திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே சாமிநாதபுரத்தில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் காலை உணவுத்திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் கலைச்செல்வி. இவர் பணியில் இருந்தபோது, புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராணியின் கணவரும், திண்டுக்கல் பா.ஜ.க. மேற்கு மாவட்டச் செயலாளரான மகுடீஸ்வரன் காலைஉணவுத் திட்டப் பணிகளை ஆய்வுசெய்ய பள்ளிக்குச் சென்றிருக்கிறார். "சமையல் அறையைப் பார்க்கவேண்டும்' என்று கூறியிருக்கிறார். அந்த பெண்ணும் சமையல் அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே மதுபோதையில் இருந்த மகுடீஸ்வரன், கலைச்செல்விக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார்.

இதனால் மனம் நொந்துபோன ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி இதுசம்பந்தமாக வீட்டில் கூறியதுடன், உறவினர்களிடமும் மகுடீஸ்வரனின் பாலியல் டார்ச்சரை பற்றிக் கூறி கதறியழுதிருக்கிறார். அதைத் தொடர்ந்து சாமிநாதபுரம் போலீசில் மகுடீஸ்வரன் மேல் பாலியல் டார்ச்சர் செய்ததாக புகார் செய்தார் கலைச்செல்வி.

ff

இதுசம்பந்தமாக பாதிக்கப்பட்ட கலைச்செல்வியிடம் கேட்டபோது, "நான் சமையலறையைப் பார்க்கவேண்டும் என்று கூறி என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்றார். அப்போது சமையலறை ரூம் கதவைத் திறந்து சமையலுக்கான பொருட்களை அவரிடம் காண்பித்துக்கொண்டிருந்தேன். அவர் திடீரென கதவைச் சாத்திவிட்டார். நான் கதவை திறந்து வைத்துதான் கணக்குச் சொல்வேன் என்று கூறினேன். அதை ஏற்றுக்கொள்ளாமல் மதுபோதையில் இருந்த மகுடீஸ்வரன் என்னை கட்டிப்பிடித்து முத்தம்கொடுத்து அத்துமீற ஆரம்பித்தார். நான் பதறியடித்துக்கொண்டு வெளியே வந்து சத்தம் போட... அங்கிருந்தவர்கள் என்னை காப்பாற்றினார்கள். போலீசில் புகாரும் கொடுத்துள்ளேன்.

மகுடீஸ்வரனை பல இடங்களில் தேடிய நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் போட்டி போடும் கோவை பகுதியில் இருப்பதாக காக்கிகளுக்கு தகவல் தெரிந்ததன் பேரில் கோவையில் வைத்து மகுடீஸ்வரனை அதிரடியாகக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

மகுடீஸ்வரன் மாநிலத் தலைவருக்கு நெருக்கமானவர். இந்த பாராளுமன்ற தேர்தலில் மகுடீஸ்வரனுக்கு சீட் கொடுப்பதாக மா.த. உறுதி கூறியிருந்தாராம். ஆனால் திடீரென இத்தொகுதி பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான பா.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டதால் மகுடீஸ்வரனுக்கு சீட் கொடுக்கவில்லை. மகுடீஸ்வரன் வசதி படைத்தவர் என்பதாலும், மனைவி புஷ்பத்தூர் ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பதாலும் அந்த அதிகார பலத்தை வைத்துக் கொண்டு மதுபோதையில் வேறுசில பெண்களிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். இந்த விசயம் வெளியே தெரியாமலிருக்க தனது பணபலத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். கலைச்செல்வி விவகாரத்தின் மூலம் மகுடீஸ்வரனின் உண்மை முகம் அம்பலமாகியிருக்கிறது

-சக்தி