அ.தி.மு.க.வில் இருந்தபோது, கே.கே. எஸ்.எஸ்.ஆருக்கும் தாமரைக்கனிக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. கே.கே.எஸ்.எஸ்.ஆர். முகத்தில் ஆசிட் வீசிய சம்பவத்தில், தாமரைக்கனியின் பெயரும் அடிபட்டது. பின்னாளில், கே.கே.எஸ்.எஸ்.ஆரை தொடர்ந்து தாமரைக்கனியும் தி.மு.க.வில் ஐக்கியமானார். ஆனாலும், இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. தாமரைக்கனி இறந்தபிறகு, அவரது இளையமகன் தங்கமாங்கனிக்கு தி.மு.க.வில் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக அமையவில்லை. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் -மம்சாபுரம் பேரூராட்சியில் சேர்மன் சீட் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே, ஸ்ரீவில்லிபுத்தூர் டவுனை விட்டு கிராமத்துக்கு ஜாகையை மாற்றிய தங்கமாங்கனி, மம்சாபுரத்தில் அழுத்தமாக முத்திரை பதித்து வருகிறார். ஆனாலும் ‘இலவு காத்த கிளியாகத்தான் இருக்கிறது அவர் நிலை.
மம்சாபுரம் அ.தி.மு.க. நகரச் செயலாளராக இருந்த அய்யனார், உள்ளாட்சி தேர்தலில் சேர்மன் சீட்டை குறிவைத்து, ஆளும்கட்சியான தி.மு.க.வில் சேர்ந்தது, தங்கமாங்கனிக்கு தலைவலி ஆகிவிட்டது. அதனால், அ.தி.மு.க. பக்கம் போய் விடலாமா என்ற மனநிலையில் தங்கமாங்கனி காய் நகர்த்தி வருவதாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியிருக்கிறது.
நாம் தங்கமாங்கனியைத் தொடர்பு கொண்டோம்.
"அ.தி.மு.க. ஆட்சில இருக்கும்போது பெரிய அளவுக்கு கொள்ளையடிச்சு முறைகேடா சொத்து சேர்த்தவங்க, இப்ப தி.மு.க. பக்கம் தாவுறாங்க. அய்யனாரு சேர்ந்தது அந்த மாதிரி ஒரு பாதுகாப்புக்காகத்தான். நான் சேர்மனாகக்கூடாதுன்னு எதிர்ப்பு வேலைல ஈடுபடுவாரு. கட்சில எனக்கெதிரா உள்ள ஆளுங்கள கையிலெடுப்பாரு. தி.மு.க.வுல எப்படி கட்சில சேர்ந்ததுமே சேர்மன் சீட் கொடுப்பாங்க? எதிர்க்கட்சியா இருக்கும்போது தி.மு.க.வுல இருந்துட்டு, இப்ப அ.தி.மு.க.வுக்கு போறதுக்கு நான் ஒண்ணும் பைத்தியக்காரன் இல்ல. பதவிக்காக நான் கட்சில இல்ல. கட்சில உணர்வா இருக்கிறேன். தலைவர் எனக்கு நல்ல வழி காட்டுவார்''’என்றார்.
"மணல் மாபியா'’என்று விமர்சிக்கப்படும் மம்சாபுரம் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அய்யனாரை தொடர்புகொண்டோம். "அரசியலுக்காக இங்கே கொலையெல்லாம் நடந்திருக்கு. வெட்டிருவேன்; குத்திருவேன்னு தங்கமாங்கனி சைடுல மிரட்டல் வருது. அமைதியா இருக்கணும்னு தி.மு.க.வுக்கு வந்திருக்கேன். கட்சில சேர்றதுக்கு யூனியன் சேர்மன் சீட்டுக்கு டிமான்ட் எதுவும் வைக்கல. அந்த நேரத்துல, ஆர்.டி.ஓ. விவ காரத்தில் என்கிட்ட ரூ.3 லட்சம் வாங்கியவருதான் தங்கமாங்கனி. இல்லைன்னு அவரை சொல்லச் சொல்லுங்க. தேர்தல் நேரத்துல நல்லா ஃபீல்ட்ஒர்க் பார்க்கிறவன்னுதான் என்னை தி.மு.க.வுல சேர்த்திருக்காங்க. மத்தபடி, யாரோடவும் எதிர் அரசியல் பண்ணப்போறதில்ல''’என்றார்.
மம்சாபுரத்தில் வன்முறை அரசியலை யாரும் கையில் எடுத்துவிடாதபடி, உள்ளாட்சி தேர்தலை கவனமாக எதிர்கொள்ளவேண்டிய நிலை தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது.