""ஹலோ தலைவரே, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸை, ஏகத்துக்கும் சப்போர்ட் செய்வதான்னு எடப்பாடி அரசு மீது, காவல் துறை உயர் அதிகாரிகள் ஏக கடுப்பில் இருக்காங்க.''’’
""ஆமாம்பா, மேற்குவங்க டி.ஜி.பி.வீரேந்திரா மீது இதுபோன்ற புகார்கள் எதுவும் இல்லாத நிலையிலேயே, தேர்தல் ஆணையம் அவரை மாற்றியிருக்கு. அப்படி இருக்க, இந்த ராஜேஷ்தாஸை அது இன்னும் எதுக்காக விட்டுவச்சிருக்கு?''
""இந்த விவகாரத்தின் பின்னணியில் ஏகப்பட்ட அரசியல் இருக்குங்க தலைவரே. இந்த விவகாரத்தில் ராஜேஷ்தாஸின் அத்துமீறல்கள் குறித்து முறைப்படி காவல்துறை டி.ஜி.பி.திரிபாதி, தமிழகத் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு ரிப்போர்ட்டை அனுப்பினார். அதேபோல் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.யை சென்னைக்கு வரவிடாமல் தடுத்து அடாவடித்தனமாக நடந்துகொண்ட செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் பற்றியும் அவர் ரிப்போர்ட் அனுப்பினார். ஆனால் தமிழக தேர்தல் ஆணையரான சத்யபிரதா சாகுவோ, செங்கல்பட்டு எஸ்.பி.தொடர்பான ரிப்போர்ட்டை மட்டும் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப, ஏ2-வான அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஏ1 ராஜேஷ்தாஸோ எந்த நடவடிக்கைக்கும் ஆளாகாமல் பாதுகாப்பாக இருக்கிறார். காரணம் அவரும் சத்யபிரதா சாகுவும் ஒரிசாக்காரர்களாம். அந்த மாநில பாசத்தில்தான் டி.ஜி.பி.யின் ரிப்போர்ட்டை தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சாகு அனுப்பலையாம். இப்படிப்பட்டவர் தேர்தல் அதிகாரியாக இருந்தால், தேர்தல் எப்படி நேர்மையாக நடக்கும்?ன்னு காவல்துறை வட்டாரமே கேள்வி எழுப்புது.''’’
""அது சரிப்பா, கூட்டணியில் இருந்து கழன்றுகொண்டிருக்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க. மீது கடும் கோபத்தில் இருக்குதே. அக்கட்சியின் இளைஞரணி பொறுப்பாளர் சுதீஷ், அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும் என்றும், அக்கட்சியில் உள்ள கே.பி.முனுசாமி, பா.ம.க.வின் "ஸ்லீப்பர் செல்'லாக இருக்கிறார் என்றும் ஏகத்துக்கும் தாக்கியிருக்காரே?''’’
""உண்மைதாங்க தலைவரே... அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லைன்னு முடிவானதும் தே.மு. தி.க.வினர் பட்டாசு வெடிச்சி கொண்டாடி னார்களே! கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க., "இந்தத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு 13 சீட்டுகள் மட்டும்தான் கொடுக்கமுடியும்'னு சொன்னது. ஆனால் தே.மு.தி.க.வோ, "பா.ம.க.வுக்கு ஒதுக்கியதுபோல் எங்களுக்கும் 23 சீட்டுகளை ஒதுக்கணும்'னு பிடிவாதம் பிடித்தது. அப்போது அ.தி.மு.க. தரப்பில் பேசிய கே.பி.முனுசாமி, ஒரு ரிப்போர்ட்டை அவர்களிடம் காட்டி, "சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை 2006-ல் பா.ம.க 5.56 சதவீதம் வாங்கியிருக்கு. நீங்கள் 8.38 சதவீதம்னு அதிகமாகவே வாங்கியிருந்தீங்க. ஆனால் 2016-ல் அவர்கள் 5.32 சதவீதம். ஆனா... நீங்கள் கிடுகிடுன்னு சரிஞ்சி 2.39 சதவீதம்னு ஆயிட்டீங்க. அதேபோல நாடாளுமன்றத் தேர்தல்லயும் கொஞ்சம் கொஞ்சமா உங்க ஓட்டு சரிஞ்சிருக்கு. கடைசியா 2019 தேர்தலில் அவர்கள் 5.49 சதவீதம் வாங்க, நீங்க 2.22 சதவீதம்தான் வாங்கியிருக்கீங்க. அப்படி இருக்க... எப்படி பா.ம.க.வுக்கு இணையான சீட்டுகளைக் கேட்கறீங்க? விகிதாசாரக் கணக்குப்படி பார்த்தா உங்களுகு 8 சீட்டுகளைத்தான் ஒதுக்கணும்'னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்லியிருக்கார்.''’’
""புள்ளிவிபரத்தின் மூலம் கே.பி.முனுசாமி, தே.மு.தி.க.வின் நிலையைச் சுட்டிக் காட்டியதால் தான், அவருக்கு சுதீஷ் பதிலடி கொடுத்தாரா?''’’
""ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. தரப்பின் இந்த கமெண்டுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தே.மு.தி.க. திகைத்துப்போயிடுச்சி. அ.தி.மு.க.வோ, "எங்க கூட்டணியில் இருந்துக்கிட்டே நீங்கள் பொதுவெளியில் எங்களை மோசமாக விமர் சிப்பதை ஜீரணிக்க முடியலை. அதோட உங்களுக்கு தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி இருக்குன்னு சொல்லும் நீங்கள், வட தமிழகத்தில் மட்டுமே தொகுதிகளை எதுக்குக் கேட்கறீங்க?'ன்னு கிடுக்கிப் பிடி போட்டு பிடிச்சிருக்குது. தே.மு.தி.க.வோ, "நடந்ததை விடுங்க. எங்களுக்கு 18 சீட்டுகளும், தொகுதிக்கு 20 சி’ வீதமும் கொடுங்க'ன்னு கேட்டது. அ.தி.மு.க. தரப்போ, "நீங்க 8 சீட்டுக்கு ஒத்துக்கிட்டால், தொகுதிக்கு 5 சி’ வீதம் 40 சி’ தர்றோம். 13 சீட் வேணும்னு சொன்னீங்கன்னா, செலவுக்கு பணம் தரமாட்டோம்'னு கறாராகச் சொன்னதால்தான், அவர்களின் கூட்டணி உறவு ’பணால்’ ஆயிருக்கு.''’
""இப்ப தேமு.தி.க.வின் மூவ்கள் எப்படி இருக்குது?''’’
""மா.செ.க்கள் கூட்டத்தை கூட்டி விவாதித்த பிரேமலதா, தொகுதியில் யாரை நிறுத்தலாம்ன்னு கேட்டு மா.செ.க்களிடம் பரிந்துரைப் பட்டியலைக் கேட்டு வாங்கினாரு. குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய்வரை செலவு செய்யக்கூடியவர்களை மட்டுமே பரிதுரையுங்கள்னு அவர் சொன்னதால், இதைத் தயாரிக்கவே மா.செ.க்களுக்குத் தாவு தீர்ந்துடுச்சாம். அதேபோல் மா.செ.க்களும் கட்சி வேட்பாளர்களுக்குச் செலவு செய்யணும் என்றும் அவர் சொல்ல, இதற்கு பலரும் சம்மதிக்கவில்லையாம். இந்த நிலையில் கமலின் "மக்கள் நீதி மய்யம்' மற்றும் தினகரனின் "அ.ம.மு.க.' ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து விவாதம் நடத்தியிருக்கிறார். அப்படி கூட்டணி வைத்தால், நாம் முதல்வர் வேட்பாளராக கமலையோ, தினகரனையோ ஏற்கவேண்டி வருமே என்று கட்சி நிர்வாகிகள் சுட்டிக்காட்ட, வேறவழி என்று வெறுப்பாகவே சொல்லியிருக்கிறார்.''
""கட்சிக்காக பட்டாசு வெடிச்சாலும் கட்சியோட எதிர்காலத்துக்கு வேட்டு வைக்கப் பட்டிருக்கு.''’’
""அ.தி.முக.விலும் இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன் இழுபறி நீடித்ததே?''’’
""அ.தி.மு.க. மா.செ.க்களின் 3 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை வைத்துக்கொண்டு எடப்பாடி ஒரு வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்தார். அதை ஓ.பி.எஸ்.சிடம் காட்டும்படி, அமைச்சர்களான தங்கமணி, வேலுமணியிடம் கொடுத்தனுப்பினார். அதை வாங்கிப் பார்த்த ஓ.பி.எஸ். கோபத்தில், அதை டேபிள்மீது தூக்கிவீசிவிட்டு, ’"நாம் போட்டியிடும் தொகுதிகளில் 60-க்கு 40 என்கிற விகிதத்தில் எடப்பாடியும் நானும் பிரிச்சிக்க லாம்ன்னுதானே முடிவு செய்தோம். ஆனால் பட்டியல் அப்படி இல்லையே. வெறும் 12 பேருக்குத்தானே என் சிபாரிசு ஏற்கப் பட்டிருக்கு'ன்னு சத்தம் போட்டிருக்கார். அப்புறம், "ஏற்கனவே முடிவெடுத்ததுபோல் பட்டியல் இருந்தால்தான் கையெழுத்துப் போடு வேன்'னு சொல்லிவிட்டாராம் ஓ.பி.எஸ். இது எடப்பாடியிடம் தெரிவிக்கப்பட... "இப்படியெல்லாம் நாட்டாமை பண்ணினால் என்ன பண்றது? கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, பிறகு இது பற்றிப் பார்க்கலாம்'னு ஃபைலை மூடி வச்சிருக்காரு. செவ்வாய்க்கிழமை இரவு ரொம்ப நேரம் பா.ஜ.க., பா.ம.க.வுடன் தொகுதிகள் முடிவாகி, புதன்கிழமை அ.தி.மு.க.வின் 171 தொகுதிக்கான பட்டியல் வெளியானது.''’’
""பொள்ளாச்சி பாலியல் கொடூரங்களின் பின்னணியில் இருக்கும் அந்த பவர் புள்ளி, "நான் பொள்ளாச்சியில் தேர்தலில் நிற்க விரும்பறேன்'னு தைரியமா கேட்டிருக்காரே?''’’
""உண்மைதாங்க தலைவரே, அவர் மகனும் அவர் நண்பர்களும் மெஹா பெண் வேட்டையில் இறங்கி குடும்பப் பெண்கள் முதல் கல்லூரி மாணவிகள் வரை பலரையும் சீரழிச்சி வந்ததை நக்கீரன் அம்பலப்படுத்தியது. இந்த நிலையில் அந்த பொள்ளாச்சி பிரமுகர் மீது, அந்தத் தொகுதி மக்களும் கடும் கோபத்தில் இருப்பதால், அவருக்கு திருப்பூர் மாவட்டப் பொறுப் பைக் கொடுத்து, அங்கே அனுப்பி வச்சார் எடப்பாடி. ஆனால் அந்தப் பிரமுகரோ, "என் பெயரின் அடையாளமே பொள்ளாச்சி தானே, என்னை எங்கோ போய் நிக்கச்சொன்னால் எப்படி? இந்த முறை நான் பொள்ளாச்சியிலேயே அமோகமா ஜெயிப்பேன். காரணம், இங்கே 2 முறை என்னிடம் தோற்ற தமிழ்மணியைத்தான் தி.மு.க. நிறுத்தப்போவுதாம். நெகமம் கந்தசாமியின் பேரனான சபரிக்கு தி.மு.க. சீட்டு கொடுக்கறமாதிரி இருந்தால், நான் இங்கே சீட்டைக் கேட்டே இருக்கமாட் டேன்'னு சொன்னாராம்.''’’
""காங்கிரஸுக்கு 25 சீட்டுகளைக் கொடுத்த தி.மு.க., தொகுதிகளை எப்படிப் பிரிசிக்கப் போகுதுனு எதிர்பார்ப்பும் அதிகமா இருந்ததே?''’’
""ஆமாங்க தûலைவரே... காங்கிரஸுக்கு 25 சீட்டுகளை ஒதுக்கிய தி.மு.க., சென்னையில் எந்த ஒரு தொகுதியையும் கேட்கக் கூடாதுன்னு கறாராகச் சொல்லியிருந்தது. ஆனால் இப்போது, இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த தொகுதியான ஆர்.கே. நகரை காங்கிரஸிடம் தள்ளிவிடலாம்னு அறிவாலயத்தில் ஆலோசிக்கப்பட... காங்கிரஸோ, மதுரவாயலைக் கேட்டு அடம் பிடித்தது. இதேபோல் காங்கிரஸ் தி.நகரைக் கேட்டால் கொடுத்துவிடலாம் என்ற எண்ணத்திலும் தி.மு.க. இருக்க, காங்கிரஸோ, அது எங்களுக்கு வேண்டாம் என்றதாம். காங்கிரசின் சிட்டிங் தொகுதிகளான 8-ஐயும் அதுக்கு அப்படியே ஒதுக்குவதில் தி.மு.க.வுக்கு தயக்கமில்லையாம். அதே நேரம், காங்கிரசோ, தான் ஜெயித்திருக்கும் 8 நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும் தலா ஒவ்வொரு சீட்டை அது தி.மு.க.விடம் எதிர்பார்த்தது. இந்தநிலையில், ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் தலைவர்களைத் தொடர்பு கொண்டு, இந்தத் தேர்தலில் 70 வயதைக் கடந்தவர்களுக்கும், மூன்றுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கக்கூடாதுன்னு பிரேக் பிடிச்சிருக்காராம்.''’’
""காங்கிரஸுக்குள் இட ஒதுக்கீட்டுக் குரல் கேட்குதே?''’’
""உண்மைதாங்க தலைவரே, காங்கிரஸில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் இந்து சிறுபான்மையினருக்கும் தொடர்ந்து பிரதி நிதித்துவம் மறுக்கப்பட்டு வருகிறது என்ற முணுமுணுப்பு தொடர்ந்து கேட்டுவருகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.எம்.இதாயத்துல்லா, இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் தேர்தலில் நிற்க சீட்டு வழங்கவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலின் போதும் சத்தியமூர்த்தி பவனில் இதற்கான குரலை அவர் வலியுறுத்தி வருவது வழக்கம். கடந்த எம்.பி. தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் களுக்கு சீட் தரப்படாததைச் சுட்டிக்காட்டினார். இம்முறையும் அதனை வலியுறுத்துவதுடன் களமிறங்கவும் ஆயத்தமாக உள்ளாராம். தி.மு.க.விடம் 25 சீட்டுகளைப் பெற்றிருக்கும் காங்கிரஸ், சிறுபான்மையினருக்கு எந்த அளவுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம்கள் மத்தியில் பலமாக எழுந்திருக்கிறது.''’
""நானும் ஒரு முக்கிய தகவலைச் சொல்றேன். மறைந்த சங்கரமட ஜெயேந்திரருக்கு நெருக்கமான பெண்ணான கௌரி காமாட்சிக்கும், இப்போதைய சங்கராச்சாரியாரான விஜயேந்திரருக்கும் இடையில், கேரளாவில் இருக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடர்பான பிரச்சினை இருப்பது பற்றி நாம் தொடர்ந்து பேசியிருக்கோம். இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, கௌரி காமாட்சிக்கு சொந்தமான கிருஷ்ணகிரியில் உள்ள வீட்டை ஒரு ரவுடிக் கும்பல் அராஜகமாக இடித்துவிட்டதாம். இது தொடர்பாக கௌரி காமாட்சி சங்கரமட விஜயேந்திரர் மீது கிருஷ்ணகிரி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். அவர் தரப்போ, சங்கரராமன் படுகொலைக்குப் பின் ரவுடிகளிடமிருந்து விலகியிருந்த சங்கரமடம், இப்போது மீண்டும் அவர்களோடு கைகோர்க்கத் தொடங்கி விட்டது. இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோன்னு குமுறுது.''’