிவிட்டு அந்த இடங்கள் காத்திருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது. நாங்களும் முடிந்தளவு அனைத்து வழிகளிலும் செயலாற்றிதான் வருகிறோம்'' என்றார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தோம்.

புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனை, முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனை, மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் கடந்த ஆண்டு கொரேனாவுக்கு சிகிச்சையளிக்கப் பட்டது. அதேபோல அறந்தாங்கி, ஆலங்குடி, இலுப்பூர் போன்ற பல ஊர்களிலும் கவனிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டு தீவிரச் சிகிச்சைக்கு மட்டும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அத்தனை சிகிச்சை மையங் களிலும் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிக்கன், சூப், புரோட்டின் உணவுகள், தானிய உணவுகள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் பயன்படுத்த தனித்தனி யாக வாளிகள், மக்குகளும், சோப்பு, மாஸ்க்குகளும் வழங்கப்பட்டது. அதேபோல அரசு மகளிர் கல்லூரியில் சித்தா பிரிவு ஏற்படுத்தி, சிறப்பு சிகிச்சையும் சத்தான உணவுகளும் வழங்கப்பட்டன. இதனால் விரைவிலேயே குணமடைந்து வீடு திரும்பினார்கள். உயிர்ப்பலிகளும் குறைவாக இருந்தது.

இந்த ஆண்டு நிலைமை முற்றிலும் தலைகீழாகியுள்ளது. முந்தைய அ.தி.மு.க அரசு தேவை யான நிதி ஒதுக்காததால், உள் நோயாளிகளுக்கு தயாரிக்கப்படும் உணவுகளை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி சமாளித்துவருகிறார்கள். இதில் போதியஅளவு சத்து இல்லை. உறவினர்கள் வெளியிலிருந்து உணவு வாங்கி வந்து தருகிறார்கள். நடமாட்டம் அதிகமாவதால் நோய்த்தொற்று பரவும் ஆபத்தும் உள்ளது.

c

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் குச் சென்றோம். சுமார் 450 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில், 320 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி கொண்டவை. 6 ஆயிரம் கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 டேங்குகள் ஆக்ஸிஜனுக் காக உள்ளன. ஆனால் முழு மையாக நிரப்பப்படுவ தில்லை. வல்லத்தில் வழக்க மான அளவே தயாரிக்கப் படும் ஆக்ஸிஜன், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு தினசரி கொண்டு போய் நிரப்பப்படுகிறது. புதுக் கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மூச்சுத் திணறலுடன் அதிக நோயாளிகள் வரும்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாடு அபாயத்தையே ஏற்படுத்தும். உயிர்காக்கும் மருந்துகளும் 3 நாளைக்கு ஒருமுறையே வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ஆக்சிஜன் தேவையின் அவசரம் குறித்தும், கொள்ளளவு-கையிருப்பு ஆகியவை குறித்தும் விரிவாக எழுதியுள்ளார். அதுபோல ரெம்டெசிவர் மருந்துகள் தட்டுப்பாடு குறித்தும் தெரிவித்துள்ளார் .

மருத்துவப்பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் சிகிச்சை அளிப்பதற்கும் தாமதம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மெய்யநாதன் நம்மிடம், "புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் குறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி மற்றும் மருத்துவக்கல்லூரி டீன் பூவதி ஆகியோருடன் கருத்து கேட்டபிறகு முதல்கட்டமாக அவசரமாக தேவைப்படும் ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்ஸிஜன் கண்காணிப்பு மீட்டர், மருத்துவப் பணியாளர்கள் என மருத்துவ அமைச்சரிடம் கேட்டிருக்கிறேன். உடனடியாக ஆக்ஸிஜன் வந்துவிட்டது. மற்ற வசதிகளும் உடனே கிடைக்கும். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான தரமான சிகிச்சை, உணவு மற்றும் அவர்களுடன் வருவோருக்கும் தங்க இடமும் உணவும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது'' என்றார்.

_____________

மாறிய உடல்

தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டையைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி பாலகிருஷ்ணன் கொரோனாவுக்கு பலியான நிலையில் உடலை உறவினர்களிடம் கொடுத்து விட்டனர். இறுதிச் சடங்கின்போது முகத்தைப் பார்த்த மகன் அதிர்ச்சி யடைந்துள்ளார். அங்கே இருந்தது வேறு ஒருவரின் சடலம். அதனால் அந்த உடல் மீண்டும் மருத்துவக் கல்லூரியிலேயே ஒப்படைக்கப்பட்டு பாலகிருஷ்ணன் உடலுக்காக காத்திருக்கிறார்கள் உறவினர்கள். ஆனால் பாலகிருஷ்ணன் உடல் அங்கே இல்லை என்பதுதான் வேதனை.