உள்ளாட்சி அமைப்புகள் கலைக்கப்பட்ட பிறகு, கடந்த 4 மாதங்களாக கிராம ஊராட்சிகளில் அமர்க்களமாக வசூல் வேட்டை நடக்கிறது. முன்புபோல் ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு வரவும் இல்லாமல் போனது. ஊராட்சி மன்ற அலுவலகங்களில் கிளார்க்காக பணிபுரிந்தவர்களே ஊராட்சி செயலர்களாகிவிட, அவர்கள் காட்டில் கரன்சி மழை கொட்டுகிறது. இங்கே ஒரு ஊராட்சி செயலரின் மாத ஊதியம் ரூ.31,720. தற்போது மக்களிடமிருந்து மாதம்தோறும் தோராயமாக அவருக்குக் கிடைத்துவரும் லஞ்சம் ரூ.3 லட்சம்.’’ என்று நடப்பு விவகா ரத்தைக் கூறி அதிரவைத்தார், விருதுநகர் மாவட்டம் - சிவகாசி ஊராட்சி ஒன்றியம் - பள்ளப்பட்டி ஊராட்சி மன்றத்தின் அலுவலக நடவடிக் கைகளை நன்கறிந்த அந்த ஊழியர்.
""புதிய பட்டாசுக் கடைக்கான பிளான் அப்ரூவலுக்கு ரூ.40 ஆயிரம். பட் டாசுக்கடை உரிமம் புதுப்பித்தலுக்கும் ரூ.40 ஆயி ரம். அச்சகங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தொழில் உரிமம் புதுப்பித்த லுக்கு ரூ.10 ஆயிரம். சிறிய வீடோ, பெரிய வீடோ, அதற்கேற்றவாறு தீர்வை ரசீது போட ரூ.10 ஆயிரம். ஊராட்சியில் பைப் லைன் வேலை, மின் மோட்டார்கள், மின் உபகரணங்கள் பழுது போன்ற வேலை களுக்கு ரூ.1 லட்சத்துக்கு 10 சதவீதம் கமிஷன். என பள்ளபட்டி முதல்நிலை கிராம ஊராட்சியின் செயலர் செல்லப்பாண்டி வாங்கிக் குவிக்கும் லஞ்சப் பட்டியலைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
தன்னுடைய அக்காள் மகன் முனீஸ்வரனை மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆபரேட்டர் ஆக்கி, வில்லங்கமான வேலைகளுக்குத் தனக்குத் துணையாக வைத்திருக்கிறார். பஞ்சாயத்தில் வேலையே நடந்திருக்காது, பைப்லைன் வேலை, மின் மோட்டார் வேலை நடந்ததாகப் பில்போட்டு பணம் எடுத்துவிடுகிறார். ஊராட்சி ரெகார்டுகளை வெளியே எடுத்துச்சென்று, எல்லாவற்றுக்கும் போலி பில் தயாரிக்கும் வேலைகளை ஒரு லேடி பார்ட்னருடன் சேர்ந்து, சாட்சியாபுரத்தில் உள்ள அச்சகத்தில் வைத்து, செல்லப்பாண்டியும் முனீஸ்வரனும் செய்கின்றனர்.
ஈஞ்சார் கிராம பஞ்சாயத்தில் கிளார்க்காக இருந்தபோது பஞ்சாயத்து தலைவருக்குத் தெரியாமல் செக்கில் போலி கையெழுத்திட்ட விஜிலன்ஸ் வழக்கு செல்லப்பாண்டி மீது இருக்கிறது. அதனாலேயே, கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு இவரை மாற்றினார்கள். தற்போது பள்ளபட்டி பஞ்சாயத்திலும் முன்புபோலவே செயல்படுகிறார்.
கல்பனா என்பவர் கட்டிட வரைபட அனுமதிபெற 4 பிளான்களுக்கு யூனியன் பேங்க்கில் ரூ.14130 வீதம் செலுத்தவேண்டும். மொத்தத் தொகையான ரூ.56,520ஐ அவரிடமிருந்து வாங்கிக்கொண்ட செல்லப்பாண்டி, ஒரு சலான் மூலம் ரூ.14130 செலுத்திவிட்டு, அதை ஜெராக்ஸ் எடுத்து மேலும் 3 சலான்கள் மூலம் செலுத்தியதுபோல், போலியாகக் கணக்கு காண்பித் தார். கல்பனா தரப்பில் 4 ஒரிஜி னல் சலான்கள் கேட்டது பிரச் சனை ஆகிவிட, அந்த வங்கியில் விசாரித்தபோது செல்லப்பாண்டி யின் குட்டு வெளிப்பட்டது.
தூய்மைப் பணியாளர்கள் குப்பை வண்டிகளில் குப்பை வாங்குவார்கள். அதனைப் பிறகு டிராக்டரில் அள்ளிச் செல்வார் கள். இந்த வேலை 20 நாட்கள் மட்டுமே நடக்கும். ஆனால், 30 நாட்கள் வேலை நடந்ததாகப் பில் போடுகிறார்கள். தூய்மைப் பணியாளருக்கான இலவச சீருடைகளைத் தைப்பதற்கு கேசவன் டெய்லரிடம் கொடுத் தது பள்ளபட்டி ஊராட்சி. அதற்கான தையல் கூலி ரூ.8000. ஆனால், ரூ.16000-க்கு பில் பெறப்பட்டது. பில் தொகையை கேசவன் டெய்லரின் வங்கிக் கணக்கில் ஏற்றிவிட்டு, மீதித் தொகை ரூ.8000-ஐ வாங்கிக்கொண்டார் செல்லப்பாண்டி. இதுபோல், ஊராட்சி சம்பந்தப்பட்ட எந்தவொரு வேலையிலும், தனக்கான ஆதாயத்தை அடையாமல் விடமாட்டார்''’என்றார்.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளை பள்ளபட்டி ஊராட்சி செயலர் செல்லப்பாண்டியிடம் முன்வைத்த போது எழுத்து மூலமாகவே விளக்கம் தந்தார். பட்டாசுக் கடை, கட்டிட வரைபடம், தொழில் உரிமம், புதிய வீடு தீர்வை ரசீது சம்பந்தமாக யாரிடமும் பணம் கேட்கவோ, வாங்கவோ இல்லை. பைப் லைன், மோட்டார் பராமரிப்புப் பணிகளுக்கு கமிஷன் எதுவும் பெறவில்லை.’ என்று ஒரேயடியாக மறுத்தார். மேலும், முனீஸ்வரனை ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே வேலைக்குச் சேர்த்ததாகவும், ஈஞ்சார் ஊராட்சி யில் கிளார்க்காகப் பணிபுரிந்தபோது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தன்னைப் பணியிடமாற்றம் செய்ததாகவும், ஐ.டி.பி.ஐ. வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டி தவணை செலுத்திவருவதா கவும், குப்பை அள்ளும் வேலை களைக் கேமரா மூலம் போட்டோ எடுத்து ஊராட்சி ஒன்றியத்துக்கு தினந்தோறும் அனுப்பிவருவதாகவும் விளக்கமளித்தார். போலி பில்கள் தயாரித்தது, சலான் மூலம் பணம் செலுத்தியதில் முறைகேடு செய்தது போன்றவற்றுக்கு அவரிடமிருந்து பதிலில்லை.
செல்லப்பாண்டியின் மறுப்பு குறித்து அந்த ஊழியரிடம் தெரிவித்தபோது, ""அவருடைய கைபேசி எண்ணில் சில பட்டாசுக் கடைக்காரர்கள், கான்பரன்ஸ் காலில் நமது லைனுக்கு வந்தனர். பிளான் அப்ரூவல், உரிமம் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு செல்லப்பாண்டி எங்களிடம் பணம் வாங்கியது உண்மைதான். அதேநேரத்தில், அந்தப் பணம் சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கிளார்க் சுரேஷிடம் ஒப்ப டைக்கப்பட்டு, அப்படியே ஊராட்சி ஒன்றியப் பெருந்தலை வர் வரைக்கும் போய்விடும். செல்லப்பாண்டிக்கு அவருக்கான பங்கு கிடைத்துவிடும்''’என்றனர். பள்ளபட்டி பகுதியில் நாம் சந்தித்த விஜயலட்சுமியும் லிங்கம்மாளும், ""வீட்டுக்கு முன்னால தண்ணி குழாய் மாட்டி என்ன பிரயோ ஜனம்? ஒழுங்கா தண்ணி விடறதே இல்ல''’என்று புகார் வாசிக்க, அங்கு நின்ற சங்கரன் என்பவர், ""ஜல் ஜீவன் திட்டத்துல சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துல நெறய கோல்மால் நடந் திருக்கு. நெறய சந்தேகம் இருக்கு. முத்துராமலிங்க புரம் காலனில மகளிர் சுகாதார வளாகம் ரொம்ப மோசமான நிலைல இருக்கு. ராத்திரி நேரத்துல இடிபாடுகள் வழியா சமூக விரோதிகள் உள்ளே நுழைஞ்சிடறாங்க. ஒதுங்கு றதுக்கு பெண்கள் பயந்து போய் இருக்காங்க. ஊராட்சி மன்றத்துல புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல. மக்களோட குறைகளை ஊராட்சி செயலர் மதிக் கிறதில்ல''’என்று குமுறலாகச் சொன்னார். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலரும் சிறப்பு அலுவலருமான மீனாட்சியைத் தொடர்பு கொண்டபோது, நமது லைனுக்கு வருவதைத் தவிர்த்தார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடக்கின்ற ஊராட்சி செயலர்களின் விதி மீறலான நட வடிக்கைகளை விவரித்தோம். ""உரிய முறையில் விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுப்போம்''’என்று உறுதியளித்தார்.
___________________
தோழரிடம் லஞ்சம் கேட்ட ஊராட்சி அலுவலர்!
விவசாயிகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சி.பி.எம்.) விருதுநகர் மாவட்ட தலைவராக இருக்கிறார். இவருடைய மகன் பிரகாஷ், சுக்கிரவார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார். சி.பி.எம். கட்சி பின்புலத்துடன் உள்ள பிரகாஷ், ஆனைக்குட்டம் - காரிசேரி அருகில் புதிதாக பட்டாசுக்கடை ஒன்றைக் கட்டியிருக்கிறார். அதற்கான ஒப்புதலுக்கு அவரிடம் ரூ.40 ஆயிரம் கேட்டிருக்கிறார், விருதுநகர் வட்டத்தில் உள்ள மேல ஆமத்தூர் ஊராட்சியின் செயலர் தங்கமுருகன். அவர் லஞ்சம் கேட்டது குறித்து நம்மிடம் ஆதங்கத்துடன் முறையிட்டார் பிரகாஷ். நாம் தங்கமுருகனைத் தொடர்புகொண்டோம். ""நான் மிகவும் நேர்மையானவன். அப்படி எதுவும் பணம் கேட்கவில்லை. நீங்கள் என்னிடம் இப்படி கேட்பது மனஉளைச்சலைத் தருகிறது''’என்று பொய்க்கோபத்தை வெளிப்படுத்தினார்.
கவனிப்புக்குப் பிறகும் அலைக்கழிப்பு!
சாத்தூர் வட்டம் -சின்னக்காமன்பட்டியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் ஹரிணி பைரோபார்க், எம்.ஹரி பைரோபார்க் ஆகிய பெயர்களில் இரண்டு பட்டாசுக் கடைகள் நடத்துவதற்கு அப்ரூவலுக்காக மேட்டமலை பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி தரப்புக்கு ரூ.75000-மும், உரிமம் மற்றும் தடையில்லாச் சான்று பெறு வதற்கு வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறையினருக்கு தரகர் மூலம் ரூ.1.5 லட்சமும் கொடுத்துள்ளார். ஆனாலும், மேற்கண்ட கடைகளின் மின்னிணைப்புக்காக, மின்கம்பம் நட, மின்பாதை அமைக்க, பொதுப்பாதைக்கான வரைபடத்துக்கு தடையில்லாச் சான்று கிடைத்தபாடில்லை. மூன்று மாதங்களாக அலைக்கழிக்கப்பட்ட நிலையில் நம்மிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். முன்னாள் மேட்டமலை ஊராட்சி தலைவர் பார்த்தசாரதி நம்மைத் தவிர்த்த நிலையில், மேட்டமலை ஊராட்சி செயலர் கார்மேகத்தை தொடர்புகொண்டோம். ""அப்ரூவலுக்காக மணிவண்ணன் பணம் கொடுத்த விபரம் எதுவும் எனக்குத் தெரியாது. நான் கை சுத்தமானவன்'' என்றார்.
சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரும், சிறப்பு அலுவலருமான மகேஸ்வரன் ""அந்த இரண்டு பட்டாசுக் கடைகளுக்கும் விரைவில் என்.ஓ.சி. கிடைப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்''’’ என்றார்.