ஸீன்-1
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், சதா, விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான படம் "அந்நியன்'. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர் ஹிட் அடித்த இப்படத்தை பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங்கை வைத்து இந்தியில் ரீ-மேக் செய்ய உள்ளதாகச் சமீபத்தில் அறிவித்தார் இயக்குநர் ஷங்கர். இப்படத்தை "பென் ஸ்டுடியோ' என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.
இதனிடையே "அந்நியன்'’ படத்தின் தயாரிப்பாளர் "ஆஸ்கர்' ரவிச்சந்திரன், "கதை உரிமம் என்னிடம் இருக்கும்போது, என்னுடைய அனுமதியின்றி படத்தை ஷங்கர் எப்படி ரீ-மேக் செய்ய முடியும்..?'' எனப் போர்க்கொடி தூக்கினார். இதற்காக இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸும் அனுப்பியிருந்தார் ரவிச்சந்திரன். இவர்களின் கதை உரிம மோதல்தான் தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்.
இதற்கிடையே "அந்நியன்'’படத்தை ரீ-மேக் செய்ய இருப்பதாக திடீர் அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் "ஆஸ்கர்' ரவிச்சந்திரன், பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரையும், ஜாக்கிசானையும் வைத்து ஷூட்டிங் செல்ல உள்ளதாக அறிவித்தார். ஏற்கனவே இவர் தயாரிப்பில் வெளியான "தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்குக்கூட ஜாக்கிசான் வந்திருந்த நிலையில், அப்போது மலர்ந்த நட்பின் மூலமாக அவரை படத்தில் நடிக்கவைக்க முடிவெடுத்துள்ளாராம். தற்போது ராம்சரண் படத்தை இயக்கும் ஷங்கர், அதன்பிறகு "இந்தியன்-2' படத்தை முடித்ததும், இந்த படத்தைத் துவங்கவுள்ள சூழலில்... "அதற்கு முன்னரே நான் படப்பிடிப்பைத் தொடங்கியே தீருவேன்' என சபதம் போட்டுள்ளாராம் "ஆஸ்கர்' ரவிச்சந்திரன்.
ஸீன்-2
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான படங்களில் நடிக்க முடிவெடுத்து, அதற்கேற்றாற்போல கதைகளைக் கேட்டு ஓ.கே. செய்து வருகிறார். அந்தவகையில், தற்போது சர்வதேச அளவில் தயாராக உள்ள ஒரு புதிய படத்தில் நடிக்க அவர் சம்மதித்துள்ளார்.
பிலிப்ஜான் என்ற பிரிட்டிஷ் இயக்குநர் இயக்கும் "அரேஞ்ச்மென்ட்ஸ் ஆப் லவ்' என்ற இந்த படத்தில், இருபால் சேர்க்கை உணர்வுகொண்ட ஒரு தமிழ்ப் பெண்ணாக சமந்தா நடிக்கவுள்ளதாகக் கூறப்படு கிறது. திமெரி என்.முராரி என்ற இந்திய எழுத்தாள ரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளதாம். அண்மையில் வெளியான "ஃபேமிலி மேன்-2' தொடரில், இவரது நடிப்பைப் பார்த்தே இந்த படத்திற்காக இவர் தேர்வு செய்யப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தெலுங்கில் "சாகுந்தலம்' படத்தில் நடித்துவரும் சமந்தா, அதனைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.
ஸீன்-3
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பிரியா பவானி சங்கர்தான், இன்றைய தேதியில் கோலிவுட்டின் பிஸியான ஹீரோயின் எனலாம். கமல், தனுஷ், சிம்பு என முன்னணி நட்சத்திரங்கள் பலரது படங்களிலும் இடம்பிடித்துள்ள பிரியா, சுமார் 10 படங்களுக்கு மேல் தற்போது கைவசம் வைத்துள்ளார். கடைசியாக இவர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து ஓ.டி.டி.-யில் வெளியான "ஓ மணப்பெண்ணே' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக அதர்வாவுக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள "குருதியாட்டம்' ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா வுக்கு ஜோடியாக, திரில்லர் ஜானரில் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளாராம் பிரியா பவானி சங்கர்.
மாதவன் நடித்த "யாவரும் நலம்', சூர்யாவின் "24' படங்களை இயக்கிய விக்ரம் குமார் இந்த வெப் தொடரை இயக்கவுள்ளார். தற்போது நாகசைதன்யா நடிப்பில் "தேங்யூ' என்ற படத்தை இயக்கிவரும் விக்ரம் குமார், இப்படத்தின் பணிகள் முடிந்ததும் இந்த வெப் தொடரின் வேலைகளைத் தொடங்கவிருக்கிறாராம்.
ஸீன்-4
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்'. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட படப்பிடிப்பை முழுவீச்சில் நடத்தி வருகிறது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள சூழலில்... கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு விடுமுறைகளைக் கணக்கில்கொண்டு, இப்படத்தை டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. "பொங்கலுக்கு முந்தைய வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாது என்பதால், இரண்டு வாரங்களுக்குப் பெரிய போட்டியில்லாமல் படம் ஓடிவிடும்' எனக் கணக்குப் போட்டுள்ளதாம் படக்குழு.
-எம்.கே.