இமாச்சலபிரதேசத்தில் தொடர்மழையின் காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு நிகழ்ந்திருக்கிறது. இதில் அரசுப் பேருந்து ஒன்று அகப்பட்டுக்கொள்ள, அதில் பயணம் செய்த 40 பேரில் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 18 பேர் பெருங்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
கிரீஸிலும் அல்ஜீரியாவிலும் காட்டுத் தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 3-ஆம் தேதி கிரிஸீல் பற்றிய காட்டுத் தீ இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அந்நாட்டு பிரதமர் கைரியாகாஸ் மிட்சோடகிஸ், தம் நாட்டு மக்களிடம் காட்டுத் தீயை கட்டுப்படுத்த முடியாததற்காக மன்னிப்புக் கோரியுள்ளார். காட்டுத் தீயால் ஏற்பட்ட இழப்பைச் சரிக்கட்ட அந்நாட்டு அரசு 500 மில்லியன் யூரோ ஒதுக்கியுள்ளது.
இன்னொருபுறம் அல்ஜீரிய பிரதமர் அய்மான் பெனாப்டெர் ரஹ்மான், தீயை அணைக்க வெளிநாட்டு அரசுகளுடன் ஆலோ சனையில் ஈடுபட்டுள்ளார். பலி எண்ணிக்கை 50-ஐத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.
சமீபத்திய கடும் மழையில் சீனா 60-க்கும் அதிகமான பேரை பலிகொடுத்துள்ளது. பெரிய பெரிய நகரங்களையே மூழ்கடித்து லட்சக் கணக்கான பேரை முகாம்களில் கொண்டுவந்து வைக்கும் வகையிலான பெருமழை தற்சமயம் உலகெங்கும் பொழியத் தொடங்கியுள்ளன.
இதெல்லாம் சுற்றுச்சூழல் சீரழிவின், உலக வெப்பநிலை அதிகரிப்பதன் வெளிப்பாடுகள் என்கிறார்கள் சூழலியல் விஞ்ஞானிகள். வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ போன்ற சம்பவங்கள் இனி உலகெங்கும் அடிக்கடி வெளிப்படலாம் என்கிறார்கள்.
உலகில் காட்டுத் தீ பற்றியெரியாத நாடுகளே கிடையாது. கோடைக்காலங்களில் வெப்பத்தால் புல் பற்றிக்கொண்டும், சமயங்களில் இடி-மின்னலாலும் காடு பற்றியெரிவதும் வழக்கமானதுதான். மக்கள் தொகை பெருக்கமுள்ள நாடுகளில் குடியேற்றத்துக்கும் விவசாயத்துக்கும் நிலமில்லாதபோது அரசின் ஆதரவுடனோ, திருட்டுத்தனமாகவோ காட்டில் தீவைக்கப்படும். தீயணைக்கப்பட்ட பின் பற்றியெரிந்த ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு குடியிருப்புகளாகவும் விவசாய நிலங்களாகவும் மாறும். ஆனால், சமீபகாலமாக உலகெங்கும் ஏற்படும் காட்டுத் தீயின் எண்ணிக்கையும், அதன் தாக்கங்களும் அதிகரித்துவருவதுதான் கவலைக்குரிய விஷயமாகும்.
உதாரணத்துக்கு ஆஸ்திரேலியாவை எடுத்துக்கொள்வோம். ஆஸ்திரேலியாவில் கோடைக்காலத்தில் காடுகளில் தீப்பற்றியெரிவது வழக்கமான ஒன்றுதான். கடந்த 2019- 2020-ல் 19 மில்லியன் ஹெக்டேர் தீக்கு இரையானது. 3000 வீடுகள் எரிந்துபோயின. 33 பேர் இறந்துபோயினர். கடந்த 20 வருடங்களில் ஏற்பட்ட தீ விபத்துகளில் இது மிகப்பெரிய தீ விபத்து. தெற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த 20 வருடங்களில் தீ விபத்தில் இத்தனை அதிகமான வீடுகள் எரிந்ததில்லை.
அமேசான் வனத்தில் 2019-ல் ஏற்பட்ட காட்டுத் தீ 7600 சதுர கிலோமீட்டரை எரித்துவிட்டே அடங்கியது. கலிபோர்னியா, ஆஸ்திரேலியா காடுகளைப் போல் அமேசான் காடுகள் கோடைகாலத்திலும்கூட எளிதில் பற்றிக்கொள்வதில்லை. அமேசான் தீ மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. அமேசான் காடுகள் உலகில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனில் 20 சதவிகித உற்பத்திக்குப் பொறுப்பானவை. பூமியின் நுரையீரல்கள் என்ற சிறப்புக்குரியவை. அந்த அமேசான் காடுகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் மனிதனின் சுயநலத்தால் அழிக்கப்பட்டு விட்டன.
இந்தியாவும் கொஞ்சமும் சளைத்த தில்லை. 2000-ல் மட்டும் இந்தியாவில் 43,031 சிறிதும் பெரிதுமான தீவிபத்து எச்சரிக்கைகள் பதிவாகியுள்ளன. மலை, வனம், நீர்நிலைகள் என சுற்றுச்சூழல் கேடுகளுக்கும் இந்தியாவில் குறைவில்லை. இந்திய வனங்களில் ஏற்படும் தீவிபத்துகளில் 80 சதவிகிதம் மனிதனால் ஏற்படுத்தப்படுபவை என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
உலக வெப்பநிலை அதிகரிப்பது எப்படி காட்டுத் தீயை அதிகரிக்குமோ, அதுபோல காட்டுத் தீ சம்பவங்களால் காற்றில் கார்பன் அதிகரித்து உலக வெப்பநிலை உயரும். இரண்டும் பரஸ்பரம் தொடர்புடையவை. காட்டுத் தீ சம்பவங்களால் ஆண்டுக்கு 8 பில்லியன் டன் கார்பன் வெளியாகிறது. சமீபகாலமாக ஆண்டுக்கு 5 முதல் 10 சதவிகிதம் அது அதி கரிப்பதாக தெரியவந்துள்ளது.
கணக்குவழக்கற்ற காட்டுத் தீயின் விளைவை, சுருக்கமாகச் சொன்னால், வெப்ப நிலை அதிகரிப்பால் பூமியின் பெரும்பகுதி நீர் வறண்டு பாலைவனமாக ஆகும். அதேசமயம் வெப்பநிலை அதிகரிப்பால், சைபீரியா, அலாஸ்கா, அன்டார்டிகா, இமயமலைப் பகுதிகளின் பனி உருகி கடல்மட்டம் அதி கரிக்கும். அதனால் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பகுதிகள் நீருக்குள் போகும்.
முக்கியமாக இந்த கடல் நீர் மட்ட அதிகரிப்பால் ஆசிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் முப்புறமும் கடலால் சூழப்பட்ட இந்தியாவில் 12 கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.
தமிழகத்தில் சிதம்பரம், மாமல்லபுரம், மரக்காணம் போன்றவை கடல்நீர் அதிகரிப் பால் நீரில் மூழ்கும் அபாயத்திலுள்ளன. சென்னையின் சரிபாதியை கடல் நீர் விழுங்கினாலும் ஆச்சரியமில்லை என ஐ.நா., நாசா போன்றவை எச்சரித்துள்ளன.
வரும்முன் தான் காக்கவில்லை, விஞ்ஞானிகளிடமிருந்தும் இயற்கையிடமிருந் தும் எச்சரிக்கை வந்தபின்னாவது இந்தியா தற்காத்துக்கொள்ளப் போகிறதா என்பது தெரியவில்லை.