82 ஆசைகாட்டி கடத்தப்பட்ட டைரக்டர்!
நான் தயாரித்த "சதுரங்க வேட்டை' படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை, குறைந்த விலைக்கு தங்களுக்குத் தரவேண்டும் என பிரபல நடிகரும், டைரக்டரும் சேர்ந்து என்னை தி.நகர் ரெஸிடென்சி டவர் ஹோட்டலில் வைத்து மிரட்டியதையும், சமயம் பார்த்து அங்கிருந்து நான் தப்பியதையும் கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா...
என்னை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கியது அந்தச் சம்பவம்.
படத்தை விற்பதற்காக பிரபல விநியோகஸ்தர்கள் பலருக்கும் படத்தைப் போட்டுக்காட்டியபோது, படம் சூப்பராக இருப்பதாகப் பாராட்டினார்களே தவிர அடிமாட்டு விலைக்கே கேட்டார்கள்.
அந்தச் சமயம், டைரக்டர் லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் நல்ல கதையம்சம் உள்ள படங்களை வாங்கி வெளியிட்டு வந்தது.
"அஞ்சான்' படப்பிடிப்பிற்காக மும்பையில் இரவுபகலாக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார் லிங்குசாமி. அவருக்கு போன் செய்து, விஷயத்தைச் சொல்லி, கண்டெண்ட்டை அனுப்பி வைத்தேன்.
"வாங்கணும்னு கட்டாயப்படுத்தல. படம் பிடிச்சிருந்து, வாங்க விரும்பினா டீல் பேசலாம்' என்றேன்.
படத்தோட முக்கியமான ஃபோர்ஷன்களை இரவு எட்டு மணி வாக்கில் மும்பையில் இருந்தே பார்த்த லிங்கு சாமிக்கு படமும், அதன் புதிய கதை அமைப்பும் பிடித் துப் போக, உடனே சென் னைக்கு, தன் தம்பி போஸிடம் பேசி, "இந்தப் படத்தை நாம தான் வாங்கு றோம். நீ உடனே மனோபாலா சார்கிட்ட பேசி, கமிட் பண்ணு' எனச் சொல்லிவிட்டார்.
படத்தை மொத்தமாக வாங்கிக்கொள்ள பிசினஸ் பேசினார்கள். அது நல்லபடியாக முடிந்தது.
படத்திற்கு ரிலீஸ் தேதி குறித்த நிலையில், படத்தின் டைரக்டர் ஹெச்.வினோத் என் ஆபீஸ் பக்கமே வர வில்லை.
அப்புறம் தான் தெரிந்தது, வினோத்தை கடத்திவிட்டார்கள் என்று. ஆமாம்... “எங்க கம்பெனியில பெரிய பட்ஜெட் படம் நீ டைரக்ட் பண்ணப் போற” என ஆசை வார்த்தை சொல்லி, திருப்பதி பிக்ஸர்ஸ் நிறுவனம், வினோத்தை தங்கள் பிடிக்குள் கொண்டு சென்றுவிட்டது.
இது சினிமாவில் சகஜம் தான்.
ஒரு நிறுவனம், புதியவர்களை தேடிப் பிடித்து, அறிமுகப்படுத்தும். அவர்களின் படம் வெற்றி பெற்றதும், அதற்கு முன் அவர்களைக் கண்டுகொள்ளாத பிரபல நிறுவனங்கள் கூட, அவர்களை தங்கள் நிறுவனத்துக்கு தூக்கிச் சென்று உபசரிக்கும்.
அறிமுகப்படுத்தும் நிறுவனமோ "உங்களை அறிமுகப்படுத்துறோம். அதனால எங்களுக்கு உங்க அடுத்த படத்தையும் பண்ணித் தரணும்' என பேச்சு நடத்தியிருக்கும்.
நானும், வினோத்திடம் "தம்பி, நீ எங்களுக்கு உன்னோட அடுத்த படத்தையே பண்ணணும்கிற அவசியம் இல்ல. ஆனா... ஏதாவது ஒரு கேப்ல எங்களுக்கும் ஒரு படம் பண்ணித் தரணும்'' எனச் சொல்லியிருந்தேன்.
"கண்டிப்பா பண்றேன் சார்'' எனச் சம்மதித்திருந்தார் வினோத். (ஆனால்... "சதுரங்க வேட்டை' வெளியான பிறகு அவர் மாறிவிட்டார். அது தனிக் கதை. அதை பிறகு பேசலாம்)
ஓ.கே., திருப்பதி பிரதர்ஸ் பெரிய கம்பெனி. வினோத்துக்கு அதுல ஒரு நல்ல வாய்ப்பு அமைஞ்சது மகிழ்ச்சி தான்’ என நினைத்துக் கொண்டேன்.
"சதுரங்க வேட்டை' படம் வெளியானது. திருப்பதி பிரதர்ஸ் செய்த அபரிமிதமான பப்ளிஸிட்டியால் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்திற்காக நான் பல்வேறு விருதுகளைப் பெற்றேன்.
இதற்குக் காரணம், படத்தோட புதுமையான கதை மட்டுமில்ல, வினோத்தோட தரமான டயலாக்கும் முக்கியக் காரணம்.
நேஷனல் அவார்ட் வரைக்கும் போச்சு படம். ஆனா... அங்க சில பாலிடிக்ஸ் இருக்கே. லாபி பண்ணினாத்தான் வாங்க முடியும். தமிழ்ப் படங்களை பரிசீலிக்கிற பிரிவுல அந்த வருஷம் தமிழ்ப் பட டைரக்டர் ஒருத்தர் தான் முக்கியமா இருந்தார். ஆனா அவர் என்னோட படத்தை ஒரு பொருட்டாவே நினைக்கல. அவரு வேற ஒருத்தருக்கு விருதுக்கு சிபாரிசு செய்யணும்னு நினைச்சே வந்தவரு. இது தெரியாம நான் என்ன நினைச்சேன்னா, ‘பெஸ்ட் ஃபிலிம் அவார்ட் கிடைக்காட்டியும், பெஸ்ட் டயலாக் ரைட்டருக்கான அவார்ட் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா அதுவுமே கிடைக்கல.
எல்லாம் பாலிடிக்ஸ். சுத்திச் சுத்தி பாலிடிக்ஸ். "நல்ல படங்களை எடுப்பவங்களை ஊக்குவிப்போம்'கிற எண்ணமே பெரும்பாலும் கிடையாது.
நேஷனல் அவார்ட்ல ஏமாற்றம் கிடைச்சாலும் "எப்படி இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து, படம் பண்ணணும்னு தோணிச்சு?' எனப் பலரும் வியந்தார்கள். கதையைத் தேர்வு செய்ததற்காகவே என்னைப் பாராட்டினார்கள்.
"சதுரங்க வேட்டை' கதையைக் கேட்டதுமே நான் ஜீவாவிடம் இந்தக் கதையைச் சொல்லி நடிக்கக் கேட்டேன்.
அப்போது ஜீவா என்ன மனநிலையில் இருந்தாரோ... அந்தச் சமயத்தில் கதையை ஜட்ஜ் பண்ணும் அனுபவம் இல் லையோ என்னவோ...
அந்தக் கதை யில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.
"சதுரங்க வேட் டை' என்று மட்டு மல்ல... நான் சொல்கிற கதையிலெல்லாம் ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
சமீபத்தில் ஜீவாவை சந்தித்தபோது... “"அண்ணே... ‘சதுரங்க வேட்டை’ மாதிரி ஒரு கதை கொண்டாங்கண்ணே'' என்றார்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சௌத்ரியைச் சந்தித்தபோது... "ஏம்ப்பா... அவன் ஜீவா தான்... ’சதுரங்க வேட்டை’ கதையில நடிக்க மாட்டேன்ட்டான்னா... படத்தோட ஃபர்ஸ்ட் காப்பிய நீ என்கிட்ட கொண்டு வந்திருக்கலாம். இன்னும் வேற மாதிரி எடுத்திட்டுப் போயிருப்பேனே'' என்றார்.
"சதுரங்க வேட்டை' படத்தை கே.பாலசந்தர் சாரைச் சந்திச்சு, ஆசி வாங்கிட்டுத் தான் தயாரிக்கத் தொடங்கி னேன்.
படம் சூப்பர் ஹிட் ஆனதும், அதன் வெற்றி விழாவையும் பாலசந்தர் சார் தலைமையில் நடத்த முடிவு பண்ணியிருந்த போதுதான் பாலசந்தர் சாரோட மகன் கைலாசம் இறந்துவிட்டார். அது பாலசந்தர் சாரை மட்டுமல்ல... என்னையும் ரொம்பவே பாதித்தது.
கைலாசத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டுக்குப் போயிருந்தேன்.
பாலசந்தர் சார் உட் கார்ந்திருந்தார். பக்கத்தில் டைரக்டர் வசந்த் உட்பட சிலர் இருந்தாங்க. நான் போய் ஒரு ஓரமாய் நின்றேன். என்னை தன் அருகே கூப்பிட்டார். போனேன்.
"உன் படம் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்தது. டைரக்டர் வினோத்துக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லீரு'' என்றார்.
எனக்கு அதிர்ச்சியும், பிர மிப்புமாக இருந்தது... ‘மகனோட உடல் வைக்கப்பட்டிருக்கு. இந்தச் சோகமான சூழ்நிலையிலயும் ஒரு படைப்பாளியை பாராட்டணும்னு மனசு வேற யாருக்குமே வராது.
என்னைப் பார்த்து எரிச்சலாகி, முகத்தைத் திருப்பிக்கொண்ட எங்க டைரக்டர் பாரதிராஜா....
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்... எனக்கு மகளாக நடித்த சிலுக்கு....
தற்கொலைக்கு சில மணி நேரங்கள் முன்பு.... அழுதுகொண்டே ஆட்டோவில் ஏறிப்போன ஷோபா....
கூவாமல் போன கோழி... விஜி....
(பறவை விரிக்கும் சிறகை)