சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே வன்னியனூரில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கிவரு கிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையான ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினிகள், சி.சி.டி.வி. கேமரா, ஸ்பீக்கர், விளையாட்டு மைதானம், நூலகம், கலையரங்கம், சுற்றுச்சுவர், கழிப்பறை, ஆர்.ஓ. குடிநீர் என வன்னியனூர் அரசுப்பள்ளி அசத்தக் காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவக்குமார் எடுத்த முயற்சிகள்தான் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். பல்வேறு விருதுகளைப் பெற்ற இந்தப் பள்ளிக்கூடம், கடந்த ஆக.26-ஆம் தேதி முதல் கடும் சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறது.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ததைக் கண்டித்து, ஒட்டுமொத்த வன்னியனூர் கிராமத்தினரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமறுத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வன்னியனூர் சர்ச்சை குறித்து, பள்ளிப்பட்டி ஊராட்சியின் 7-வது வார்டு உறுப்பினர் சிவக்குமார் (பா.ம.க.), வன்னியனூரைச் சேர்ந்த செல்வராஜ், சித்ரா, காசிநாதன் ஆகியோர் நம்மிடம் பேசினர்.
"தலைமை ஆசிரியர் சிவக்குமார், இந்தப் பள்ளியில் 2011-ல் பணியில் சேர்ந்தார். அவரது, சொந்த முயற்சியின் பலனாக தற்போது இங்கு 286 குழந்தை கள் படித்துவருகின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு, மல்லிகுந்தம் காலனியைச் சேர்ந்த ஆசிரியர் ரவீந்திரநாத் இங்கு பணியில் சேர்ந்தார். அவர் வந்தபிறகுதான் எல்லா பிரச்னைகளும் ஆரம்பமானது. கடந்த ஜூன் மாதம், ஜீவா என்ற மாணவனை அவர் அடித்ததில், அவன் மயங்கி விழுந்து விட்டான். கன்னம் வீங்கிவிட்டது. பெற்றோர் போராட்டம் நடத்தி யதையடுத்து, அப்போதே அவர் விருதாசம்பட்டி பள்ளிக்கு பதிலி ஆசிரியராக (டெபுடேஷன்) மாற்றப்பட்டார். இதற்கெல்லாம் தலைமை ஆசிரியர் தான் காரணம் என்று கருதி, ரவீந்திரநாத், அவரு டைய உறவினர்கள், வி.சி.க. உள்ளிட்ட கட்சியினர் மூலம் தலைமை ஆசிரியர் மீது கலெக்டருக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஏராளமான புகார் மனுக்களை அனுப்பிவந்தார். இதில் தலைமை ஆசிரியருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
ஆசிரியர் ரவீந்திரநாத் சாதிரீதியில்தான் எதையும் அணுகுவார். அதுமட்டுமின்றி, மாணவி களிடம் வரம்புமீறியும் நடந்துகொண்டுள்ளார். மாணவன் ஜீவாவை அடித்ததாகக் கூறப்பட்ட புகார் குறித்து, அப்போது கல்வித்துறை அலுவலர் கள் விசாரித்தனர். அன்றைய தினமே தலைமை ஆசிரியர் சிவக்குமார் வாழதாசம்பட்டிக்கும், ரவீந்திரநாத் பள்ளிப்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். எந்தத் தவறும் செய்யாத தலைமை ஆசிரியரை ஏன் இடமாற்றம் செய்ய வேண்டும்? என்பதுதான் எங்கள் கேள்வி.
ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அழுத்தம் கொடுத்ததால் தான் சிவக்குமார் மாற்றப் பட்டுள்ளார். அவரை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தக்கோரி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமறுத்து போராடுகிறோம்'' என்றனர்.
இது ஒருபுறமிருக்க, ஆசிரியர் ரவீந்திரநாத், பள்ளிப்பட்டி அரசுப்பள்ளியிலும் பணியாற்ற முடியாத அளவுக்கு பா.ம.க. தரப்பில் நெருக்கடி தரப்பட்டது. அதனால், அவர் பணியில் சேர்ந்த முதல் நாளே, மேச்சேரி வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுக்கொண்டார்.
வன்னியனூர் அரசுப்பள்ளி விவகாரம் குறித்து அப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சிவக்குமாரிடம் கேட்டோம்.
"ஆசிரியர் ரவீந்திரநாத்தின் கற்பித்தல் பணியில் எந்தக் குறையும் இல்லை. பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்துகொண்டார் என்றும், அவர்களைக் கண்ணியமின்றி பேசுவதாக வும் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக பெண் ஆசிரியர்கள் குழு விசாரித்தபோது அதில் உண்மையில்லை என்று தெரியவந்தது.
இதுவரை இந்தப் பள்ளியில் ஆதிதிராவிடர் மாணவர்கள் சேர்க்கப்பட்டதேயில்லை. ரவீந்திர நாத் இரு ஆதிதிராவிடர் சமூக மாணவர்களுக்கு பள்ளியில் அட்மிஷன் போட்டார். மறுநாள், ஆசிரியர் ரவீந்திரநாத், ஜீவா என்ற மாணவனை அடித்துவிட்டதாகவும், அவனுக்கு ரத்தக்காயம் ஏற்பட்டதாகவும் பெற்றோர்கள் திரண்டுவந்து புகாரளித்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரிக் கிறேன் என்று சொன்னேன். அதைக் கேட்காத பெற்றோர்கள் 40-க்கும் மேற்பட் டோர் திடீரென்று பள்ளி முன்பு திரண்டு ரவீந்திரநாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம், கடந்த ஜூன் 17-ம் தேதி நடந்தது.
சி.சி.டி.வி. கேமராவை ஆய்வுசெய்ததில் மாணவன் ஜீவாவை, காயம் ஏற்படும் அளவுக்கு ரவீந்திரநாத் அடிக்கவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும், ஊர்க்காரர்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை அன்று மாலையில் விருதாசம்பட்டி பள்ளிக்கு இடமாற்றம் செய்தனர்.
நான் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக வும், பட்டியல் சமூக மாணவர்களுக்கு அட்மிஷன் மறுப்பதாகவும் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாக வி.சி.க.வினர், முதன்மைக் கல்வி அலுவலரிடம் என்மீது புகாரளித்தனர். அதன்பேரில், கடந்த ஆக. 26-ஆம் தேதி என்னையும் வன்னியனூரிலிருந்து இடமாற்றம் செய்துவிட்டனர்'' என்றார்.
இந்த சர்ச்சை குறித்து ஆசிரியர் ரவீந்திர நாத்திடம் கேட்டோம்.
"வன்னியனூர் அரசுப்பள்ளியில் நான் பணியில் சேர்ந்த நாள்முதலே, உள்ளூர் மக்களுக்கு என் மீது தனிப்பட்ட பார்வை இருப்பதாக தலைமை ஆசிரியர் சிவக்குமாரே சிலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். அதற்குக் காரணம், நான் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதுதான். இந்தப் பள்ளியின் செயல்பாடுகள் அனைத்திலும் பா.ம.க. தலையீடு இருப்பதும் இன்னொரு காரணம்.
கடந்த ஜூன் மாதம், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளுக்கு இங்கு அட் மிஷன் கேட்டு வந்திருந்தனர். அட்மிஷன் போடும்போது டி.சி. தேவையா இல்லையா என்பதில் எனக்கும், ஹெச்.எம். சிவக்குமாருக்கும் கருத்து முரண் ஏற்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூன் 16-ஆம் தேதி அந்த இரு குழந்தைகளுக்கும் அட்மிஷன் வழங்கப்பட்டது.
வன்னியனூர் பள்ளி வரலாற்றில் பட்டியல் சமூக குழந்தைகள் சேர்க்கப் பட்டது இதுதான் முதல்முறை. நான் ஜீவா என்ற மாணவனை, மயக்க மடையும் வகையிலோ, ரத்தக்காயம் ஏற்படும்படியோ அடிக்கவில்லை என்பது சி.சி.டி.வி. ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தின் பேரில் என்னை அன்றைக்கே, விருதாசம் பட்டி அரசுப்பள்ளிக்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டனர். அதன்பிறகு என் மீதான புகார் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது. விசாரணையில், என் மீதான புகார் பொய் என்பது தெரியவந்தது'' என்றார்.
நமது கள விசாரணையில், ஆசிரியர் ரவீந்திரநாத் மீதான வெறுப்புக்கு பின்னணியாக இருப்பது சாதிய வன்மம்தான் என்பது தெரியவந்தது.
மல்லிகுந்தம் ஊராட்சிமன்றத் தலைவர் செல்லம்மாள் வைத்திய லிங்கம் மகன் கலைசெல்வன். பா.ம.க. பிரமுகர். ஊராட்சிமன்ற நிதியில் முறைகேடு நடப்பதாகவும், ஆதிதிராவிடர் மக்களுக்கு முறையாக செலவு செய்வதில்லை என்றும் ஆசிரியர் ரவீந்திரநாத் மற்றும் அவருடைய நண்பர்கள் தொடர்ந்து புகார் மனுக்கள் அனுப்பிவந்துள்ளனர். இதுதொடர்பாக கலைச்செல்வனுக்கும், ஆசிரியர் ரவீந்திரநாத் தரப்புக்கும் உரசல் இருந்துள்ளது. இந்தப் பின்னணியில்தான் கலைசெல்வன், ஆசிரியர் ரவீந்திரநாத்துக்கு எதிராக ஊர் மக்களைத் தூண்டிவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதைப்பற்றி நாம் கலைச்செல்வனிடம் விசாரித்தோம். "அவனுக்கு ஜாதி உணர்வு அதிகம் சார். ஹெச்.எம்., உள்பட எந்த வாத்தியாரையும் மதிக்கமாட்டான். ஹெச்.எம். சிவக்குமாரை பழிவாங்கும் நோக்கத்தில், ரவீந்திரநாத்தும் அவனுடைய கூட்டாளிகள் 9 பேரும் சேர்ந்து, அவர் மீது தினமும் கலெக்டரிடம் புகார் கொடுத்துவந்துள்ளனர். இதனால் எங்கே சாதிப் பிரச்னை வந்துவிடுமோ என்ற பயத்தில்தான் ஹெச்.எம். சிவக்குமாரை இடமாற்றம் செய்தனர்.
இவன் போலி சான்றிதழ் கொடுத்துதான் ஆசிரியர் பணிக்கே சேர்ந்தான். அவங்க சாதிக்கார அதிகாரிகள் துறையில் இருப்பதால் அவன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மல்லிகுந்தம் ஊராட்சி நிதி ஒதுக்கீடு பற்றி கேட்க இவன் என்ன மக்கள் பிரதிநிதியா? இதில் பா.ம.க. பெரிய லெவலில் இறங்கும். இனி ரவீந்திரநாத்துக்கு எதிராக தினமும் பெட்டிஷன் பறக்கும் பாருங்க'' என ஏக வசனத்தில் தாளித்தார் கலைச்செல்வன்.
இந்நிலையில் செப். 8-ஆம் தேதி, கூடுதல் ஆட்சியர், மேட்டூர் பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவம் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை அதிகாரிகள் வன்னியனூர், பள்ளிப்பட்டி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், 6 மாதம் கழித்து தலைமை ஆசிரியர் சிவக்குமார் மீண்டும் இதே பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்படுவார் என்றும், செப்-9 முதல் குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டனர். பொதுமக்களும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, குழந்தைகளை வரவேற்க ஆசிரியர்கள், அதிகாரிகள் தயாராக இருந்த நிலையில், செப். 9-ஆம் தேதியன்றும் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர். பின்னர், படிப்படியாக குழந்தைகள் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கேட்டபோது, "ஒரு பள்ளிக்கான தேவைகள் பற்றி கேட்டால், அதை நிறைவு பண்ணமுடியும். ஆனால், "ஈகோ' அரசியலை சரி செய்ய முடியாது. அரசுப்பணியில் இடமாறுதல் சகஜமானது. மாறுதலில் சென்றவர்தான் வேண்டும் என்று கேட்பது சரியல்ல'' என்றார்.
சாதி அரசியலால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாவது வேதனை!