தமிழக அரசியல் கூட்டணியில் அமித்ஷா -நிர்மலா ஆகிய இருவரும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுகிறார்கள். அமித்ஷா, எடப்பாடியுடன் டீல் செய்கிறார். அதே நேரத்தில் நிர்மலா அனைத்து தரப்புடனும் டீலிங் பேசிவருகிறார். இரண்டு ஆபரேஷன்களும் தனித்தனியாக இருந்தாலும் இரண்டும் ஒன்றுக் கொன்று தொடர்புடையவை என்கிறார்கள் பா.ஜ.க.வினர். சென்னைக்கு வந்த நிர்மலா, வானதி சீனிவாசன் மற்றும் கே.டி.ராகவன் துணையுடன் செங்கோட்டையன் உள்ளிட்ட பலரை சந்தித்தாலும் சீமானுடன், நிர்மலா நடத்திய சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்த சந்திப்பு காலை 8:15 முதல் 8:45 வரை நடந்திருக்கிறது. இந்த சந்திப்பைப் பற்றி வெளியே சொல்லவேண்டாம் என நிர்மலாவால் சொல்லப்பட்டது முன்பு. ரஜினியை சந்தித்துவிட்டு வந்து ‘"சங்கி என்றால் சக நண்பன்'’ என்று அர்த்தம் என சீமான் பேட்டியளித்தார். ரஜினி யுடன் நடைபெற்ற சந்திப்பு போட்டோக்கள் வெளியே வந்தன. அதுபோல இந்த சந்திப்பு நடைபெறுவதை நிர்மலா விரும்ப வில்லை. மீடியா விசயத்தில் மிகக்கவனமாக இருக் கும் நிர்மலா, இந்த சந்திப்பைப் பற்றி வெளியே செய்தி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். அதற்கொரு முக்கிய காரணம் உண்டு.
சீமான் கட்சியைப் போலவே அதிரடியாக செயல்படுவதை வழக்கமாகக் கொண்ட சிவசேனா வுடன் கூட்டணியிலிருந்தது பா.ஜ.க., பிறகு அந்த கட்சியை உடைத்து மகராஷ்டிராவில் ஆட்சியை யும் பிடித்தது. சிவசேனா போல் சீமான் கட்சி யுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பா.ஜ.க. வின் திட்டம். "அப்படி கூட்டணி அமைத்துவிட் டால் என்னுடைய மார்க்கெட் சரிந்து விடும். நான் தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத கட்சிகளுடன் கூட் டணி அமைக்காமல் ஒரு பெரிய ஆதரவாளர்களை திரட்டியிருக்கிறேன். 35 லட்சம் பேர் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த வாக்குகளை இழக்க விரும்பவில்லை' என்பது சீமானின் நிலை.
ஆனால் சீமானுக்கு, விஜயலட்சுமி விவகாரம் மிகப்பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. விஜயலட்சுமியுடன், சீமான் "நீ என் பொண்டாட்டி' என டிக்டாக் வீடியோ மட்டும் போடவில்லை. சீமானின் துன்புறுத்தலால் உருவான காயங்கள் அனைத்திற்கும் மெடிக்கல் ரெக்கார்டுகளை விஜய லட்சுமி மகிளா கோர்ட்டில் சமர்ப்பித்திருக்கிறார். அத்துடன் கருக்கலைப்பு நடந்ததற்கான ஆதாரங் களையும் கொடுத்திருக்கிறார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது. அதை விசாரிக்கும் நாகரத்தினா என்கிற நீதிபதி பெண்கள் உரிமைக் காக போராடுபவர். அதற்காக பல தீர்ப்புக்களைக் கொடுத்தவர். அந்த வழக்கில் தண்டிக்கப்பட்டால் சீமானுக்கு 7 வருட தண்டனை கிடைக்கும். அவர் சிறைக்குச் சென்றால் அவரது அரசியல் வாழ்வு முடிந்துவிடும். இப்படி பிரச்னைக்குரிய வழக்கு களில் சிக்குபவர்களை எல்லாம் காப்பாற்றுவது பா.ஜ.க.தான். அதனால் மா.த.வின் நெருங்கிய நண்பராக தன்னைக் காட்டிக்கொண்ட சீமான், ரஜினியைத் தொடர்ந்து மா.த.வை சந்தித்துப் பேசினார். எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக விழாவில் இருவரது சந்திப்பு நடந்தது. அவரது ஒரே கோரிக்கை, விஜயலட்சுமி வழக்கில் தனக்கு பா.ஜ.க. உதவி செய்யவேண்டும் என்பதுதான். பா.ஜ.க.வின் ஒரே கோரிக்கை அந்த வழக்கிலிருந்து உன்னை விடுவிக்க வேண்டுமென்றால் நீ பா.ஜ.க.வுடன் தேர்தல் உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்பதுதான். மா.த.வுக்கு, பா.ஜ.க.வில் மார்க்கெட் இல்லாததால் மா.த.வுக்கு எதிர் முகாமில் இருக்கும் நிர்மலாவை சந்தித்தார் சீமான். அடுத்தகட்டமாக அமித்ஷாவை, மோடியை சந்தித்துப் பேசுவதற்கு சீமான் திட்டமிட்டிருக்கிறார். ஆனால், இந்த சந்திப்புகள் எல்லாம் ரகசியமாக நடக்க வேண்டும் என சீமான் விரும்புகிறார்.
தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளில் டம்மி வேட் பாளர்களை நிறுத்த சீமான் முன்வந்திருக்கிறார். அத்துடன் ஏற்கெனவே பா.ஜ.க. சொன்னதால் பெரியாரை கேவலமாக பேசிவரும் சீமான், நிர்மலாவை சந்தித்தவுடன் அறநிலையத்துறை பற்றி ஆர்.எஸ்.எஸ். ஸ்டைலில் பேச ஆரம்பித் திருக்கிறார். தொடர்ந்து கல்வித்துறை பற்றி சீமான் பேசுவார். தனித்துப் போட்டியிடுவது எனக்கு பெரிய வருமானத்தைக் கொடுக்கிறது. நான் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்' என்பது சீமானின் நிலை. அதெல்லாம் முடியாது நீ கூட்டணிக்கு வா என்பது பா.ஜ.க.வின் நிலை.
விஜயலட்சுமி என்கிற பெண்ணின் வழக்கில் சிக்கிய சீமான், ஆப்பசைத்த குரங்காக பா.ஜ.க. விடம் சிக்கிக் கொண்டுள்ளார். சீமானின் பா.ஜ.க. நகர்வுக்கு நாம் தமிழர் கட்சியில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. ‘மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தாதீர்கள்’ என்பதுதான் நாம் தமிழர் கட்சியினரின் கோரிக்கையாக இருக்கிறது. சீமான் அவர்களிடம் "விஜயலட்சுமியை வைத்து தி.மு.க. என்னை அழிக்க நினைக்கிறது. அவர்களை எதிர்த்துப் போராட எனக்கு பா.ஜ.க. தயவு தேவை' என்கிறார். சீமான், விஜயலட்சுமி விவகாரத்தில் பயந்துபோய் பா.ஜ.க. ஆதரவு நிலை யை எடுப்பது எப்படி சரியாகும் என ஆவேசமாக கேள்வி கேட்கிறார்கள் நாம் தமிழர் தம்பிகள்.