முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வருகைக்காக அமைச்சரவை மாற்றம் ஒத்திவைக் கப்பட்டிருக்க, அவர் வந்தால் நாம் என்னாவது? என்கின்ற திக்... திக்... மனநிலையில் இருக்கின்றனர் கோவை மாவட்ட தி.மு.க.வினர்!
"கடந்த 25 ஆண்டுகளாக தி.மு.க.வுக்கு வெற்றியென்பது கோவை மாவட்டத்தில் பலமான கேள்விக்குறியாக இருந்துவந்தது. கோஷ்டிப்பூசலில் சிக்கியிருந்த கொங்கு மண்டல தி.மு.க., மக்க ளோடு மக்களாகக் களமாடவில்லை. குறிப்பாக, கொரோனா காலத்தின் போது மக்களுக்கு எவ்வித உதவியை யும் இங்குள்ள தி.மு.க. நிர்வாகிகள் செய்யவில்லை என்கிற காரணத்தா லேயே தி.மு.க. இங்கே தோற்றது. பின்னர், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நியமிக்கப் பட்டார். ஆனாலும் அவருக்கு கல்தா கொடுத்தனர் கோவை மாவட்ட நிர்வாகிகள். இந்த நிலையில், நகர்ப்புற, உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றிட கோவை மாவட்டத் தின் பொறுப்பாளராக நியமிக்கப் பட்ட செந்தில் பாலாஜி, வழக்க மான தனது தேர்தல் பார்முலாவால் 99% வெற்றியை பெற்றுத்தந்தார். இதன்பின், மாவட்ட நிர்வாகிகளை இனங்கண்டு தனது அதிரடி வேலைகளைக் காண்பித்தார்'' என்கிறது கோவை மாவட்ட தி.மு.க.
தொடர்ச்சியாக 13 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்துக் கொண் டிருக்கும் செந்தில் பாலாஜி, இதுவரை 56 முறை ஜாமீனுக் காக மனு போட்டுள்ளார். ஒவ்வொரு மனுத்தாக்கலின் போதும் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் வருகைக்காகக் காத்திருந்தவர்கள் கோவை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்களான தளபதி முருகேசன் மற்றும் தொண்டாமுத்தூர் ரவி, முன்னாள் மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணைமேயர் வெற்றி செல்வன் ஆகியோர் மட்டுமே! தற்போதைக்கு அவர்களுடன் கூடுதலாக இணைந்திருப்பவர்கள் கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் மற்றும் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் ஆகியோரே. இதேவேளையில், உறுப்பினர் அட்டை இல்லாதவர்களுக்கும், கோவை பூர்வீகமாக இல்லாதவர் களும் பதவியை வாரி வழங்கியிருக்கின்றார் மாநகர மா.செ.வான கார்த்தி. இவை அத்தனையும் செந்தில் பாலாஜியின் காதுக்கு அவ்வப்போது கொண்டுசெல்லப் பட்டிருக்கிறது. கூடுதலாக, இனிமேல் அவர் வரமாட்டார்.. இனி நான் தான் என்கின்ற வார்த்தையும்! இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களின்படி வரும் வாய்தாவில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்து மீண்டும் வந்தால் நம்முடைய கதி அதோ கதிதான் எனப் புலம்பி வருகின்றனர் சில நிர்வாகிகள். அவர்களில் மாநகர மா.செ. கார்த்தி, மாநகர் மாவட்ட துணைச்செயலாளரான கல்பனா செந்தில், சிங்காநல்லூர் பகுதி செயலாளர் மீன்கடை சிவா மற்றும் துணை மேய ரான வெற்றிச்செல்வன் ஆகியோர் அடக்கம் என்கின்றனர்.
இதில் உக்கடம் பகுதியை சேர்ந்த சீனியர் நிர்வாகி ஒருவரோ, "செந்தில் பாலஜியின் அதிரடி, மாநகர மா.செ.வாக இருந்த எக்ஸ் எம்.எல்.ஏ. கார்த்தியை சற்று மிரட்டி விட்டது என்றே கூறலாம். பெயரளவில் மட்டும் இருவரும் இணைந்துகொண்டு கட்சியின் கூட்டங்களில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். ஆனால் உண்மை அதுவல்ல. இருவரும் எதிரும்புதிருமாக இருந்தனர். குறிப்பாக, சூயஸ் கால்வாய் திட்டத்தை எதிர்க்கின்றோம் பேர்வழி எனும் பெயரில் முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் கூட்டணி போட்டதை செந்தில் பாலாஜி ரசிக்கவில்லை. இதனை தலைமைக்கு தெரியப்படுத்திய அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, கார்த்தியை மா.செ. பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதில் விரக்தியான மா.செ. கார்த்தி, தலைமை குறித்து கடுமையாக விமர்சனம் செய்த ஆடியோ வெளியாக, தலைமையில் தனக்கு நன்கு அறிமுகமானவர்களை வைத்து அப்போதைக்கு தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். அதன்பின் ஈரோடு இடைத்தேர்தலின்போது இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட முறையில் அனுதாபத்தின் அடிப் படையில் மீண்டும் தனது மா.செ. பதவியை தக்கவைத்துக் கொண்டார் மா.செ. கார்த்தி. இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி சிறைக்கு செல்ல, மாநகர மன்றத்திற்கே வந்து, "இனி நான் தான் அனைத்துமே! என்னைக் கேட்காமல் எதுவும் நடக்கக் கூடாது' என அப்போதைய மேயர் கல்பனா ஆனந்தை மிரட்டிச் சென்றது தனிக்கதை. தொடர்ச்சி யாக 13 மாதங்கள் சிறையில் செந்தில் பாலாஜி இருக்க, மாநகர தி.மு.க.வை கோமா ஸ்டேஜுக்கு கொண்டு சென்றது மட்டும் கார்த்தியின் சாதனை. ஊரிலுள்ள வர்கள் செந்தில் பாலாஜி திரும்பவும் வரவேண்டுமென அங்கப்பிரதட்சணம், அலகு குத்துதல், காவடி எடுத்தல் ஆகியன வற்றை செய்து கொண்டிருக்க, எந்நாளும் செந்தில் பாலாஜி வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக கேரளா சென்று மாந்த்ரீகம் செய்து வந்தது தான் கார்த்தியின் சாதனை'' என்கின்றார் அவர்.
இது இப்படியிருக்க, செந்தில் பாலாஜி வெளியே வந்தால், மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் முதல், வார்டு, பகுதி ஆகிய பலரின் பதவிகள் காணாமல் போய்விடும் என்ற அச்சமும் பலருக்கு உண்டு. குறிப்பாக நிதிக்குழு தலைவர், வரிவிதிப்புக் குழு தலைவர், சுகாதாரக்குழு தலைவர் ஆகியோர் ஹிட் லிஸ்ட்டில் உள்ளதாக விபரமறிந்த வட்டாரங்கள் கூறுவது குறிப்பிடத் தக்கது.