தமிழகத்தின் பலநூறு கோடி மதிப்பிலான கனிமங்கள் அண்டை மாநிலம் சென்றடைவது தென்மாவட்ட மக்களைச் சீறவைத்திருக்கிறது.
வற்றாத தாமிரபரணியும், பிற ஆறுகளான வைப்பாறு, நம்பியாறு, பச்சையாறு போன்றவையும் மணலை வாரிச் சுருட்டிக்கொண்டு வந்து, தான் ஓடுகிற படுகைகளிலெல்லாம் நிரப்புகின்றன. அதன் காரணமாக கோடையிலும் நீர் ஆதாரம் சேதமின்றி இருந்தது. கட்டுமானத்திற்கு ஏற்ற இந்த ஆற்று மணல் மணற்குவியல்கள் மாஃபியாக்களின் கண்களுக்கு தங்கச் சுரங்கமாகவே தென்பட்டது.
விளைவு இரவு பகல் பாராது ஆற்று மணல் மாஃபியாக்களால் ஆயிரக்கணக்கான லோடுகள் அண்டை மாநிலமான கேரளாவுக்குக் கடத்தப்பட்டு கைமாறின. காலப்போக்கில் இதன் காரணமாக ஆற்றின் நீர்வளம் வற்றியதுடன் உள்நாட்டிலும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு மணல் வளம் கொள்ளைபோவதைத் தடுக்க உயர்நீதிமன்றப் படியேறினார். உயர்நீதிமன்றமும் மணல் அள்ளுவதற்கும், அண்டை மாநிலம் கொண்டுசெல்லவும் தடைவிதித்ததால் மணல் காப்பாற்றப்பட்டது. மணலுக்கு மாற்றாக கட்டுமானத்திற்கு எம்.சாண்ட் கண்டுபிடிக்கப்பட்டது.
எம்.சாண்ட் தயாரிக்க நெல்லை தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஏராளமான தனியார் குவாரிகள் செயல்படுகின்றன. இந்தக் குவாரிகள் அன்றாடம் இத்தனை யூனிட் அளவுள்ள கற்களையே வெட்டியெடுக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்டத்தின் மைன்ஸ் டிபார்ட்மெண்ட்களே கட்டண அடிப்படையில் பெர்மிட்களை வழங்குகின்றன. இதேபோன்று கனிமங்களான இவைகளின் ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட்கள் லாரிகளின் சைஸ்களைப் பொறுத்து 6 முதல் 42 டன் எடை அளவு கொண்டுசெல்லலாம் என்று மைன்ஸ் டிபார்ட்மெண்ட் அனுமதிக்கின்றது.
கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை அனைத் தும் முறையாகப் பின்பற்றப்பட்டு வந்த நிலையில் மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் என்றானபோது அதற்கான டிமாண்ட் அதிகரித்தது. ஆனால் தயாரிப்புகளோ குறைவு என்ற நிலை. அதே நேரத்தில் மலைவளமும், மணல் வளமும் தேவைக்குமேல் வைத்திருக்கும் கேரளாவில் கட்டுமானத் தேவையின் பொருட்டு அவைகளில் யாரும் கைவைக்க முடியாத அளவுக்கு கேரள அரசு தடைவிதித்துள்ளதால் அந்த மாநிலம் ஏ டூ இஸட் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களுக்கு தமிழ்நாட்டையே முழுக்க சார்ந்திருக்கவேண்டிய நிலை. இந்த எக்ஸ்ட்ரா டிமாண்ட் காரணமாக எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் ஒரு யூனிட் இரண்டாயிரம் விற்கப்பட்டு வந்த நேரத்தில் உள்ளூரில் நான்காயிரம் என்றானது. ஆனால் இதே எம்.சாண்ட்டும் ஜல்லிக்கற்களும் கேரளாவிற்குக் கொண்டுசென்று கைமாறும் பட்சத்தில் அதன் விலை நான்கு மடங்காக ஒரு யூனிட் பதினாறு ஆயிரம்வரை போகிறதாம். இந்த அபரிமிதமான லாபம் காரணமாக எம்.சாண்ட் தொழிலில் பலர் இறங்கியிருக்கிறார்கள்.
பொதுவாக லாரியின் எடையுடன் சேர்த்து, 6 வீல் டயர் கொண்ட லாரி 18.5 டன் எடைதானிருக்க வேண் டும். அதாவது லாரியின் எடை 10 டன் என்றால் அதில் 8.5 டன் அளவு மட்டுமே எம்.சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்கள் ஏற்றவேண்டும். மைன்ஸ் டிபார்ட்மெண்ட் வழங்குகிற பெர்மிட்களை, இந்தத் துறையின் சம்பந்தப்பட்டவர்களிடம் அண்டர்ஸ்டாண்டிங்கை ஏற்படுத்திக்கொண்டு பெர்மிட்டின் அளவையும், பயணநேரத்தையும் வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டு எம்.சாண்ட்டும், ஜல்லிக்கற்களும் கேரளாவிற்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
குறிப்பாக இங்கே இருபதாயிரம் விலையில் 20 டன் எம்.சாண்ட் விலைபோகிற நிலையில் கேரளாவில் இதே அளவுஎண்பதாயிரம் ரூபாய் என்று போகிறதாம். எனவே இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எம்.சாண்ட், ஜல்லிக்கற்களைக் கொண்ட லாரி கள் தென்காசி மாவட்டத்தின் புளியரை வழியாகவும், குமரி மாவட்டத்தின் வழியாகவும் கேரளாவுக்கு விரைகின்றன.
இந்தப் போக்கு அதிகமானதையடுத்து மாவட்டங் களின் பகுதிகளில் அமைந்திருக்கிற குவாரிகளின் வாசல் களிலேயே அந்தந்தப் பகுதிகளின் முக்கியப் புள்ளிகளே யூனிட்டிற்கு ஐநூறு என்று வசூல் செய்துகொண்டு அடையாளமாக மஞ்சள் சீட்டையும் கொடுத்துவிடுகிறார் களாம். இதனால் கேரளா செல்லும் வழியோர இரு மாநில சோதனைச்சாவடிகளிலும் செக்கிங் இருக்காதாம். ஆனாலும் இரு மாநிலங்களின் போலீஸ் மற்றும் வட்டா ரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடிகளில் அனுமதிக்கான ஒப்புதல், சீல் வைப்பதற்கு பெர்மிட் பேப்பர்களுடன் முக்கிய பேப்பர்களான போலீஸ் சாவடி இருநூறு, போக்குவரத்திற்கு ஐநூறு ரூபாய் போன்றவை இணைக்கப்பட்டால்தான் பெர்மிட் தடையில்லாமல் சீல் ஆகின்றன என்கிறார்கள் உள்விஷயம் அறிந்தவர்கள்.
இப்படி வகைதொகையில்லாமல் கனிமவளங்கள் கேரளா கொண்டு செல்லப்படுவதால் தட்டுப்பாடு காரணமாக எம்.சாண்ட்டின் விலை ஏறிக் கொண்டே போக தென்மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கேரளா கொண்டுசெல்லப்படும் கனிம வளங்களை தடைசெய்யவேண்டும் என்று தொடர் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிற தென்காசியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரவிஅருணன் தலைமையில் திரண்ட மக்கள் கடுமையான போராட்டம் நடத்த, நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டி 10 டயருக்கு மேற்பட்ட 12, 14, 25 டயர் லாரிகளின் கனிம வளங்கள் தென்காசி, புளியரை வழியாக கேரளாவுக்குள் செல்லக்கூடாது. 10 டயர் லாரிகள் மட்டுமே புளியரை செக்போஸ்ட் வழியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கில் செல்கிற அந்த லாரிகளின் ஓவர் லோடுகள் தடுக்கப்படவில்லை.
“"எங்களின் போராட்டம் காரணமாக 10-க்கும் மேற்பட்ட டயர் லாரிகளின் லோடுகள் புளியரை வழியாக செல்லக்கூடாது என்று தடைபோட்டார்களே தவிர, அந்த லாரிகள் அனைத்தும் மாற்றுப்பாதையாக குமரி மாவட்டத் தின் களியக்காவிளை வழியாக அதிக அளவில் கேரளாவுக்குள் தடுப்பாரின்றிச் செல்கின்றன. எதிர்காலத்தில் எம்.சாண்டிற்கும் தட்டுப்பாடு வரும். வெட்டியெடுக்கப்பட்ட கற்கள் மீண்டும் விளையப் போவதில்லை. அப்போது நம் எதிர்காலத் தலைமுறையினர் குடியிருக்க கட்டுமானத்திற்கு என்ன செய்வார்கள்'' என லாஜிக்காக கேள்வி எழுப்புகிற எக்ஸ். எம்.எல்.ஏ. ரவி அருணன், "மணலைப் போன்று எம்.சாண்ட் டையும் வெளிமாநிலம் கொண்டுசெல்ல தடை விதிக்க வேண்டும்''’என்கிறார்.
தென்காசி மாவட்டத்தின் கீழக்கடையம் பகுதிகளைச் சுற்றி 5 குவாரிகள் செயல்படுகின்றன. சட்டவிதிமுறைகளை மீறி இரவு- பகல் பாராது கனிமங்கள் 10-க்கும் மேற்பட்ட டயர் லாரிகளில் கொண்டு செல்லப் படுவதால் அந்தப் பகுதி மக்கள், அதன் பஞ்சாயத்துத் தலைவர் பூமிநாத் தலைமையில் கனிமங்கள் கொண்டு செல்லப்படும் லாரியை தடுத்து போராட்டமே நடத்தினர்.
"இதுபோன்று செல்கிற முறையற்ற லாரிகளால் எங்கள் பஞ்சாயத்திற்குட்பட்ட ரோடுகள் சிதிலமடைந்துவிட்டன. அதனால் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படுகிறது. குவாரிகளில் அளவுக்கதிகமாகத் தோண்டியெடுக்கப்படுவதால் எங்கள் பகுதியின் நீர் ஆதாரமும் வற்றிப் போய்விட்டது. அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி யும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை''” என்கிறார் பூமிநாத்.
இதுகுறித்து நாம் நெல்லை மாவட்ட சுரங்கத்துறையின் (மைன்ஸ்) உதவி இயக்குனரான சுரேஷிடம் கேட்டபோது...
"லாரிகளின் கொள்ளளவைப் பொறுத்து அதற்கேற்ப யூனிட் அளவிளான எம்.சாண்ட் கொண்டுசெல்லலாம். கொள்ளளவையும் தாண்டி ஓவர் லோடு கொண்டு செல்வதைக் கண்காணிக் கவும், நடவடிக்கைகளை எடுக்கவும் கலெக்டர், இரவு பகல் என்று சோதனைக்காக இரண்டு டீம்களை நியமித்திருக்கிறார்''’என்று முடித்துக் கொண்டார்.
குமரி மாவட்டத்தின் களியக்காவிளை, கேரள பார்டரைக் கண்காணித்ததில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10, 12, 14, 16, 18 டயர் லாரிகளில் கொண்டுவரும் அதிகப்படியான எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமவளங்கள் ரெகுல ராகப் பயணித்தவாறிருந்தது. அந்தப் பகுதியில் விசாரித்தபோது இதுபோன்று அன்றாடம் இரவு, பகலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் வரை செல்வதாகக் கூறுகிறார்கள்.
மணல் மாயமானதைப் போன்ற நிலை எம்.சாண்ட்டிற்கும் வரக்கூடாது. இயற்கையின் கொடையான கனிம வளங்கள் அடுத்த தலைமுறைக்காகக் காப்பாற்றப்பட வேண்டும்.