அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திரபாலாஜி இருந்தபோது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவினிலிருந்து தரக்கட்டுப்பாடு மேலாளர் முத்துகார்த்திகேயன், தனது காரில் பெட்டி பெட்டியாக ஆவின் நெய் எடுத்துச் சென்றதை, பக்கத்து கட்டிடத்தில் ஒளிந்திருந்து எடுத்த பழைய வீடியோவை நமக்கு அனுப்பியவர்கள், குமுறலோடு சில தகவல்களைப் பகிர்ந்தனர்.
2020-21-ல் ஆவின் தலைமையகங்களில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு, தேர்வு நடத்தாமல் பணி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆவின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்தியது. முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 236 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலர் வழக்கு தொடர, பணி நீக்க உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்ததாக 26 அதி காரிகள் கண்டறியப்பட்ட நிலையில், அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்காமல், ஊழியர்களை மட்டும் பணிநீக்கம் செய்துள்ள னர். அப்போது நடந்தது எல்லாமே நிர்வாகக் குளறுபடிகள்தான். அதற்கு முழுமுதல் காரணமாக இருந்த அதிகாரிகள் காப்பாற்றப் பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பணிநீக்கத்துக்கு ஆளான 236 பேரில், ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் 25 பேர் நீக்கப்பட்டிருந்தனர். உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை பிறப்பித்த நிலையில், அந்த உத்தரவோடு வரும் யாரை யும் மீண்டும் பணியில் அமர்த்தக்கூடாது என்று அமைச்சக வட்டாரத்திலிருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் பொது மேலாளர் சதீஷுக்கு வாய்மொழியாக அழுத்தம் தந்துள்ளனர். ஆனாலும் பணிநீக்கத்துக்கு ஆளான பொறியாளர் மகேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் பொது மேலாளர் சதீஷிடம் ‘கோர்ட் உத்தரவை மதித்தே ஆகவேண்டும்..’ என முட்டிமோதி மீண்டும் பணியில் சேர்ந் தார். அமைச்சகத்தில் இதையறிந்த முக்கிய புள்ளி, சதீஷின் லைனுக்கு வந்து ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, அவரை திருப்பூருக்கு இடமாற்றம் செய்யவைத்தார்.
"உயர்நீதிமன்ற உத்தரவை மதித்ததற்காக என்னை அவமானப்படுத்துவதா? ஒரே ஒரு ஊழியரை மீண்டும் சேர்த்ததற்கு இத்தனை ஆத்திரப்படுவதா? நீக்கப்பட்ட மேலும் 15 பேரை பணியில் அமர்த்திவிட்டே கிளம்பு கிறேன்'’என மனஉறுதியோடு, அந்த 15 பேரையும் தொடர்புகொண்டு அழைத்த பொதுமேலாளர் சதீஷ், ஆவின் கதவுகளைத் தாராளமாக திறந்துவிட்டார். இந்நிலையில் பொதுமேலாளர் சதீஷுக்கு இழைக்கப்பட் டது அநியாயம்?’ என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவினில் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் உஷ்ணமாகி, பழைய நெய் கடத்தல் வீடியோ விவகாரத்தைக் கையில் எடுத்தனர். இதற்கும் பொதுமேலாளர் இட மாற்றத்துக்கும் என்ன சம்பந்தம்?
அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவினில் தரக்கட்டுப்பாடு மேலாளராக இருந்த முத்துகார்த்திகேயன், அம்மா கிட்’ என்ற பெயரில் ஆவின் நெய் பெட்டிகளுக்கு தானே கேட் பாஸ் போட்டு, தனது காரில் எடுத்துச் சென்றார். அந்தக் காட்சியை மறைந்திருந்து வீடியோ எடுத்து ஆதாரமாக்கி னார்கள். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ஊழலுக்கு எதிரான வர்கள் இல்லையே? ஆவின் ஊழல் தடுப்பு பிரிவு அதி காரியால் அந்தப் புகார் முடித்துவைக்கப்பட்டது. இதற்கு பரிகாரமாக, அன்றைய ஆவின் விஜிலன்ஸ் அதிகாரி பன்னீர்செல்வம், அப்போது இருந்த பொதுமேலாளர் ராமநாதன் ஆகியோர் முத்துகார்த்திகேயனால் சிறப்பாக கவனிக்கப்பட்டதாக இன்றுவரையிலும் பேசப்படுகிறது.
‘ஊழியர்கள் இரண்டு வருடங்கள் பணியாற்றிய நிலையில், முறைகேடாக பணி நியமனம் நடந்ததாகத் தானே பணி நீக்கம் செய்தார்கள்? இந்த தீவிரம் அதி காரிகள் விஷயத்தில் காட்டப்படவில்லையே? அ.தி.மு.க. ஆட்சியில் ஆவின் நெய் கடத்தலில் ஈடுபட்ட முத்து கார்த்திகேயன் போன்ற ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக மறுவிசாரணை நடத்தலாமே? மீண்டும் பணியில் சேர லட்சங்களில் இப்போதும் பேரம் நடக்கிறதே? அதனைத் தடுத்து நிறுத்தலாமே? அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழலைத் தோண்டி நியாயத்தை நிலைநிறுத்துவீர்கள் என்றுதானே நெய் கடத்தல் வீடியோவை அனுப்பி வைத்தோம்? கண்டுகொள்ளாதது ஏன்? அ.தி.மு.க. ஆட்சி யில் மெஷினரி’ பெயரில் கோடிக்கணக்கில் கோல்மால் செய்த மதுரை பாபு வெல்டிங், தி.மு.க. ஆட்சியிலும் ஏமாற்று வேலையைத் தொடர அனுமதிக்கப்படுகிறதே? தி.மு.க. ஆட்சியில் தஞ்சாவூருக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார் முத்துகார்த்திகேயன். இந்த நடவடிக்கை ஆவின் நெய் கடத்தலை அங்கீகரிப்பது போல் அல்லவா இருக்கிறது?’ என்ற கொதிநிலையில்தான் பழைய கடத்தல் வீடியோவை வாட்ஸ்-ஆப் குழுக்களில் வெளியிட்டு, தமிழ் நாடு முதலமைச்சரின் கவனம்பெற முனைந்துள்ளனர்.
தஞ்சாவூர் ஆவின் தரக்கட்டுப்பாடு மேலாளர் முத்துகார்த்திகேயனை தொடர்புகொண்டோம்.
"2019-ல என்ன நடந்துச்சுன்னா, அவசரமா அம்மா கிட்டுக்கு ஆவின் நெய் கேட்டாங்க. டிரைவர் இல்ல. அதான், நானே எடுத்துட்டு போனேன். ஆவின் டெக்னீசியன் அய்யனார்தான் எனக்கு தெரியாம அந்த வீடியோவ எடுத்தாரு. அப்ப அது பெரிய பிரச்சனை ஆச்சு. சதீஷ் சார் சின்னப்புள்ளத்தனமா சென்னைல என்னை கம்ப்ளைன்ட் பண்ணுனாரு. என்னை திருட்டுப் பையன்னு சொன்னாரு. திருடிப் பிழைக்கணும்கிற அவசியம் எனக்கு இல்ல. 2020-ல ராஜகுமார்னு ஒரு ஜி.எம். வந்தாரு. என்னையும் சேர்த்து மூணுபேர் கொண்ட அதிகாரிகள் டீம் போட்டு இன்ஸ்பெக்ஷன் பண்ணச் சொன்னாரு. கேட்லிபாஸ் இல்லாம அய்யனார் பால் எடுத்துட்டு போனத கண்டுபிடிச்சு ரிப்போர்ட் கொடுத்தோம். ஆனா, அவரு மேல நடவடிக்கை எடுக்கல. அப்ப ஆளும்கட்சி (அ.தி.மு.க.) எம்.எல். ஏ.வா இருந்த சந்திரபிரபா அய்யனாருக்கு சித் திங்கிறதுனால, அவருக்கு சப்போர்ட் பண்ணுனாங்க.
பழைய வீடியோவ மினிஸ்டர் நாசர்கிட்ட காமிச்சு என்னை போட்டுக் கொடுத்தாங்க. நான் கேஸ் முடிஞ்சிருச்சுன்னு சொல்லிட்டேன். சதீஷ் சாரும் அய்யனாரும் எனக்கு எதிரானவங்க. சதீஷ் சாரை திருப்பூருக்கும் அய்யனாரை திருச்சிக்கும் இப்ப டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க. இந்த ரெண்டு டிரான்ஸ்பருக்கும் நான்தான் காரணம்னு பழைய வீடியோவ இப்ப விடறாங்க. மூணு மாசத்துக்கு முன்னால எடுத்த புது வீடியோ ஒண்ணும் இருக்கு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆவின் பிளான்ட்ல வால்வை பிடுங்கிவிட்டு நெய் கீழே ஓடுனத வீடியோ எடுத்து மினிஸ்டர் நாசருக்கு அனுப்புனாங்க. 500 லிட்டர் நெய் கீழேபோயி வீணாயிருச்சு. இந்த வீடியோவ பத்தி என்கிட்ட டீடெய்ல் கேட்டாங்க. நானும் அதிகாரிகள் தரப்புல விசாரிச்சு சொன்னேன். இந்த விவகாரத்துல அடிமட்ட ஊழியர் மேல நட வடிக்கை எடுத்துட்டு, டெக்னீசியன் அய்யனாரை விட்டுட்டாங்க. இதுல கொடுமை என்னன்னா, நெய் கீழே கொட்டுற வீடியோவ நான்தான் எடுத்தேன்னு என் மேல பழியைப் போடுறதுதான்.
2018-ல இருந்து ஆவின்ல போஸ்டிங் போட்டத கிளறுனாங்கன்னா, ரொம்பப் பேருக்கு தொடை நடுங்கிடும். அப்ப எம்.எல்.ஏ.வா இருந்த சித்தி சந்திரபிரபா சிபாரிசுல அய்யனாருக்கு ஆவின்ல டெக்னீஷியன் வேலை. அவரோட மனைவிக்கு பஞ்சாயத்துல வேலை. ஒரு கலப்பு திருமண சர்டிபி கேட்ட வச்சி புருஷன்-பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் அரசு வேலை வாங்கிருக்காங்க. அப்ப இருந்த போர்டு நல்ல போர்டு. ராஜேந்திரபாலாஜி எதுலயும் தலையிட மாட்டாரு. உண்மைய சொல்ல ணும்னா.. ராஜேந்திரபாலாஜிய பழிவாங்குறதுக்காக, அந்த பீரியட்ல போஸ்டிங் போட்டவங்கள வீட்டுக்கு அனுப்பி மனஉளைச்சல் தர்றாங்க. பணிநீக்கம் செய்யப்பட்டவங்க தரப்புல இருந்து அமைச்சர் நாசரை சந்திச்சிருக்காங்க. அமைச்சரை கவனிச்சு காரியம் சாதிச்சிடலாம்னு ட்ரை பண்ணி ருக்காங்க. அவரு எதுன்னாலும் கோர்ட்ல போய் பார்த்துக்கங்கன்னு நேர்மையா சொல்லிட்டாரு.
இப்பகூட ஃப்ரீ கிப்ட்னு ஒண்ணு தர்றாங்க. எல்லாரும் கையில கொண்டுபோறாங்க. அந்த ஃப்ரீ கிப்ட்ல இது இதுதான் இருக்குன்னு சொல்ல முடியுமா? நான் யாரையும் காட்டிக் கொடுக்கிற ஆளு இல்ல''’என்றார்.
இத்தனை குளறுபடிகளுக்கு இடையே, ‘நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இடைக்காலத் தடையுத்தரவு பெற்றவர்கள், மீண்டும் பணியில் சேர விண்ணப்பிப்பதும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போவதாக வழக்கறிஞர் அறிக்கை விடுப்பதுமாக உள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தவிர்த்திடும் வகையில், இடைக்காலத் தடை பெற்றுள்ள பணியாளர்களை, மீண்டும் பணி யில் சேர அனுமதித்துள்ளோம்’ என பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையருக்கு தகவல் அனுப்பியிருக்கிறார், தற்போதைய விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொதுமேலாளர் ஷேக் முகம்மது ரபி.
ஆவின் நிர்வாகத்தில் விருதுநகர் மாவட்ட யூனியனில் மட்டுமல்ல.. பல மாவட்ட யூனியன்களி லும் தீர்வுகாண வேண்டிய பிரச்சனைகள் மலிந்து கிடக்கின்றன.