(79) வேட்டை நடத்திய வேட்டை!
படத்துறையில் எனக்கு நண்பர்கள் அதிகம். என்னோட நட்பு வட்டாரம் ரொம்பப் பெரியது. மணிவண்ணனை எப்படி நேசிச்சேனோ, அப்படித்தான் ரங்கராஜையும் நேசிச்சேன்.
நிறைய டைரக்டர்கள் என்மேல் பாசமா இருக்காங்கன்னா... அதுக்குக் காரணம், நான் யார்கிட்டேயும் மனக்கசப்பு வர்ற மாதிரி நடந்துக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரைக்கும் எல்லாருமே எனக்கு நண்பர்களா இருக்கணும். யாரும் நமக்கு எதிரிகளா இருக்கக்கூடாதுனு நினைக்கிறவன் நான். சிலபேரை எதிரிகளா மாற்றக்கூடிய சூழ்நிலைகூட உருவாகும். ஆனா நான் அதுக்கு இடம் கொடுக்க மாட்டேன். ஆனாலும் சிலர் என்னை எதிரியா பார்ப்பாங்க.
எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பராக இருந்த நடிகர் அரவிந்த்சாமி என்னை எதிரியா பார்க்கிற சூழ்நிலையை சிலர் உருவாக்கிட்டாங்க.
ஒரு வகையில் எனக்கு உறவினர் தான் நண்பர் அரவிந்த்சாமி. நான் தயாரிச்ச ‘சதுரங்க வேட்டை-2’ படத்துல ஹீரோவாக நடிச்சிருக்கார். படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் பண்ண, ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்ட நேரத்தில், மலேசியா, சிங்கப்பூரில் சென்ஸார் சர்டிபிகேட் வாங்க வேண்டியிருந்ததால், அந்தச் சமயத்தில் அரவிந்த் சாமி பிஸியாக இருந்ததால், அவசரம் கருதி, அரவிந்த்சாமி கேரக்டருக்கு டம்மி வாய்ஸ் போட்டு... அதாவது வேறொரு நபரை பேச வைத்து படத்தின் காப்பி ரெடி பண்ணி அனுப்பிவைத்தேன்.
இப்படி டம்மி வாய்ஸ் பயன்படுத்தி விட்டு, பிறகு சம்பந்தப் பட்ட நடிக ரின் ஒரிஜி னல் வாய்ஸை பயன்படுத்துவது சினிமாவில் நடைமுறையில் இருக்கிற விஷயம் தான்.
ஆனால்...
உங்களோட வாய்ஸுக்குப் பதிலா டம்மி வாய்ஸ் போட்டு, தமிழ்நாட்டுலயும், வெளிநாட்டுலயும் படத்தை ரிலீஸ் பண்ண பிளான் போட்டிருக்கார் மனோபாலா” என சிலர் சொன்னதை நம்பி, என் நெருங்கிய நண்பரான அரவிந்த்சாமி, எனக்கு எதிராக கோர்ட்டில் வழக்குப் போட்டுவிட்டார்.
பொதுவாக சினிமா உலகில் நட்சத்திரங் களின் சம்பள பாக்கி என்பது அவர்கள் டப்பிங் பேச வரும்போது செட்டில் செய்யப்படும். செட்டில்மெண்ட் பண்ணவில்லையென்றால் டப்பிங் பேச மாட்டார்கள். இதுதான் நட்சத்திரங்களின் பிடிமானம். இதனால்தான் ‘டம்மி வாய்ஸுடன் படத்தை ரிலீஸ் பண்ணப் போறாங்க’ என சிலர் சொன்னதை நம்பி, படத்தை வெளியிடவிடாமல் வழக்குப் போட்டுவிட்டார் அரவிந்த்சாமி.
இந்த மாதிரியெல்லாம் இல்லாததும் பொல்லாததுமாக சொல்லி உறவுகளையும், நட்பையும் கெடுத்தாங்களே ஒழிய, யாரும் இந்தப் படம் நல்லபடியா வெளிவரணும்னு நினைக்கவில்லை.
எனக்கும், அரவிந்த்சாமிக்கும் இடையேயான நட்பை கெடுக்காமல் இருந்திருந்தால் “"தம்பி, பணத்தை இப்போ பெரிசு பண்ணாதீங்க. படம் நல்லா வந்துருக்கு. அது நல்லபடியா ரிலீஸான நமக்கெல்லாம் நல்ல பேரு கிடைக்கும்''’என நான் சொல்லியிருப்பேன்.
அரவிந்த்சாமியும், பணத்தை பெரிது படுத்தாமல் விட்டிருப்பார். அந்தளவுக்கு பெருந்தன்மையானவர்தான் அரவிந்த்சாமி. ஆனா... அவரோட எதிரியாவே என்னைப் பார்க்கிற அளவுக்கு, அவரை மாத்திட்டாங்க. அதுதான் என்னால தாங்க முடியாத வேதனையா, இன்னிவரைக்கும் அந்த மனவருத்தம் இருக்கு. படத்தை வெளியிடுறதுக்கான போராட்டமும் நாலு வருஷமா.... இன்னிவரைக்கும் நடத்திக்கிட்டிருக்கேன். கூடிய சீக்கிரம் எல்லா பிரச்சினையும் கலைஞ்சு, படம் ரிலீஸ் ஆகிற தருணம் உருவாகியிருக்கு. அது ஒரு சந்தோஷமான விஷயம்.
நான் திரைப்பட தயாரிப்பாளரா ஆனேன் அப்படிங்கிறதைவிட, அந்த சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன்னுதான் சொல்லணும். படம் தயாரிக்கணும்கிற எண்ணத்தில் நிறைய கதைகள் கேட்டிருக்கேன். நான் கேட்டு செலக்ட் பண்ணின கதைகள் அப்படியே வேற கம்பெனிகள்ல படமாகி சூப்பர் ஹிட் ஆகியிருக்கு.
ஏன் நம்மால் படம் தயாரிக்க முடியலை?’ அப்படிங்கிற கேள்வி எனக்குள்ள இருந்துக்கிட்டே இருந்தது.
ஒரு டைரக்டர் என்ன சொன்னார்னா.... ‘"படம் தயாரிக்கிறதுன்னா ஒரு பேனர் வேல்யூ இருக்கணும்ல சார்'’என் றார்.
"பேனர் வேல்யூவா? படம் தயாரிச்சா தானே பேனர் உருவாகும். முதல் படம் தயாரிக்கிற நிறுவனத் துக்கு பேனர் வேல்யூன்னா... நல்ல கதை தானே. அப்ப நல்ல கதையைப் பிடிக் கணும்'’ என முடிவு செய்தேன்.
நல்ல கதை தேடின என் முதல் முயற்சியிலேயே கிடைத்தவர்தான் நலன் குமாரசாமி. "சூது கவ்வும்'’ படத்தின் டைரக்டர். பல படங்களின் கதாசிரியரான நலன் குமாரசாமியை போனில் தொடர்பு கொண்டு, “"ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுப்பா, நான் படம் தயாரிக்கப் போறேன். என்கிட்ட பெரிசா காசு பணம் இல்லை. ஆனா ஒரு பார்ட்னரை சேர்த்துக்கிட்டு, நல்ல கதையா, சின்ன பட் ஜெட்ல படம் தயாரிக்க லாம்னு இருக்கேன்'' என்றேன்.
"சார்... ஒரு நல்ல கதை இருக்கு. அந்தக் கதையை நான் கேட்கல. எங்கம்மா கேட்டுட்டு ‘அருமையா’ இருக்குனு சொன்னாங்க. அந்த கதைக்கு உரியவரை உங்ககிட்ட அனுப்பி வைக் கிறேன்''’னு சொன்னார்.
நலன் குமாரசாமி அனுப்பி வச்சவர்தான் இன்னிக்கி பெரிய டைரக்டரா இருக்க, என் மகன் போன்று நான் நினைக்கக்கூடிய, ஹெச்.வினோத். வினோத் என்கிட்ட சொன்ன கதை அருமையா இருந்தது. கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா இந்தக் கதை இண்டஸ்ட்ரிய சுத்திக்கிட்டிருந்திருக்கு. கதை கேட்ட யாருமே இந்தக் கதையை சரிவர புரிஞ்சுக்கல.
வினோத் இந்தக் கதையை சொல்ல வந்தப்போ... “"சார்... எனக்கு கதையைச் சொல்ல வராது. நீங்க இந்த ஸ்கிரிப்ட் புக்கை படிச்சுக்கங்க''’என்றார்.
நமக்கு அது சரிப்படாது. கதையைக் கேட்டுக்கேட்டே, கதையைச் சொல்லிச் சொல்லியே பழக்கப்பட்டவன், அதனால்... “"தம்பி அது சரியா வராது. கதையே சொல்ல வராதுன்னா எப்படி படம் எடுக்கிற நம்பிக்கை வரும். உங்களுக்கு எந்தளவு , எந்த மாதிரி சொல்ல வருமோ... ஒரு குழந்தை சொல்றாப்ல கூட நீங்க கதையைச் சொல்லுங்க. அப்புறமா ஸ்கிரிப்ட் புக்கை படிச்சிக்கிறேன். நீங்க கதையைச் சொன்னாத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும்''” என்றேன்
சுமார் 45 நிமிடங்களில் கதையைச் சொன்னார் வினோத்.
கதையைக் கேட்டதுமே என் மைண்ட்டுக்குள்ள பரபரனு ஆகிடுச்சு. உடனே சஞ்சய் என்கிற என் நெருங்கிய நண்பருக்கு போன் செய்து, வினோத் சொன்ன கதையைப் பத்திச் சொன்னேன். கதை கேட்கிறது உள்ளிட்ட விஷயங்களையெல் லாம் நீங்களே பார்த்து முடிவு பண்ணிக்கிட்டுச் சொல்லுங்க. நாம சேர்ந்து படம் தயாரிக்கலாம்னு சஞ்சய் ஏற்கனவே சொல்லியிருந்தார்.
அதனால் அவருக்கு போன் செய்து, “"இந்தக் கதையை படமாக்கலாம்''னு சொன்னேன்.
உடனே சம்மதிச்சு வந்தார்.
இருவரும் சேர்ந்து ஒரு சின்ன தொகையான பத்தாயிரம் ரூபாயை அட்வான்ஸாக வினோத்திற்கு கொடுத்தோம்.
என்னோட ஆபீஸ்லேயே பின்புறம் ஒரு அறை தயார் செய்து, எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, வினோத்தை அங்கே உட்காரச் செய்தேன்.
"இந்தக் கதைக்கு யாரை ஹீரோவாக நினைச்சிருக்கீங்க? முன் கூட்டியே சொன்னீங்கன்னாதான் அவங்கவிட்ட பேசி கால்ஷீட் வாங்க முடியும்''’என்றேன்.
"சார்... சில படங்கள்ல நடிச்ச பிரபல கேரமாமேன் நட்டி என்கிற நட்ராஜ் சரியா இருப்பார்.''”
எனக்கு ஷாக்!
"என்னப்பா... நீ? அவரு பிஸியான கேமாராமேன்ப்பா. அவருக்கு நடிக்கணும்னு ஆசை. ஒண்ணு, ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கார். அவர் புரொபஷனல் நடிகரில்லையே. கேமராமேன் தானே...?''”
"இல்ல சார்... நட்டி சரியா இருப்பார்''”
"எதனால அவரைக் கேட்கிற?''
வினோத் சொன்ன பதில் எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.
(பறவை விரிக்கும் சிறகை)