(39) இல்லாத சிக்கலை எப்படித் தீர்ப்பது?
கார்த்திக், சுஹாஸினி நடிப்பில் நான் இயக்கிய முதல் படமான "ஆகாய கங்கை'’படத்தில் பெரும்பாலும் எனக்கு முன்கூட்டியே நன்கு பரிட்சயமான நட்சத்திரங்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்றதால், எவ்வித பிரச்சினைகளும் இல்லா மல் படப்பிடிப்பு நடந்து வந்தது.
படத்தில் ஒரு கிளாஸிகல் ஸாங் உண்டு. அதைப் படமாக்கு வதற்காக ரகுராம் மாஸ்டரு டன் பெங்களூரு சென்றிருந் தோம். நான், மணிவண்ணன், சுஹாஸினி.... எல்லாரும் ஹோட்டலில் அடுத்தடுத்த அறை களில் தங்கியிருந்தோம்.
அப்போது என்னைப் பார்த்து, தான் தயாரிக்கும் படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்காக கதையுடனும், அட்வான்ஸுடனும் வந்திருந்தார் பி.கலைமணி. மணிவண்ணனை அங்கே பார்த்ததும், அவர் கையில் அட்வான்ஸை கொடுத்து, அவரையே டைரக்டராக ஒப்பந்தம் செய்துவிட்டுப் போனார். ஒரு கதாநாயகியாக சுஹாஸினியை ஒப்பந்தம் செய்ய வேண்டி வந்ததால்... சுஹாஸினியும் அங்கே இருந்ததால் அவரையும் ஒப்பந்தம் செய்துவிட்டுப் போனார்.
என் முதல் படத்திற்கு மணிவண்ணன் கதை கொடுத்தார். மணிவண்ணனின் முதல் படம் கலைமணி யின் கதையில் உருவானது.
நான் பண்ண வேண்டிய படம் தான், மணிவண்ணனுக்கு முதல்படமாக "கோபுரங்கள் சாய்வதில்லை'’ அமைந்தது. மோகன், சுஹாசினி, ராதா ஆகியோர் நடித்திருந்தனர் அந்தப் படத்தில்.
என்னடா இது... நமக்கு வரவேண்டிய வாய்ப்பு மணிவண்ணனுக்கு போயிருச்சே’ என நான் வருத்தப்பட வில்லை. பாரதிராஜாவிடமிருந்து ஒரே நேரத்தில் வெளியே வந்த மூவரில் எனக்கும், ரங்கராஜுக்கும் டைரக்டராகும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. இன்னும் மணிவண்ணனுக்கு கம்பெனி அமையலையே என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கும் வாய்ப்பு அமைந்ததால் ரொம்பவும் சந்தோஷப் பட்டேன்.
ஏனென்றால்... எனக்குத்தான் வேலை பிஸியாக இருக்கும் போது ஏன் கவலைப் படணும்? அதனால் சந்தோஷப்பட்டேன்.
ஆனால்... சினிமா உலகைப் பொறுத்த மட்டில், எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷப்படுறோமோ... பல சமயங்கள்ல அந்த சந்தோஷம் நீடிக்காத அளவுக்கு சில விஷயங்கள் நடந்திடும்...
ஆகாய கங்கை’ படப்பிடிப்பு முழுக்க முடிந்தது.
படத்திற்கு டப்பிங்கோ, பின்னணி இசையோ இல்லாமல் முழுப்படத் தையும் தயார் செய்வதுதான் டபுள் பாஸிடிவ்.
அப்போதெல்லாம் டபுள் பாஸிடிவ் பார்த்துத்தான் படத்தின் குறைகளை நீக்கி, தேவைப்படுகிற விஷயங்களைச் சேர்ப்போம்.
படத்தின் டபுள் பாஸிடிவ் பார்த்த தயாரிப்பாளருக்கு ஏதோ குறை இருப்பதாகத் தோன்றியது.
எனக்கோ சில மைனஸ் தெரிந்தது. மற்றபடி 75 சதவிகிதம் ஒரு இயக்குநராக எனக்கு படம் திருப்தியாகவே இருந்தது.
"சார்... இன்னின்ன இடங்களில் சில திருத்தங்கள் செய்து, அந்த காட்சிகளை படப்பிடிப்பு நடத்தி சேர்த்துவிடலாம்''’எனச் சொன்னேன்.
யூனிட்டில் எல்லாருக்குமே படம் பிடித்திருந்தது.
ஆனால் தயாரிப்பாளருக்கு மட்டும் திருப்தி இல்லை.
"படத்தை கரெக்ட் பண்ணாம வெளியிடுறது தப்பு'’என்றார்.
"என்ன பண்ணப் போறீங்க?''’என்று கேட்டேன்.
"என் முந்தைய படத்தை இயக்கிய பாக்யராஜ் கிட்ட படத்தை போட்டுக்காட்டப் போறேன்''’ என்றார்.
"பாக்யராஜுகிட்டயா?''”
எனக்கு திக்னு ஆகிவிட்டது.
"பாக்யராஜ் பெரிய டைரக்டர். பாரதிராஜாகிட்ட அவரும், நானும் ஒண்ணா ஒர்க் பண்ணீருக்கோம். நீங்க அவர்கிட்ட படத்தைப் போட்டுக்காட்டி, அவர் காட்சியில் மாற்றங்களைச் செஞ்சா... ஒரு டைரக்டரா எனக்கு பேர் கிடைக் காது''’என்றேன்.
"இல்ல... படத்துல இன்னும் ஏதாவது வேணும்''”
"என்ன வேணும்னு நினைக்கிறீங்க?''’எனக் கேட்டேன்.
வேணும்’ என தோன்றிய அவருக்கு ‘என்ன வேணும்?’ என்று சொல்லத் தெரியவில்லை.
"தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பை நாமளாவது எப்படியாவது கண்டுபிடிக்கலாம்'’என திரும்பவும் படம் பார்த்த போதும் கதையும், திரைக்கதையும் எந்த குழப்பமுமில்லாமல் சரியாகத்தான் இருந்தது.
இல்லாத பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்பதே பிரச்சினையாக இருந்தது.
"ஆகாய கங்கை'’படத்தில் பல முக்கியமான விஷயங்கள் நடந்தன.
படப்பிடிப்பு தொடங்கிய போதே நல்ல விலைக்கு விநியோகஸ்தர்கள் படத்தின் ஏரியாக்களை வாங்கி விட்டார்கள். ஆனால் நான் சிக்கனமாக, வீனஸ் ஸ்டுடியோ விலேயே படம் எடுத்தேன். படத்திற்கு பெரிய செலவு என்று பார்த்தால், ‘தேனருவியில்’ என்கிற கிளாஸி கல் பாடலுக்காக கர்நாடகம் சென்றதுதான்.
இந்தப் படத்தில்தான் கவிஞர் மு.மேத்தா அவர்களை பாடலாசிரியராக கொண்டு வந்தேன்.
பாராதிராஜா சார் அஸோஸியேட் நான் என்பதால் கவிஞர் வைரமுத்துவை நன்கு தெரியும். அவர்தான் டைட்டிலில் இடம்பெற்ற ‘"பொங்கும் ஆகாய கங்கை'’ பாடலை எழுதினார். அதன்பிறகு அவரை பிடிக்க முடியவில்லை. அவ்வளவு பிஸி.
எனக்கு எப்பவுமே புதுமுகங்களை அறிமுகம் செய்வதில் விருப்பம் உண்டு. அதனால் மு.மேத்தாவை அறிமுகம் செய்தேன்.
தீம் திரனன...
தேனருவியில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ
எதுதான் இடையோ
மன வீணை- நான் இசைத்திட
தேனருவியில் நனைந்திடும் மலரோ
முக வாசலில் தீபம் -இரு
கண்களானதோ....
மன வாசல் -கோலமே
தினம் போடுதோ...
-இப்படி இலக்கியத் தரம் மிளிர வார்த்தைகளைக் கோர்த்திருந்தார் மேத்தா. பாடல் வரிகளைப் படித்துவிட்டு, மேத்தாவைப் பாராட்டினார் இளையராஜா.
"சிறப்பாக படம் அமைந்தும் “ஏதோ குறையுது... பாக்யராஜ் கிட்ட போகணும்'’என்றார் தயாரிப்பாளர் நாச்சியப்பன்.
"சொன்னேனே சார்... பாக்யராஜ்கிட்ட போனா... பேரு அவருக்குத்தான். கதாசிரியர் கலைமணியிடம் ஆலோசனை கேட்கலாமே...''” என்றேன்.
"இல்ல... பாக்யராஜுக்கு படத்தைக் காட்டுவோம்''” என்றார்.
அப்புறம்?!
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்