தேசிய கல்விக் கொள்கை யால் ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளமும், மொழியும் கலாச்சாரமும், வரலாறும் அழிக் கப்படும் என்பதில் தமிழ்நாடு மிக உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கிறது.
எனவே எந்தக் காரணத்திற் காகவும் தேசிய கல்விக் கொள்கை யை நாங்கள் பின்பற்றமாட்டோம் என்று சொல்லிவருகிறது தமிழக அரசு. மக்களும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றனர். தேசிய கல்விக்கொள்கையின் அபாயத்தைப் புரியாதவர் களுக்கும் அதைப் பற்றிய ஒரு நல்ல புரிதலை அளிப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதி வெளியிட்டுள்ள, ‘"தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை'’என்ற புத்தகம் அந்த வேலையைச் செய்கிறது.
கொரோனா பொதுமுடக்கத்தில் ஒட்டுமொத்த நாடும் முடங்கிக்கிடந்தபோது, ஒன்றிய அரசு தன்னிச்சையாக தகுதியில்லாதவர்களைக் கொண்டு ஒரு மாபெரும் திட்டத்தைத் தீட்டியது. குலக்கல்வியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற ஒற்றைநோக்கில் “மத்திய கல்வி ஆலோசனை வாரியத்திடம்கூட ஆலோசனை செய்யாமல் தேசிய கல்விக் கொள்கை என்ற கொள்கையை அறிவித்தார்கள். மத்திய அமைச்சர் ஒப்புதல் மட்டுமே பெற்று, பிற எவரின் கருத்தையும் தெரிந்துகொள்ளாமல் அதற்கு ஒப்புதல் வழங்கிவிட்டனர். அப்படி அமலாக்கம் பெற்ற புதிய கல்விக்கொள்கையின் அம்சங்கள், திருவிழாக் கூட்டத்தில் ஓர் மதயானை புகுந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது என்பதை 14 அத்தியாயங்களில் அமைச்சர் விளக்கியுள்ளார்.
உலகளவில் இந்தியாவின் கல்வியை உயர்த்துவதற்கும், ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சிக் குறியீட்டை அடைவதற்காகவுமே இந்த கல்விக்கொள்கை என்று ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் தங்களுடைய ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கல்விக்கூடங்களுக்குள் திணிக்கவே இந்தக் கல்விக் கொள்கை. இந்த கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள எந்தவொரு ஷரத்தும் நேர்முகமாக விவாதித்து தயார் செய்யப் படவில்லை. அனைத்தும் மறைமுகமாக இடம்பெற்றுள்ள பகுப்பாய்வுகளாகவே உள்ளன. பல இடங்களில் மதச் சிறுபான்மையினர், பட்டியல் சமூகத்தவர், பழங்குடியினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. அதைச் சுட்டிக்காட்டிய பின்பே சேர்த்துக்கொண்டனர் என்பதை விளக்குகிறார்.
“கல்வி என்பது பொது சேவை. தரமான கல்வி அடிப்படை உரிமை” என்ற அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒரு கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. பல்வேறு இனங்கள், மொழிகள், பண்பாட்டு கலாச்சாரம் கொண்ட நாட்டில் ஒற்றைக் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சி இது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
"ஒன்றிய அரசு இந்த தேசிய கல்விக் கொள்கையின் மூலம், குழந்தைகள் மனப்பாடம் செய்யத் தேவையில்லை. தேர்வுகளைக் கண்டு பயப்படத் தேவையில்லை. அதனால் ஏற்படும் மனஅழுத்தம் இல்லை' என்று கூறிவிட்டு, மூன்றாம் வகுப்பு முதல் பொதுத் தேர்வை அறிவித்திருக்கிறது. என்னவொரு விநோதம்? இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கே ஒருவித பயஉணர்வுடன் செல்கிறார்கள். இந்த தேர்வு பயம் 3-ஆம் வகுப்பிலிருந்தே ஆரம்பித்தால் என்னவாகும் என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்பருவக் கல்வி முதல் இரண்டாம் வகுப்பு வரை அடித்தளக் கல்விக் காலம் என்று வரையறுத்து குழந்தைகள் மீதான வன்முறையை முன்னெடுக்கிறது இத்திட்டம். முதல் வகுப்பிலேயே மூன்று மாத கால சிறப்பு முகாம் என்பதெல்லாம் சர்வதேச மனித உரிமை பிரகடனத்திற்கு எதிரானது என்பதை தகுந்த பல ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்.
கல்வி கற்கத் திறனில்லாத குழந்தைகளுக்கு கல்வியைப் புகட்ட வழிவகை செய்யும் எந்தவொரு திட்டமும் வகுக்காமல், அடிப்படைக் கல்வி கிடைக்க வேண்டிய வயதில் திறன் மேம்பாடு என்ற பெயரில் மாணவர்களை சாதியம் சார்ந்த தினக்கூலிகளாக்கும் வேலையை இந்த கொள்கை முன்வைக்கிறது. கல்வி கற்கத் திறனில்லை என்றால் அவர்களுக்கான ஒரே தீர்வு சாதிப் பிரிவினைக்கு பின்புலமாக இருந்த தொழிலைத் தொடர்ந்து செய்வதுதான் என்று பல நூறு ஆண்டுகள் நம்மைப் பின்னோக்கி இழுக்கும் திட்டத்தை வகுத்துள்ளனர் என்பதை அன்பில் மகேஷ் அப்பட்டமாக்கியுள்ளார். சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு செயல்திறன் அடிப்படையில் உதவி என்ற பெயரில் ஏற்கனவே வழங்கப் பட்டுவரும் இட ஒதுக்கீடு என்பதை அடியோடு அழித்துவிட்டு, செயல்திறன் அடிப்படையில் உதவி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக் கிறார்கள்.
இப்படி தேசிய கல்விக் கொள்கையிலுள்ள ஒவ்வொரு ஷரத்துக்களையும், 14 அத்தியாயங்களில் அலசி ஆராய்ந்துள்ளார். மாணவர்கள், இடஒதுக்கீடு, சாதி, ஆசிரியர்கள், பாடத்திட்டம், அரசுப் பள்ளிகள் என்ற தனித்தனி தலைப்பில் ஒன்றிய அரசின் சர்வாதிகாரத்தையும், கட்டாயத் திணிப்பையும் அடையாளம் காட்டியிருக்கிறார். அதோடு விட்டுவிடாமல் இந்தக் கொள்கையை நாம் எதிர்ப்பதற்கு என்ன காரணம் என்பதை தமிழக அரசின் கல்விக் கொள்கையுடன் ஒப்பிட்டு விரிவாக விளக்கியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக இந்தப் புத்தகம் ஒன்றிய அரசு உருவாக்கிய தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானையை கட்டுக்குள் கொண்டுவரும் ஒரு கூரிய அங்குசம் என்றால் மிகையில்லை.