ராகுல்காந்தியின் எம்.பி. பதவியைப் பறித்து ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்திருக்கிறது மோடி அரசு. இதற்காக மோடி அரசு பின்னிய சதி, தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

modi

Advertisment

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019 நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தொழிலதி பர்கள் நீரவ் மோடி மற்றும் லலித் மோடியின் ஊழல்களை அம்பலப்படுத்தி பேசிய ராகுல் காந்தி,”"அதென்னமோ தெரியவில்லை, திருடர் களின் பெயர்களெல்லாம் மோடி என்பதாகவே இருக்கிறது''’என்று விமர்சித்தார். இது, தன்னை விமர்சிப்பதாகவே பிரதமர் மோடி கருதியிருக் கிறார். உடனே குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர்களுடன் ஆலோசித்தது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. இதனையடுத்து, குஜராத்தின் முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, குஜராத் மாநில சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

நான்காண்டாக நீடித்துவந்த இந்த வழக்கில் கடந்த 23-ந்தேதி தீர்ப்பளித்த நீதிபதி வர்மா, "இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499 மற்றும் 500-ன் படி அதிகபட்ச தண்டனை யாக 2 ஆண்டு காலம் சிறைத்தண்டனை யும், 15,000 ரூபாய் அபராதமும் விதிக் கப்படுகிறது''’என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு தேசிய அளவில் அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

stalinraghul

ராகுலுக்கு சிறைத்தண்டனை விதித்த நீதிபதி வர்மா, ராகுலுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியதோடு, மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசமளித்தார். இதனால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து பேசிய புர்னேஷ் மோடி, "இது ஒரு சமூகம் சார்ந்த விவ காரம். சமூகத்துக்கு எதிராகவோ, சாதிக்கு எதிராகவோ அவதூறு பேசக்கூடாது. அந்த வகையில், நீதியை நிலைநாட்டியுள்ளது நீதிமன்றம்''’என்கிறார்.

ஆனால், இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜரான ராகுல்காந்தி, "இந்த விவகாரத்தில் எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது; எந்த ஒரு சமூகத்தையும் நான் புண்படுத்தவில்லை என்றும், தேர்தல் பிரச்சார கூட்டத்தில் என்ன பேசினேன் என்பதையும், அதனை அவதூறாக பார்க்கக் கூடாது'' என்றும் விரிவாக சொல்லியிருந்ததை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றமே தண்டனையை நிறுத்தி வைத்தும், மேல் முறையீடு செய்ய அவகாசமளித்தும் தீர்ப்பளித்த சூழலில், அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் ஷரத்துகளை பயன்படுத்தி உடனடியாக ராகுலின் எம்.பி. பதவியை பறித்து அவரை தகுதி நீக்கம் செய்திருக்கிறது மோடி அரசின் மக்களவை.

இதன் மூலம், சிறைத்தண்டனையான 2 ஆண்டு காலம், அதன்பிறகு 6 வருட காலம் என மொத்தம் 8 ஆண்டுகள் ராகுல்காந்தி தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது மோடி அரசு. ராகுலுக்கு எதிராக மோடி அரசு காட்டிய இந்த வேகம் ஏகத்துக்கும் பிரமிப்பையும், அதிர்வுகளையும் தேசிய மற்றும் மாநில அரசியலில் ஏற்படுத்தியது.

priyanga

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வீரகதிரவன், ”"இந்த வழக்கின் மேல்முறை யீடு குஜராத் உயர்நீதிமன்றம், அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரை செல்லும். இந்த நீதிமன்றங்களில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்படலாம் அல்லது சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்கலாம் அல்லது குற்றவாளி எனச் சொல்லப் பட்டதை நிறுத்தி வைக்கலாம் அல்லது சிறைத்தண்டனை காலம் குறைக்கப்படலாம் அல்லது வழக்கையே தள்ளுபடி செய்யப்படலாம் என்கிற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

அந்த வகையில், கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்வதைத் தவிர்த்து வேறு எந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டா லும் அது ராகுல்காந்திக்கு சாதகம். ஆனால், மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு கிடைக்க எத்தனை மாதங்களாகும்? எத்தனை வருடங்களாகும் எனத் தெரியாது. ஒருவேளை குறைந்தபட் சம் 3 மாதத்திலேயே தீர்ப்பு வழங்கப்பட்டு அது ராகுலுக்கு சாதகமாக அமைந்தால், மீண்டும் எம்.பி. பதவியை ராகுலுக்கு வழங்கித்தான் ஆக வேண்டும்.

ஆனால், அந்த 3 மாத காலமும் ராகுல் இழந்த மக்கள் பணியை திருப்பி யாரால் தரமுடியும்? இந்த இழப்பை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளுமா? அதேசமயம், 2024-ல் வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த மேல்முறையீட்டு வழக்கில் ராகுலுக்கு சாதகமான தீர்ப்பு வந்துவிட்டால், அப்போது 1 வருட காலம் எம்.பி. பதவி இழந்ததை தருவதற்கு சட்டமிருக்கிறதா? ஏனெனில், நாடாளுமன்றத் தேர்தல் வரைதான் ராகுலின் பதவி காலம் இருக்கிறது. அவரது பதவிக் காலம் முடிந்த பிறகு சாதகமான தீர்ப்பு கிடைத்தால் இந்த நாடாளுமன்றம் என்ன செய்யும்?'' என பல கேள்விகள் இருக்கின்றன.

மேலும், "தண்டனை அறிவிக்கப்பட்டதுமே தகுதி நீக்கம் செய்யப்படலாம் என அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், தகுதி நீக்கத் தை யார் அறிவிப்பது என வரையறை செய்யவில்லை. அதனால் ராகுலின் தகுதி நீக்கத்தை ஜனாதிபதி அல்லது நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித் திருக்க வேண்டும். ஆனால், லோக்சபா செக்ரட்டரி அறிவிப்பு செய்கிறார். அந்த நோட்டிஃபிகேசனில் கூட யாருடைய உத்தரவின் பேரில் அறிவிக்கப்படுகிறது என சொல்லப்படவில்லை. ஆக, மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுலின் பதவியை பறிப்பதில் இவ்வளவு வேகம் காட்டியிருக்கத் தேவையில்லை'' என்கிறார் அதிரடியாக!

இந்த நிலையில், ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதில் ஜனநாயகம் செத்துவிட்டதாக தேசிய கட்சிகளும் மாநில கட்சிகளும் கடுமையாகக் கண்டித்திருக்கின்றன.

aa

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், "ராகுல்காந்திக்கு எதிரான நடவடிக்கை முற்போக்கு ஜனநாயக சக்திகள் மீதான தாக்குதல். இந்திய அரசியல் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான ராகுல்காந்திக்கு கூட கருத்து சொல்லும் உரிமை கிடையாது என மிரட் டும் தொனியில் இருக்கிறது இந்த நடவடிக்கை. ராகுலை பார்த்து பா.ஜ.க. தலைமை பயந்திருக் கிறது. ராகுலின் இந்திய ஒற்றுமைப் பயணம் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம்தான் பா.ஜ.க. பயப்படுவதற்கு காரணம். நாடாளுமன்றத்தில் ராகுல் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய அரசில் இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை. மீண்டும் நாடாளுமன்றத்தில் ராகுலை அனுமதித் தால், தங்களது அரசியலுக்கு நெருக்கடி ஏற்படும் என அஞ்சியே ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார். இதன்மூலம் "ஜனநாயகம்' என்கிற வார்த்தையை உச்சரிக்கும் தகுதியை இழந்திருக் கிறது பா.ஜ.க.''’என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்லியின் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், ‘"எதிர்க்கட்சிகளையும், அதன் தலைவர்களையும் ஒழிக்க சதி நடந்துகொண்டிருக்கிறது. ராகுல்காந்தி யுடன் எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அவதூறு வழக்கில் அவரை சிக்க வைப்பது முறையில்லை. நீதிமன்றத்தை மதிக்கிறேன்; தீர்ப்பை ஏற்கவில்லை''” என்கிறார்.

சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்ட் ராவின் முன்னாள் முதல்வருமான உத்தவ்தாக்கரே, "திருடர்களை திருடர்கள் என சொல்வது நம் நாட்டில் கிரிமினல் குற்றமாக இருக்கிறது. உண்மையான திருடர்களும் கொள்ளையர்களும் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள். ஆனால், ராகுல்காந்தி தண்டிக்கப்பட்டிருக்கிறார். இது ஜனநாயக படுகொலை''’என்கிறார் ஆவேசமாக.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் ராகுலின் சகோதரியுமான பிரியங்காகாந்தி, ’"பயந்துபோன அனைத்து அரசு எந்திரங் களும் எனது சகோதரனுக்கு எதிராக தண்டனை, பதவி பறிப்பு, பாரபட்சம் என திணிப்பதன் மூலம் ராகுலின் ஜனநாயக குரலை நசுக்கப் பார்க்கின்றன. இதற்கெல்லாம் எனது சகோதரன் பயப்பட மாட்டான். அவன் உண்மை யின் பக்கம் நிற்பவன்; பேசுபவன்; வாழ்பவன். இந்திய மக்களின் குரலாக அவன் எப்போது ஒலித்துக் கொண்டே யிருப்பான்''’என்கிறார் மிக அழுத்தமாக!

சிறைத்தண்டனை, பதவி பறிப்பு என அடுத்தடுத்த தாக்குதலையடுத்து, காங்கிரசின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் ஒரு அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதுடன், பத்திரி கையாளர்களை ராகுல்காந்தி சந்தித்துப் பேசவும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பத்திரிகையாளர் களை சந்தித்த ராகுல்காந்தி, "இந்தியாவுக்கு எதி ராக நான் எதுவும் பேசவில்லை. தேசத்திற்கு எதி ரான சக்திகளை முறியடிப்பேன். அதானி குறித்து நான் பேசிய போது பிரதமரின் கண்களில் அச்சத்தை பார்த்தேன். அடுத்தடுத்து நான் என்ன பேசப் போகிறேன் என அஞ்சுகிறார்கள். பிரதமர் மோடி யைப் பார்த்து பயப்படப்போவதில்லை. சிறை செல்லவும் அஞ்சமாட்டேன். பதவியைப் பறித்து விட்டால் நான் அமைதியாகிவிடுவேன் என நினைக்கின்றனர். உள்ளேயும் வெளியேயும் எனது ஜனநாயகக் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். எனது பெயர் சாவர்கர் அல்ல; காந்தி. காந்தி ஒருபோதும் மன்னிப்புக் கேட்கமாட்டான்''’என்று மிகத் தெளிவாக அதேசமயம் ஆவேசமாக பதிலளித்தார் ராகுல்காந்தி.

ராகுல்காந்திக்கு எதிரான இந்த நடவடிக்கையின் மையப்புள்ளி எது?

தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல்காந்தி பேசியதற்காக ஏப்ரல் 16, 2019-ல் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார் பூர்னேஷ் மோடி. இந்த வழக்கில் ஜூன் 24, 2021-ல் நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதங்களையும், வாக்கு மூலத்தையும் பதிவுசெய்கிறார் ராகுல்காந்தி. இதற்கிடையே, ராகுல்காந்தியை மீண்டும் அழைத்து விசாரிக்கவேண்டும் என்று மார்ச் 7, 2022-ல் கோரிக்கை வைக்கிறார் புகார்தாரரான பூர்னேஷ் மோடி. ஆனால், இதனை நிராகரித்ததுடன் வாதங் களை தொடர அவருக்கு உத்தரவிட்டது சூரத் நீதிமன்றம்.

வாதத்தைத் தொட ராத பூர்னேஷ்மோடி, குஜராத் உயர்நீதிமன்றத் துக்கு அவசரமாக ஓடிச்சென்று, சூரத் நீதிமன்ற விசாரணைக்கு தடை வாங்குகிறார். வழக்கு போட்டவரே தனது வழக்குக்கு ஸ்டே வாங்குவது, அப்போதே விந்தையாக விமர்சிக்கப்பட்டது. அதாவது, ராகுலுக்கு எதிரான இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படலாம் என்ற சூழல் இருந்துள்ளது. அதனால்தான் உயர்நீதிமன்றத்தில் தடை வாங்குகிறார் பூர்னேஷ் மோடி. தடையும் கொடுக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு இந்த வழக்கு அப்படியே கிடப்பில் கிடந்தது.

இந்த நிலையில்தான் தொழிலதிபர் அதானிக் கும் பிரதமர் மோடிக்குமான தொடர்பு குறித்து நாடாளுமன்றத்தில் கடுமையாக கேள்வி எழுப்பு கிறார் ராகுல்காந்தி. குறிப்பாக, "பிரதமரே உங்கள் வெளிநாட்டு பயணங்களின்போது எத்தனை முறை அதானியுடன் பயணித்தீர்கள்? எத்தனை முறை நீங்கள் சென்றபிறகு உங்களுடன் அதானி இணைந்துகொண்டார்? ஒரு நாட்டிற்கு நீங்கள் பய ணம் சென்று வந்தபிறகு உடனே அந்த நாட்டிற்கு எத்தனை முறை அதானி சென்று வந்தார்? நீங்கள் சென்று வந்தபிறகு அந்த நாடுகளில் எத்தனை முறை அதானிக்கு ஒப்பந்தங்கள் கிடைத்தன? அதேபோல, கடந்த 20 ஆண்டுகளில் எவ்வளவு பணம் அதானியால் பா.ஜ.க.வுக்கு கொடுக்கப் பட்டது? தேர்தல் பத்திரங்களின் மூலம் அவர் எவ்வளவு கொடுத்துள்ளார்? மொரிஷியஸை தளமாகக் கொண்டுள்ள பல ஷெல் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை? அந்த ஷெல் நிறுவனங் கள் இந்தியாவிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அனுப்பியுள்ளன. அது யாருடைய பணம்? இதை யெல்லாம் அதானி இலவசமாக செய்கிறாரா? இது தேசிய பாதுகாப்புப் பிரச்சனை? அரசுக்கு எப்படி இது குறித்து தெரியாமல் இருக்க முடியும்?'' என்று கடுமையான கேள்விகளை எழுப்பியபோது நாடாளுமன்றம் கொந்தளித்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ். எஸ். அமைப்பால் இதனை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ராகுலின் அத்தகைய கேள்விகளுக்கு பா.ஜ.க. தரப்பில் பதிலும் இல்லை.

அதே சமயம், மோடி-அதானி நட்புக்கு எதிராக ராகுல் தொடுத்த தாக்குதலுக்குப் பிறகு, மீண்டும் சில ரகசிய காய்கள் நகர்த்தப்படுகின்றன. கடந்த மாதம் பிப்ரவரி 16, 2023 அன்று அவசர அவசரமாக குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளது. அதனால் தடையை நீக்க வேண்டும் என்கிறார். உடனே தடை நீங்குகிறது.

தடை நீக்கப்பட்ட தால் சூரத் மாவட்ட நீதி மன்றத்தில் விசாரணையும் தொடங்கி முடிய, இதோ... ராகுலுக்கு சிறைதண்டனை யும் விதிக்கப்பட்டு, அவரது எம்.பி. பதவியையும் பறிக்கப்பட்டு, நாடாளுமன்றத் துக்குள் ராகுல்காந்தி நுழைய முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது மோடி அரசு. இதுதான் ராகுல் பழிவாங்கப்பட்டதன் பின்னணியும் சதியும்! இந்த சதியை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்திவருகிறது. இதற்கிடையே, ராகுலை பழிதீர்த்த அந்த சட்டப்பிரிவை நீக்க வலியுறுத்தி தனிநபர் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். ராகுல்காந்தியும் மேல்முறை யீடு செய்யவிருக்கிறார்.

நேரு குடும்பத்தில் ஏற்கனவே இந்திராகாந்தி யின் பதவி பறிக்கப்பட்டது. இதற்காக மக்களிடம் நீதிகேட்டார் இந்திராகாந்தி. மக்களும் நீதி வழங்கி னர். மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் இந்திரா. அன்றைக்கு பாட்டி பழிவாங்கப்பட்டார்; இன்று பேரன் ராகுல்காந்தி. நாளை...? பா.ஜ.க.வையும் ஆர்.எஸ்.எஸ்.சையும் கேள்வி கேட்கும் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இதேநிலை எதிர்காலத் தில் வரலாம்.

"ராகுல்காந்திக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட பல அரசியல் கட்சிகள், காங்கிரசின் போராட்டங்களில் கலந்துகொள்ளாமலும் ஆதரவு தெரிவிக்காமலும் மௌனமாக கடந்து செல்வது, மோடியின் சர்வாதிகாரத்தை விட ஆபத்தானது' என்கிறார்கள் ஜனநாயகத்தின் மீது இன்னமும் நம்பிக்கையுள்ளவர்கள்.