விவசாயிகளைப் பழிவாங்குவதாகக்கூறி களக்காடு வனத்துறை அதிகாரிக்கு எதிராக போராடி வருகிறார்கள் நெல்லை மாவட்டம், களக்காடு பகுதி கிராமங்களின் விவசாயிகள். கடந்த அக்டோபர் 16 அன்று களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட விவசாய கிராமமான கீழ வடகரையின் ஒரு தோட்டத்தில் சட்ட விரோதமாக அமைக் கப்பட்ட மின்வேலியில் சிக்கிய கரடி ஒன்று உயிரிழக்க, அதனை வனத்துறைக்குத் தெரியப்படுத்தாமல் புதைத்ததாக களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரனுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இவ்விவகாரத்தை விசாரணை செய்த துணை இயக்குனர் ரமேஷ்வரனும், வனச்சரகர்களும், தோட்டக் காவலாளியான நாகன்குளத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரை கைது செய் துள்ளனர். மேலும், கீழ வடகரை விவசாய கிராமத்தைச்சேர்ந்த கசாலி கண்ணன், எஸ்.ஏ.டி. பாலன், இன்னொரு பாலன் ஜெயராஜ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரைக் கைது செய்ய தனிப்படையை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினார் ரமேஷ்வரன்.
இந்த நடவடிக்கையால் வழக்கு, கைது என பீதியில் அரண்டுபோன பலரும் தலைமறைவாகியிருக்கிறார்கள். இதனால் கீழ வடகரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாகன்குளம், கீழப்பத்தை, சிதம்பராபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அச்சம் நீடிக்கிறது. மேலும், கீழ வடகரைப்பகுதியில் ஏதேனும் வன விலங்குகள் புதைக்கப்பட்டுள்ளனவா என்று வனத்துறையினர் சோதனையை மேற்கொண்டதும் அச்சத்தின் டெசிபலைக் கூட்டியிருக்கிறது.
இதனிடையே, துணை இயக்குனர் ரமேஷ்வரனின் பழிவாங்கும் போக்கினைக் கண்டித்தும் அக்டோபர் 21 அன்று களக்காடு பகுதியின் நாங்குநேரி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான சி.பி.ஐ.யைச் சேர்ந்த கிருஷ்ணன் தலை மையில் கிராம விவசாயி கள் கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இதுகுறித்து கிராம விவசாயிகளிடம் பேசியதில், "எங்கள் கிரா மங்கள் மலையடி வாரங்களில் இருப்பதால் வன விலங்குகளின் அட்டகாசத்தால் எங்கள் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. பல்வேறு சமயங்களில் விலங்குகளால் தாக்கப்பட்டு காயமடைந்த பல விவசாயிகளின் சிகிச்சைச் செலவுக்கும், பயிர்ச்சேதத்துக்கும் உரிய நஷ்ட ஈடு வேண்டு மென்று துணை இயக்குனர் ரமேஷ்வரனிடம் ஆவணங்களுடன் மனு கொடுத்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. வன விலங்குகள் விவசாயப்பகுதிகளை சேதப்படுத்துவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வனப்பகுதியில் புதிய மனிதர்களின் நடமாட்டம், மர்மங்கள், மலையில் வைரங்கள் தோண்டி எடுக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை ஆதாரத்துடன் விவசாய சங்க மாவட்ட செயலாளரான பாலன் தலைமையில் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்தோம்.
இது தொடர்பான செய்திகள் நக்கீரனிலும் வெளியாக, அதன் எதிரொலியாக, விசாரணை நடத்துவதற்காக வனத் துறையின் சென்னை உயரதிகாரி நாகநாதன் வந்து விசாரித்துச் சென்றிருக்கிறார். இதனால் துணை இயக்குனருக்கு கடும் சிக்கல். தவிர, கீழ வடகரையின் பகுதிகள் ஆதீன மடத்தைச் சேர்ந்தவை. பல ஆண்டுகளுக்கு முன்னால் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் ஆதீனத்தில் பேசி, அவங்க நிலங்களை எங்க கிராம மக்கள் விவசாயம் செஞ்சி பொழைப்பதற்காக குத்தகைக்கு வாங்கிக் குடுத்தாங்க. அதனால எங்க சுத்துப்பட்டுக் கிராமமெல்லாம் ஐயா நல்லக்கண்ணுவுக்கும், அவுங்க கட்சிக்கும் விசுவாசமாயிருக்கோம். அதனாலேயே எங்க கிராமத்தில் அரசு அமைச்ச வனக்குழுவின் தலைவரா, எங்க கிராமத்தின் விவசாய சங்க மா.செ.வான பாலனும், உறுப்பினர்களாக கிராம மக்களும் இருக்காங்க. வனத்தையும், வன விலங்குகளையும் காப்பாற்றுவதில் சிறப்பா செயல்பட்டதற்காக அரசாங்கமே எங்க வனக்குழுவைப் பாராட்டி விருதும் குடுத்திருக்காங்க. இப்ப, பாலனும் கிராம மக்களும் இணைந்து துணை இயக்குனருக்கு எதிராக கலெக்டர் வரை புகாரளித்திருப்பதால் எங்களைப் பழிவாங்குவதற்காக, கரடியப் புதைச்சாங்க, கறிய பங்கு போட்டாங்கன்னு பொய்யா சொல்லி எங்க கிராமத்துக்கார வுங்க 20 பேர் மேல கேஸ் போட்டு, அவங்களைப் புடிக்கிறோம்னு சொல்லி வீடுவீடா ராத்திரி நேரத்துல கதவைத் தட்டுறாங்க. அதோட, துணை இயக்குனருக்கு பா.ஜ.க.வின் ஆதரவும் இருக்கிறது'' என்கிறார்கள் மிரட்சியாக.
முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணனிடம் பேசியபோது, "இரண்டு மாதத்திற்கு முன்பு சிதம்பராபுரத்தில் விவசாயி ஒருத்தர கரடி தாக்கி படுகாயப்படுத்திருச்சி. கலெக்டர்ட்ட புகார் குடுத்திட்டு, வனத்துறை அதிகாரி ரமேஷ்வரன்ட்ட தெரியப் படுத்தி, விவசாயிக்கான நஷ்ட ஈடு கேட்டப்ப, அவரோ, "ஓரமாப் போவ வேண்டியது தான'ன்னுட்டாரு. வடகரை கிராமத்துல பன்றிக் கூட்டங்க பயிர அழிச்சதுக்கு நஷ்ட ஈடு கேட்டதுக்கும் பதில் தரல. அதைக் கண்டிச்சி நடந்த ஆர்ப்பாட்டத்துல வடகரை மக்கள் அதிகமா கலந்துக்கிட்டதால அந்தக் கிராமத்து மக்கள் மேல ரொம்ப கோபம். அதனாலேயே கேஸ்னு சொல்லிட்டு நடு ராத்திரியில கிராமத்துக்குள்ள வந்து வீடுகளை விசாரிக்கிறாரு. எந்தத் தப்பும் பண்ணாத எங்க மேல போட்ட கேசை வாபஸ் வாங்கணும்னு அடுத்தகட்ட போராட்டத்தில் இறங்க வுள்ளோம்'' என்றார் அழுத்தமாக.
துணை இயக்குனர் ரமேஷ்வரனைத் தொடர்புகொண்டதில், "அந்தக் கிராமத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளனர். அதில் அடிபடும் விலங்குகளைப் புதைத் திருக்கிறார்கள். நாங்கள் வாக்குமூல ஆதாரத்துடன் பிடித்திருக்கிறோம். அவர்கள் தவறை மறைக்க அப்படிச் சொல்கிறார்கள்'' என்கிறார். வழக்கால் விரட்டப்படுகிற விவசாய கிராமங்களோ பதற்றத்திலிருக்கிறார்கள்.