டாக்டர் பாலியல் டார்ச்சர் செய்தார்” என்று பகீர் குற்றச்சாட்டை எழுப்பியிருக்கிறார்கள் அந்த ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள். நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திசையன்விளையில் இருக்கிறது. ராதாபுரம் தொகுதிக்குள் இருக்கும் நான்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இதன் கீழ் செயல்படுகின்றன.
இந்த மருத்துவ சுகாதார நிலையத்தில் 9 மருத்துவ செவிலியர்கள், 4 அமைச்சுப் பணியாளர்கள் என 13 பேர் பணியிலுள்ளனர். இந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் பதவியான சிவில் சர்ஜன் பதவி காலியாக இருந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு இங்கு பணிக்கு வந்த டாக்டர் கண்ணன் என்பவர், இந்தப் பதவியை தான் பார்த்துக்கொள்வதாக தெரிவித்ததால் அவரே தாலுகாவிலுள்ள உள்ள அத்தனை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் தலைமை பொறுப்பாளரானார்.
இந்த நிலையில்தான் இங்கு பணிபுரியும் பெண் பணியாளர்கள் இருவர் இந்த டாக்டர் மீது பாலியல் புகாரை எழுப்பியுள்ளனர். மாவட்ட சுகாதார மருத்துவ அலுவலரிடம் (DD)இவர்கள் அளித்த புகார்தான் இப்போது பதட்டப் பரபரப்பை ஏற் படுத்திக்கொண்டிருக்கிறது. அவர்களின் எதிர்காலம் கருதி அவர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. என்ன நடந்தது என்பது குறித்து, அந்த மருத்துவ மனை பெண் ஊழியரிடமே நாம் கேட்டபோது, தயக்கத்துடன் விவரிக்கத் தொடங்கினார்.
"டாக்டர் கண்ணன் என்னை அழைத்தவுடன் அவரது அறைக்கு நான் சென்றேன். அப்போது அவர் என்னிடம் மிகவும் கொச்சையாகவும் அருவருக்கத்தக்க சில வார்த்தைகளையும் பேசினார். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மேலும் அது சம்பந்தமாக சில விஷயங்களைச் சொல்லி அதில் ஏதேனும் சந்தேகமிருந்தால் என்னிடம் கேளுங்கள் என்று வெளிப்படையாகவே சொன்னார். அவர் மேலதிகாரி என்பதால் நான் அதைச் சகித்துக்கொண்டேன். கண்ணீர் முட்ட நான் அழுதபடியே வெளியே வந்தேன். அதன் பிறகும் தொடர்ந்து என்னை அவரது அறைக்குக் கூப்பிட்டு அனுப்பினார். நான் மேஜை மீது கைவைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவரது கையை எனது கை மேல் வைப்பதற்காக வந்தபோது நான் கையை எடுத்துக்கொண்டேன்.
ஒரு கட்டத்திற்கு மேல் தொந்தரவு தாங்காமல் போகவே, "நீங்கள் எனக்கு மேலதிகாரிதான், அதற்காக நீங்கள் சொல்வதையெல்லாம் நான் கேட்கவேண்டிய அவசிய மில்லை' என்று கோபமாகவே சொன்னேன். ஆனால் அவரோ எனது பணிக்குச் சம்பந்தமில்லாத மருத்துவத் தொழில் பற்றிய அந்த விவரத்தை என்னிடம் மறுபடியும் பேசியவர், "இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடம் போனில் தாராளமாகக் கேளுங்கள்' என்றார். நான் சகிக்க மாட்டாமல் திரும்பிவிட்டேன். அதன்பின் இரண்டு நாட்கள் கழித்து என்னை கூப்பிட்டு அனுப்பியவர், சைக்கோத்தனமான வார்த்தைகளைப் பேசினார். அப்போது நான், "சார், இது உங்களுக்கும் எனக்கும் தேவையில்லாத விஷயம். நீங்கள் தொடர்ந்து இப்படிப் பேசினால் என்னு டைய கணவரிடம் சொல்லிவிடுவேன்' என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறிவிட்டேன்.
என்மீது கோபப்பட்ட அந்த டாக்டர், எனக் குப் பணி நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்தார். தேவையில்லாத சொத்தைக் காரணங்களைச் சொல்லி, அதைப் பெரிதுபடுத்தியவர், நான் எனது கணவரிடம் சொல்லிவிடுவேன் என்பதால் என்னைப் பழிவாங்க வேண்டுமென்ற நோக்கத்திலேயே செயல்பட்டார். இந்த நிலையில் அலுவலகத்தின் இளநிலைப் பெண் உதவியாளர் ஒருவரிடமும் இதேபோல் டாக்டர் நடந்துகொள்ள, அதை என் னிடம் தெரிவித்துப் பதறினார். இது டாக்டருக்குத் தெரியவர, நாங்கள் இதுகுறித்து அவர் மீது உயர்அதிகாரியிடம் புகார் கொடுத்துவிடுவோமோ என்று பயந்தவர், எங்களைப் பழிவாங்க வேறு ஒரு பெண் பணியாளரை வைத்து அவரை நாங்கள் அசிங்கமாகத் திட்டியதாக எங்கள் மீது மாவட்ட உயர் அதிகாரிக்குப் புகார் கொடுக்க வைத்தார்.
இதையறிந்த நானும் அந்தப் பெண் பணியாளரும் இனிமேல் தாமதிக்கக்கூடாது என்பதால் உடனடியாக டாக்டர் நடந்துகொண்டதைப் பற்றி, கடந்த ஏப். 15-ம் தேதியன்று மாவட்ட சுகாதார அலுவலரான டாக்டர் வரதராஜனிடம் புகார் கொடுத் தோம். உடனே அவர் இதுகுறித்து மருத்துவ மனையில் விசாரணை நடத்தினார். அந்த டாக்டர், பணியிலிருக்கும்போது நடந்ததை எப்படி பகி ரங்கமாகச் சொல்லமுடியும்... தயங்கினோம். அதன் பின் மாறுதலாகி வந்த மாவட்ட மருத்துவ அலு வலர் சுமதியிடமும் நாங்கள் புகார் மனு கொடுத் தோம். அவரும் விசாரிக்கிறேன் என்றாரே தவிர காலம்தான் கடந்தது. அதற்குப் பிறகுதான் மாநில உயரதிகாரி, மாவட்ட ஆட்சியர் மனித உரிமை ஆணையம் அடுத்து மகளிர் ஆணையம் போன்ற அனைத்து அமைப்புகளுக்கும் நாங்கள் புகார் மனுவை அனுப்பினோம். அந்த டாக்டரால் நாங்கள் நிம்மதி இழந்திருக்கிறோம்''” என்றார் கவலையாய்.
புகார் கொடுத்த இன்னொரு பெண்மணியோ, "சில மாதங்களுக்கு முன்பு, ஒருநாள் நான் ஒன்பதரை மணிக்கே வேலைக்கு வந்துவிட்டேன். அதுசமயம், அவரது ரூமிற்கு என்னை அழைத்த டாக்டர், தன் செல்லில் இருந்த ஒரு மாதிரியான படத்தை என்னிடம் காட்டி, "இது என்ன தெரியுமா?' என்று கேட்டதோடு, அதை பார்க்கும்படி என்னை வற்புறுத்தினார். நான் அழுதுகொண்டே அறையை விட்டு வெளியே வந்துவிட்டேன். மதியம் எனது கணவர் வழக்கம் போல் எனக்கு சாப்பாடு கொண்டுவந்தவர், நான் அழுது கொண்டிருந்ததைப் பார்த்து, என்னிடம் "ஏன் அழுற, என்ன நடந்தது?' என்று கேட்டார். நான் நடந்ததைச் சொன்னேன். ஆத்திரத்துடன் அவர், அதுபற்றி டாக்டரிடம் கேட்பதற்காக அவர் போனபோது டாக்டர் வெளியே போயிருந்தார்.
இந்த விவரம் தெரிந்த டாக்டர், விஷயம் வேறு மாதிரி ஆகிவிடக்கூடாது என்று என்னையும் அந்தப் பணிப்பெண்ணையும் பழிவாங்கும் பொருட்டு அவருக்கு வேண்டிய நர்ஸ் ஒருவரைக் கொண்டு தன்னை அவர்கள் ஆபாசமாகத் திட்டிய தாக எங்களுக்கு எதிரான புகாரை மாவட்ட அதி காரியிடம் கொடுக்க வைத்தார். அதன் பிறகுதான் நாங்கள் இதை விட்டுவிடக் கூடாது என்று மாவட்ட சுகாதார அலுவலரிடம் புகார் கொடுத் தோம். அதனை விசாரிப்பதற்கு அதிகாரியும் வந்தார்.
சம்பந்தப்பட்டவர் பதவியிலிருக்கும்போது விசாரணை நடத்தினால் நீதி கிடைக்குமா? இதன்பிறகே எங்களை பழிவாங்குவதற்காக சொத்தைக் காரணங்களைச் சொல்லி அடிக்கடி மெமோ தருவது, பணி நெருக்கடிகளை யும் கொடுத்தார். உயரதிகாரி என்பதால் எங்களால் அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. வேலை பறிபோனால் குடும்பம் சீரழிந்துவிடுமே என்ற கவலையில் நாங்கள் பல்லைக் கடித்துக்கொண்டு இதனையெல்லாம் சகித்துக் கொள்ளவேண்டியிருக்கிறது''’என்றார் வருத்தமான குரலில்.
பெண்களின் புகார் குறித்து மாவட்ட சுகாதார அலுவலரான டாக்டர் சுமதியிடம் நாம் பேசியபோது, "முதலில் மருத்துவமனைப் பணியாளர் ஒருவர் புகார் கொடுத்தார். அதன்பிறகு இரண்டு பெண் பணியாளர்கள் புகார் கொடுத்தனர். இவைகள் அனைத்தையும் விசாரித்த நாங்கள், அவர்களிடம் ஸ்டேட்மெண்ட் வாங்கி உயரதிகாரிக்கு அனுப்பியுள்ளோம். மேலும் இது கான்ஃபிடென்ஷியல் விஷயம் என்பதால் வெளியில் சொல்ல முடியாதவை''’என்று முடித்துக்கொண்டார்.
இந்தப் புகார்கள் குறித்து நாம் டாக்டர் கண்ணனிடம் கேட்டபோது, "அந்த இரண்டு பெண் பணியாளர் களும் தன்னை ஒரு ஆணுடன் தொடர்புபடுத்தி பேசுவதாகவும் அதனால் தனக்கு அவமானமாக உள்ளது என்று அவர்கள் மீது பெண் பணியாளர் ஒருவர், என்னிடம் புகார் கொடுத்தார்., இதனை நீங்கள் விசாரிக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டியது தான் என்று வேதனைப்பட்டார். இது வேறுமாதிரி ஆகி விடக் கூடாதே என்று நான் அந்த இரண்டு பெண் பணி யாளரையும் விசாரித்தேன். அது தொடர்பாக நடந்தவை களை உயரதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்தேன். அலு வலகத்தில் பணிகள் தாமதமில்லாமல் நடக்கவேண்டு மென்று நான் சற்று கண்டிப்புடன் இருப்பேன்.
மேலும் அந்த இரண்டு பெண் பணியாளர்கள் அலுவலக நேரத்தில் டிக்டாக் எடுத்திருக்கிறார்கள். இது சட்டப்படி கூடாது. இதற்கான வீடியோ ஆதாரமும் என்னிடம் இருக்கிறது. அதையும் நான் மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே என்மீது இதுபோன்று பொய்யான பாலியல் புகார்களைக் கூறியுள்ளனர். அவர்கள் குறிப்பிட்டது போன்ற செயல்களில் நான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. பொய்யான புகார்களைக் கொடுத்து என்னை மடக்கப் பார்க்கிறார்கள். இந்த பிரச்சினைக்குப் பின்புதான் எனது சொந்த செலவில் 45,000 ரூபாய் மதிப்பில் மருத்துவ மனையில் நான் சி.சி.டி.வி.களை அமைத்துள்ளேன்'' என்றார் விரிவாக.
எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதோ. நேர்மையான விசாரணையில்தான் தெரியவரும்.