தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரை ஓரம் கார்னெட், சிலிக்கான், ரூட்டைல், இல்மனைட் உள்ளிட்ட தாது மணல் நிறைந்துகிடக்கின்றன. அதனை வெட்டி யெடுத்து தரம்பிரித்து கார்னெட் எனப்படும் மினரலை மட்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வி.வி.நிறுவனம் உள்ளிட்ட சில கம்பெனிகள் அனுமதிபெற்று செயல்பட்டு வந்தன. கார் னெட் தாதுப் பொருள்கள் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டது பற்றிய புகார்கள் தொடர்ந்து வந்ததையடுத்து தலையிட்ட நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு தாது மணல் வெட்டியெடுக்க தடைவிதித்தது.
தடைக்குப் பின்பும் பல நிறுவனங்கள் தாது மணல்களை ஏற்றுமதி செய்தது பற்றி, அரசுக்கு புகார்கள் வர, உயர்நீதிமன்றம் தலையிட்டு தொடர்புடைய மாவட்டக் கலெக்டரிடம் தடைசெய்யப்பட்ட காலத்தில் தாது மணல்களை நிறுவனங்கள் எந்த அளவுக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றன என்பது பற்றிய ஆய்வறிக்கை கேட்டிருந்தது.
ஆய்வறிக்கையில் வி.வி.நிறுவனம் அளவுக்கதிகமான தாதுமணல் ஏற்றுமதி செய்தது தெரியவந்ததால், 2017-ஆம் ஆண்டு மாவட்டங்களிலுள்ள அனைத்து தாது மணல் குடோன்களையும் ஆய்வு செய்து, குடோன்களை மூடி சீல் வைத்தார் கருணாகரன். அன்றுமுதல் அவை நீதிமன்ற பொறுப்பில் இருந்திருக்கின்றன. இந்த நிலையில் அணுசக்தி தயாரிப்பிற்குப் பயன்படும் மூலப்பொருள்களான யுரேனியம் தோரியமும் அடங்கியுள்ள இல்மனைட் எனப்படும் தாதுமணலும் சந்தடிச் சாக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டது தெரியவர இந்திய அணுசக்தி துறை 2017-ஆம் ஆண்டு இல்மனைட் மற்றும் குறிப்பிட்ட சில மினரல்களை ஏற்றுமதி செய்வதற்கு முற்றிலுமாகத் தடை விதித்தது.
தூத்துக்குடியின் சிப்காட் வளா கத்திலிருக்கும் வி.வி. டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் நிறுவனத்திற்கு கடந்த 21-ஆம் தேதி லாரிகளில் இல்மனைட் எனப்படும் கருப்பு தாதுமணல் ஏற்றிச் செல்லப்படுவதாக சிப்காட் போலீ சாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அங்கு விரைந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமை யிலான போலீசார் லாரிகளைச் சோதனையிட்டிருக்கின்றனர். ஒரு லாரியில் பெரிய பெரிய மூட்டைகளில் தாதுமணல் கொண்டுசெல்லப்பட்டது தெரியவர, அதுகுறித்து டிரைவரிடம் விசாரித்திருக் கின்றனர். முத்தையாபுரத்தில் இருந்து வி.வி.டைட் டானியம் நிறுவனத்திற்கு தாதுமணல் கொண்டு செல்லப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து வி.வி.டைட்டானியம் நிறுவனத்திற்குச் சென்ற போலீசார் 4 லாரிகளில் சுமார் 10 டன் விகிதம் 40 டன் தாதுமணல் கடத்தி வரப்பட்டதை பறிமுதல் செய்திருக்கிறார்கள். பின் னர் அனைத்து லாரிகளையும் சிப்காட் வளாகத்திற் குப் போலீசார் கொண்டுசென்றிருக்கின்றனர். இது பற்றிய தகவலறிந்த மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ், எஸ்.பி. ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முத்தையாபுரத்திலிருக்கும் வி.வி.நிறுவனத்தின் குடோனை ஆய்வு செய்தபோது தாது மணலுடன் சீல்வைக்கப்பட்ட குடோனின் சீல் உடைக்கப்பட்டு திறந்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து மீளவிட்டான் கிராமம்-1 நிர்வாக அதிகாரி ராஜேஷ்கண்ணா சிப்காட் போலீசில் புகார்செய்ய, வி.வி.நிறுவன உரிமையாளர் மற்றும் லாரிகளின் டிரைவர்கள், வி.வி. குடோனின் சூப்பர்வைசரான ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
தாதுமணல் கடத்தப்பட்ட லாரிகள் பிடி பட்டது பரபரப்பான சூழலைக் கிளப்பிய நிலையில் நாம் இதுகுறித்து விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது, இப்படி கடத்தப்படும் இல்மனைட், வி.வி. டைட்டானியம் பிக்மெண்ட்ஸ் நிறுவனத் திற்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு தரம்பிரிக் கப்படுகிறதாம். இல்மனைட் தாது மணலை ஏற்றுமதி செய்வதற்கான தடையுள்ள நிலையில், நிறுவனத்தில் அந்த இல்மனைட்டுடன் சல்ப்யூரிக் ஆசிட்டையும் தண்ணீரையும் ஊற்றி ரீ-ப்ராசஸ் செய்து டைட்டானியம் டை ஆக்சைட், ரூட்டைல் கிரேட்-1 ஆகிய பை-ப்ராடெக்ட்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்படுகின்றன. டைட்டானியம் டையாக்சைட், ரூட்டைல் கிரேட்-1 இரண்டுக்கும் நல்ல சந்தையிருப்பதால் ஏற்றுமதி ஆகியிருக் கிறதாம். இப்படித் தரம்பிரிக்கப்படும்போது வெளியேறும் சல்ப்யூரிக் ஆசிட்டின் கழிவு அப்படியே பூமிக்குள் செலுத்தப்பட்டுவிடுகிறதாம்.
இதுபோன்று இல்மினைட் தரம்பிரிக்கப் படுவது தொடர்ந்து இந்நிறுவனத்தில் நடந்துவந்தி ருக்கிறது. இதுதொடர்புடைய அதிகாரிகளுக்குத் தெரிந்த விஷயம் என்றாலும், அவர்கள் கண்டு கொள்வதில்லையாம்'' என்றார் அந்த அதிகாரி.
இதுகுறித்து நாம் மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரிடம் பேசியபோது, “"வி.ஏ.ஓ. புகாரின் படி வி.வி. நிறுவன உரிமையாளர், குடோனின் சூப்பர்வைசர் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அது சீல் வைக்கப் படாத குடோன் என்கிறார்கள். சீல் வைக் கப்பட்டதா, சீல் வைக்கப்படவில்லையா என்கிற விவரத்தை வருவாய்த் துறையிடம் கேட்டிருக்கிறோம். தாது மணல் ஏற்றுமதி செய்வதற்கு தடை இருக்கிறது. ஆனால் இறக்குமதி செய்யலாம். அவர்களோ இந் தத் தாதுமணலை காயப்போட்டு நாங்கள் இங்கு கொண்டு வந்தோம் என்கிறார்கள். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது''’ என்றார்.
தாதுமணல் தொடர்பாக வி.வி. நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டிருப்பது பரபரப்பான விஷயமாகி இருக்கிறது.