சதுரங்க வேட்டை பட பாணியில் தொழில்ரீதியாக முதலீடு செய்வதாகக் கூறி, நூதன முறையில் பணத்தை ஏமாற்றும் மோசடி மன்னன் மீது அடுக்கடுக்கான புகார்களால் போலீசார் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் நாகார்ஜூனா. மத்திய அரசின் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகளும், ஆறுமுகம் என்பவரின் மகளும் இளம் வயதி-ருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் நெருக்கமான தோழிகளாக மாறியதால், இரு குடும்பத்தினரும் நெருக்கமாகியுள்ளனர். ஆறுமுகம் அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்திவருகிறார். அவரது கடையை மேம்படுத்த பணம் தேவைப்பட்டுள்ளது. நாகார்ஜூனாவிடம் பண உதவி கேட்டுள்ளார். இதனை சும்மா ஒன்றும் கொடுக்கவேண்டாம், உங்க பொண்ணுக்காகத் தானே இந்த பணத்தை வைத்திருக்கீங்க? அந்த பணத்தை என்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்து, அதில் வரும் லாபத்தை வைத்து நம்முடைய இரு பொண்ணுங்க பெயரில் தனி பிராஞ்சசையே தொடங்கிக் கொடுத்துடலாம் என ஆசையைத் தூண்டி, பணத்தை வாங்கி ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக நாகார்ஜூனா தாம்பரம் காவல் நிலையத்தில் ஆறுமுகத்தின் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து செம்மஞ்சேரி போலீசார் ஆறுமுகத்தை தேடிவருகிறார்கள்.
யார் இந்த ஆறுமுகம்?
தலைமறைவாகியுள்ள ஆறுமுகம் மீது இதற்கு முன்பாகவே பல வழக்குகள் உள்ளன. பணக்காரர்களாகப் பார்த்து, அவர்களிடம் பழகி ஏமாற்றுவதையே அவரது வேலையாக வைத்துள்ளார். அவரிடம் பணம் கொடுத்தவர்கள் திரும்பப் பணத்தை கேட்டால், காவல்துறையிலுள்ள உயரதிகாரிகளைத் தன் கையில் வைத்துக்கொண்டு அவர்களின் மீதே வழக்கை திருப்பிவிட்டு, அவர்களை மிரட்டுவதையே வழக்கமாக வைத்துள்ளார். அப்படி பாதிக்கப்பட்டவர்தான் தொழிலதிபர் லோகநாதன். 2016ஆம் ஆண்டு லோகநாதனிடம், "மழை வெள்ளத்தில் தன்னுடய நிறுவனத்தி-ருந்த மெட்டீரியல் அனைத்தும் வீணாகிவிட்டது. அதனை சரிசெய்தால் என்னால் பல லட்சங்கள் வருவாய் ஈட்ட முடியும்' எனச் சொல்லி, 50 லட்சம் ரூபாயை வாங்கி ஏமாற்றியுள்ளார். பணத்தை திருப்பிக் கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி, இவர் மீதே பொய்யான புகாரினை, 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி 7ஆம் தேதி கானத்தூரில் கொடுத்ததோடு, சென்னை கமிஷனர் அலுவலகத்திலுள்ள சி.சி.பி. பிரிவிலும் புகார் கொடுத்துள்ளார்.
இந்த வழக்கினை அவசர அவசரமாக விசாரித்த அப்போதைய சி.சி.பி. டீம் 7, ஏ.சி. அசோகன், லோகநாதனை அழைத்து, ""இனிமேல் ஆறுமுகத்திடம் பணம் கேட்கக்கூடாது. இதை இத்தோடு விட்டுட்டு போவதாக இருந்தால் நீங்க வீட்டுக்கு போகலாம், இல்லைன்னா ஜெயிலுக்குத்தான் போகணும்'' என்று மிரட்டியுள்ளார். அதற்கு லோகநாதனோ, ""இது எந்தவிதத்தில் நியாயமாகும்? என்னுடைய பணத்தைக் கேட்பதற்கு என் மீதே வழக்கா? பரவாயில்லை, என்மீது வழக்கு வேண்டுமானலும் போட்டுக்கோங்க, நான் என்னுடைய பணத்தை வாங்கியே தீருவேன்'' எனச் சொன்னதும், உடனடியாக அவரை கைது செய்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், 2018-ல் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆனந்த் என்பவரும் ஆறுமுகம் மீது புகார் கொடுத்துள்ளார். அதே ஆண்டில் தி.நகர் காவல்நிலையத்திலும் இவர்மீது புகார் பதிவாகியுள்ளது. இப்படி இவர் மீது பல்வேறு பண மோசடி குற்றச்சாட்டுகள் இருப்பதைக் கண்ட அப்போதைய தி.நகர் டி.சி. அரவிந்தன், உடனடியாக ஆறுமுகத்தை தட்டித்தூக்கி கைது செய்தபோது, மயங்கி விழுவதுபோல் நாடகமாடிய ஆறுமுகம், மருத்துமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்குள்ளாகவே தி.நகர் டி.சி.க்கு அவரை விட்டுவிடச்சொல்லி, அத்துறை உயரதிகாரியிடமிருந்து உத்தரவு வந்துள்ளது. அதற்கு செவிசாய்க்காத தி.நகர் டி.சி.யை உடனடியாக பணியிட மாற்றம் செய்து ஆறுமுகத்தை காப்பாற்றியுள்ளனர்.
இந்த ஆறுமுகத்தின் அண்ணன் மகனுக்கு ஏ.டி.ஜி.பி. தமிழ்ச்செல்வன் மகளை திருமணம் செய்துவைத்த காரணத்தால், தமிழ்ச்செல்வனின் செல்வாக்கால், அப்போதைய கமிஷனராக இருந்த ஏ.கே. மூலமாக ஆறுமுகத்தை காப்பாற்றியுள்ளனர்.
அதன்பிறகு மேலும் கெத்தாக காலரை தூக்கிவிட்டுக்கொண்டு திரிந்த ஆறுமுகம், அடுத்ததாக, தன்னிடம் பணிபுரியும் மூன்று பேர்களின் பெயரில் சொந்தமாக ஸ்மால் ஸ்கேல் இண்டஸ்ட்ரீஸ் பிசினஸ் செய்வது போல் காட்டி, 1 கோடியே 50 லட்சம் ரூபாய் லோன் பெற்று ஏமாற்றியுள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்துவருகிறது. அன்றி-ருந்து இன்றுவரை, ஓய்வுபெற்ற அதிகாரி நாகார்ஜூனா வரை, ஆறுமுகத்தின் பண மோசடி திருவிளையாடல்கள் தொடர்ந்துகொண்டே வருகிறது.