செப்புச் சாமான் வாங்கிய சிலுக்கு!
எனது தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் நடித்த "சதுரங்க வேட்டை'’படம் சூப்பர்ஹிட் ஆனது. தனியார் அமைப்புகள் பலவும் இந்தப் படத்தைத் தயாரித்த எனக்கு விருது வழங்கியது.
"சௌத் இண்டியன் மூவி அவார்டு' எனப் படும் "சைமா அவார்டு' விழா துபாயில் நடந்தது. நான் நடிகனாக இருப்பதால் எனக்கு மிகுந்த கைதட்டல் கிடைத்தது. விருதைப் பெறுவதற்காக மேடையேறிய என்னை நெகிழ வைத்தது கே.பாலசந்தரின் நினைவு.
தன் மகன் இறந்த வீட்டிலும்கூட... அஞ்சலி செலுத்தச் சென்ற என்னிடம், "பாலா... உன் படம் பார்த்தேன், நல்லா இருந்தது'’என பாலசந்தர் சார் சொன்னது என் நினைவில் வந்தது.
அதன்பின் பாலசந்தர் சாரும் மறைந்து விட்டார்.
"சைமா விருதை' பெறும்போது மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில்... "பாலசந்தர் சார்... உங்களோட ஆசிர்வாதம்தான், எனக்கு இந்த விருது கிடைச்சிருக்கு. இந்த விருதை நான் உங்களுக்கு டெடிகேட் பண்றேன்''’என்றேன்.
விருதை வாங்கிக்கொண்டு கீழே இறங்கியபோதுதான் எங்க டைரக்டர் பாரதிராஜா இந்த விழாவுக்கு வந்திருப்பதே எனக்குத் தெரிந்தது. தனுஷ் பக்கத்தில் அமர்ந்திருந்தார். நான் அவரைப் பார்க்க, அவர் என்னை ஒருவித உறுத்தலாக' பார்த்தார்.
பாரதிராஜாவின் கோபத்தில் நியாயம் இருப்பதை என்னால் உணரமுடிந்தது.
எனது குருநாதர் பாரதிராஜா.
ஆனால் நான் விருதை பாலசந்தருக்கு டெடிகேட் செய்திருந்தேன். பாரதிராஜா விழா அரங்கில் இருப்பதை அறிந்திருந்தால், அவர் குறித்தும் சில வார்த்தைகள் பேசியிருப்பேன். ஏனென்றால் அது சிஷ்யனின் கடமை.
ஆனால் பாரதிராஜாவைச் சுற்றி இருந்தவர்களோ, "மனோபாலா உங்களோட அஸிஸ்டெண்ட். ஆனா உங்களை விட்டுட்டு, பாலசந்தருக்கு விருதை டெடிகேட் பண்ணீருக்கான். அவன் உங்க சிஷ்யன்னு விபரம் தெரிஞ்சவங்க... உங்களை என்ன நினைப்பாங்க. இப்படி அசிங்கப்படுத்திட்டானே...'’என ஏத்து, ஏத்துனு ஏத்திவிட்டிருக்கிறார்கள்.
இந்த சிண்டு முடிஞ்ச வேலை எனக்குத் தெரியாது.
மறுநாள் மாலைதான் துபாயிலிருந்து சென்னை கிளம்புகிறோம்.
காலை உணவுக்கு எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்குப் போனேன். பாரதிராஜா இருந்தார். நான் அவருக்கு வணக்கம் சொல்ல முயன்றேன்.
ஆனால் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார். ஆனாலும் என் மனதில் உள்ளதை அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்பதற்காக, அவரின் அருகில் சென்றேன்.
"சார் உங்க கோபம் நியாயமானதுதான். அதேசமயம் நான் சொல்றதை நீங்க காதுல வாங்கிக்கங்க சார். நீங்க இந்த விருது விழாவுக்கு வந்தது எனக்கு முன்கூட்டியே தெரியாது. விருது வாங்கிட்டு வரும்போதுதான் உங்களைப் பார்த்தேன். முதல்லயே தெரிஞ்சிருந்தா உங்களைப்பத்தி பேசியிருக்கமாட்டேனா சார்? யாரோ என்னைப் பத்தி தப்பா போட்டுக் கொடுத்தத பெரிசா எடுத்துக்கிட்டு, என்கிட்ட முகங்கொடுத்து பேசமாட்டேங்கிறீங்க.
என்னைப் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும். உங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். பிறகு ஏன் சார் மத்தவங்க சொல்றதை நாம பெரிசா எடுத்துக்கணும்?''’என கேட்டேன்.
ஒருவழியாக பாரதிராஜா சமாதானமானார்.
"சதுரங்க வேட்டை'’மூலம் எனக்கு நிறைய பாராட்டுகள் பல இடங்கள்ல இருந்து கிடைச்சாலும்கூட, அந்த பாராட்டுகளை அனுபவிக்க முடியாதபடிக்கு இடைஞ்சல் பண்றவங்க தான் அதிகமா இருந்தாங்க.
நான் ஏன் படத் தயாரிப்புல இறங்கினேன்?
நம்ம கம்பெனி பேர் சொன்னா தெரியுற மாதிரி இருக்கணும். நம்ம கம்பெனி பேனருக்காகவே கால்ஷீட் தர நடிகர்-நடிகைகள் முன்வரணும்.
அந்த மாதிரி நடந்துச்சா?
ஆமா... ஸ்டார்கள் என் பேனருக்கு தயங்காம கால்ஷீட் தர முன்வந்தாங்க.
அப்புறம்?
மனோபாலா நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பாருங்கிற பேரும் கிடைச்சது.
ஆனா அந்த பேரை தக்க வைக்கிறதுதான் பெரும் போராட்டமா இருக்கு.
என்கிட்ட ஒரு பழக்கம் இருக்கு...
கல்யாணம் உள்ளிட்ட மங்கள விசேஷங்களுக்குக் கூட சிலசமயம் போகாம இருந்துடுவேன். ஆனா, சாவு நடந்தா... போய் அஞ்சலி செலுத்தாம இருக்கமாட்டேன்.
காரணம்...
செத்துப் போனவங்க முகத்தை கடைசியா பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் அப்போ மட்டும் தானே?!
வயதாகி, இயற்கை மரணமடைகிறவர்களின் முகத்தை கடைசியாகப் பார்க்கும்போது, அவங்களுக்கு அஞ்சலி செலுத்திட்டோம்கிற ஒருவித மன நிறைவு ஏற்படும்.
ஆனா... வாழவேண்டிய வயசிலயே வாழ்க்கையை முடிச்சுக்கிறவங்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது, மனசுல ஒரு வலி இருந்துக்கிட்டே இருக்கும்.
அப்படி ஒரு வலியைத் தந்தவர் "சில்க்' ஸ்மிதா முதல்நாள் என்கூட நடிச்சிக்கிட்டிருந்தவர், மறுநாள் இல்லைங்கிறது எவ்வளவு வேதனை?
"வீரப்பதக்கம்'’படத்துல நானும், காந்திமதியும் ஜோடி. எங்களுக்கு பொண்ணா நடிக்குது சிலுக்கு. கதைப்படி எங்க குடும்பம் கழைக்கூத்தாடி குடும்பம். வயித்துப் பாட்டுக்காக கயித்துமேல நடக்கணும் சிலுக்கு.
சிலுக்குக்கு டூப்பா நடிக்க ஒரு கழைக்கூத்தாடி டூப்பும் ரெடி.
ஒரு பஜாருக்குள்ள இந்தக் காட்சி நடக்குது. இதுக்காக பலவிதமான கடைகள் செட்டிங்ஸ் போடப்பட்டிருக்கு. அதில் செப்புச் சாமான்கள் விக்கிற ஒரு கடையும் போட்டிருந்தார் ஆர்ட் டைரக்டர். செப்புச் சாமான்கள்னா தெரியும்ல... சின்னப் பிள்ளைங்க சமையல் செஞ்சு விளையாடுறதுக்காக அடுப்பு, சமையல் பாத்திரங்கள்லாம் குட்டி, குட்டியா செஞ்சு விற்கிற கடை.
சிலுக்கு அந்த கடைக்குப் போய், மினியேச்சர் சமையல் பாத்திரங்களை விலைக்கு வாங்கிக்கிட்டிருக்கு.
எனக்கு வியப்பா இருந்துச்சு.
"என்ன ஸ்மிதா... குழந்தைங்க விளையாடுற பொருளையெல்லாம் வாங்கிக்கிட்டிருக்கியே? யாருக்கு?''”
"எனக்குத்தான் சார்''”
"உனக்கா?''”
"ஆமா சார்... எனக்கு இந்த மாதிரி குட்டி, குட்டி பொருட்கள்னா உசுரு. போற இடங்கள்லயெல்லாம் இந்த மாதிரி பொருட்களை வாங்கிடுவேன். என் வீடு முழுக்க இப்படிப்பட்ட பொருட்கள் நிறைய இருக்கு''’என்றார் சிரித்தபடி சிலுக்கு.
"கவர்ச்சிகரமான சிலுக்குவின் தோற்றத்திற்குள் இருந்த மனசு, இன்னும் குழந்தைத்தனம் குறையாததாகவே இருக்கே'’என எனக்கு வியப்பாக இருந்தது.
"இந்த குழந்தைத்தனம் மாறாக் குணம் கொண்டவள்தான், நாளை தன் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறாள்' என்று எனக்கு அப்போது தெரியாது..
(பறவை விரிக்கும் சிறகை)