mm

(85) விடை தெரியாத கேள்வி!

ட்லாண்டிக் ஹோட்டல்ல ரூம் போட்டு ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணிக்கிட்டிருந்தோம். நைட் 11.30 மணிக்கு எங்க டைரக்டர் பாரதிராஜா சார் வீட்டுக்கு கிளம்பினார்.

Advertisment

நான், மணிவண்ணன், தங்கராஜ் உள்ளிட்டவங்க ஹோட்டல்லயே சாப்பிட்டோம்.

மணிவண்ணனும், தங்கராஜும் ஹோட்டல் ரூம்லயே தங்கிக்கிறதா சொல்லீட்டாங்க.

நான் என்னோட ரூமிற்கு கிளம்பும்போது நள்ளிரவு தாண்டி 12.30 மணி இருக்கும். லிஃப்ட்டில் நுழைந்தேன். லிஃப்ட் கீழே இறங்கத் தயாரா இருந்த நேரத்தில் அழுது கொண்டே ஓடி வந்து ஒரு பெண் லிஃப்ட்டுக்குள் நுழைந்தார்.

Advertisment

யார்?னு பார்த்தேன்.

ஷோபா!

எனக்கு ஷோபாவிடமும், அவரின் அம்மாவிடமும் நல்ல பழக்கம் இருந்தது. அதனடிப்படையில் ஷோபாவிடம் விசாரித் தேன்.

"என்னம்மா? என்னாச்சு?''”

"ஒண்ணுல்ல''”

"அப்புறம் ஏன் அழுதுக்கிட்டு ஓடி வர்றே?''”

"ஒண்ணுல்ல சார்''

"சொல்லக்கூடிய பிரச்சினைன்னா சொல்லும்மா... ஏதாவது பண்ணலாம்?''”

"அது ஒண்ணுமில்ல மனோபாலா சார்... அதை விடுங்க''”

"சரிம்மா.... எதுல வந்த? இப்ப மணி பன்னிரெண்டரை தாண்டீருச்சு. நீ முதல்ல பாதுகாப்பா வீடு போய்ச் சேரணும்... கார் கொண்டு வந்துருக்கதானே?''”

"இல்ல சார்...”

"கம்பெனி கார் இருக்கும்மா. அதுலதான் நான் போகப் போறேன். அப்படியே உன் வீட்டுல உன்னை விட்டுட்டுப் போறேன்...''”

"வேண்டாம் சார்...''”

"ஏம்ம்மா?''”

"ஆடோவுல போய்க்கிறேன்''”

"என்னம்மா நீ? பாதுகாப்பா உன்னை வீட்ல விட்டுடுறேன்மா... நீ வேற ஏதோ பிரச்சினைல இருக்க. உன்னை உங்க வீட்டுல சேர்த்தாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்மா''”

-இப்படி நான் சொல்லிக்கொண்டி ருக்கும்போதே லிஃப்ட் தரைத்தளத்திற்கு வந்தது.

mm

லிஃப்ட்டின் கதவு, திறந்ததும்... அடுத்த நொடியே பாய்ந்து வெளியே ஓடினார் ஷோபா.

நான் பின்னாலயே ஓடினேன். அதற்குள் ஆட்டோவில் ஏறிப் பறந்து விட்டார் ஷோபா.

ஆமாம்... பறந்துதான் விட்டார்!

கார் என் அறையை நோக்கி போய்க்கொண்டிருந்தது.

ஆனால் என் மனசு முழுக்க ஷோபாவைச் சுற்றியே இருந்தது.

ஷோபாவின் அழுத முகம் என் மனதில் சித்திரமாகப் பதிந்தது.

அந்த பொண்ணு ஏன் இப்படி அழுதுக்கிட்டு ஓடிவந்து லிஃப்ட்டுல ஏறிச்சு? அதுக்கு என்ன பிரச்சினையா இருக்கும். பாதுகாப்பா வீடு போய்ச் சேர்ந்திருக்கும்ல...” என நினைத்துக் கொண்டே இருந்தேன்.

இந்த குழப்பத்தோடவே அறையில் படுத்தேன்.

காலை ஆறரை மணி இருக்கும் போது....

"நடிகை ஷோபா தூக்கிட்டு தற்கொலை'’ என செய்தி வந்தது.

சில மணி நேரத்துக்கு முன் நாம் பார்த்து, பேசிய புகழ்பெற்ற நடிகை, இனி இல்லாமலே போய்விட்டாளா?’ என மனசு நம்ப மறுத்தது. பதைபதைத் தது. ‘ஏன் இப்படி வாழ வேண்டிய வயசில சாகத் துணிஞ்சா?’என்கிற கோபமும் வந்தது. ஆனாலும் அந்த கோபத்தால் என் சோகத்தை மறைக்க முடியவில்லை.

கமல்ஹாசனின் வீட்டுக்கு ஓடினேன்.

கமல், வாணிகணபதி உட்பட எல்லாரும் இருந்தாங்க.

கமல் வீட்டிலிருந்து நாங்கள்லாம் கிளம்பிப் போனோம் ஷோபாவின் வீட்டுக்கு.

மகாலட்சுமி மேனன் என்கிற இயற்பெயர் கொண்ட ஷோபா, குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமானார். கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக குறைந்த வருடங்களில் நிறைந்த படங்களில் நடித்து, ரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்தார்.

"பசி'’ படத்தில் குப்பத்துப் பெண்ணாக, காகிதம் பொறுக்கும் பெண்ணாக நடித்து, தன் 17 வயதிலேயே ‘சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வாங்கி பிரமிக்க வைத்தார் ஷோபா.

கவர்ச்சிகரமான உடல்வாகு இல்லை. மெலிசான தேகம்தான். தெருவில் நாம் அன்றாடம் பார்க்கிற எத்தனையோ பெண்களில் ஒருத்தியாகத்தான் அவரது தோற்றமும், நடிப்பின் இயல்பும் இருந்தது. ஆனால் திறமையில் தனி ஒருத்தியாகத் திகழ்ந்தார்.

23-09-1962 அன்று பிறந்த ஷோபா, 1980-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

18 வயது என்பது உயிரை மாய்த்துக்கொள்கிற வயசா?

புகழ் இருந்தது...

பொருள் இருந்தது...

உறவுகள் இருந்தது...

திரையுலகில் மவுசு இருந்தது...

இத்தனை இருந்தும் ஏன் இப்படி ஒரு துயர முடிவை மேற்கொண்டார் ஷோபா?

இது இன்றளவும் விளங்கிக்கொள்ள முடியாத... விடை கிடைக்காத கேள்வியே!

பரிதவிக்க வைத்த படாபட்!

(பறவை விரிக்கும் சிறகை)