(76) இருபதில் அறுபது!
சிவாஜியப்பா-சரோஜாதேவியம்மா நடிப்பில் "பாரம்பரியம்'’படத்தை நான் இயக்கினேன். முதல்நாள் படப்பிடிப்பிற்கு வந்த சரோஜாதேவியைப் பார்த்தபோது எனக்கு ஷாக்!
"படகோட்டி'’படத்தில் பின்கொசுவம் வைத்து, கெண்டைக்கால் வரை உயர்த்திக் கட்டிய சேலைக்கட்டுடன் வருவாரே... அந்தமாதிரி பின்கொசுவம் வைத்து சேலை கட்டியிருந்தார். அது நன்றாக இருந்தாலும், மேக்-அப்பை ஃபுல்லா ஏத்தியிருந்தார்.
ஷூட்டிங் இல்லாதபோதுகூட மேக்- அப்புடன் இருப்பவர், ரொம்ப நாளைக்குப் பிறகு நடிக்க வந்ததால் ஸ்ட்ராங் பவுண் டேஷன் மேக்-அப்பில் வந்துநின்றார்.
கதைப்படி வாழ்ந்து கெட்ட குடும்பத் துத் தலைவி சரோஜாதேவி. இவ்வளவு பள பளப்பாக மேக்-அப் போட்டிருந்தால் சரியாக வராதே.
எப்படி அவரிடம் சொல்வது? என எனக்குத் தயக்கம். நைஸாக சிவாஜியப்பா விடம் போனேன்.
"அப்பா... கதைப்படி காசு பணம் இல் லாத குடும்பத்து பெண்மணியா வரணும். ஆனா, இவ்வளவு மேக்-அப் போட்டி ருக்காங்க... இது சரியா வராதுல்லப்பா'' என்றேன்.
"அதெல்லாம் சொன்னா கேட்டுக்கிருவாடா. பாலும் பழமும் பண்ணினவளாச்சே... கொஞ்சம் பொறு''’ என என்னிடம் சொல்லிவிட்டு, சரோஜாதேவியைப் பார்த்தார்.
"சரோஜா இங்க வா... இவ்வளவு மேக்-அப்பெல்லாம் வேணாம். கண் மை ஜாஸ்தியா இருக்கு. அதை கொஞ்சம் குறைச்சுக்க... புரியுதா? இவ்வளவு மேக்-அப் வேணாம்னு டைரக்டர் சொல்றாரு. டைரக்டர் சொல்றதைத்தான் நாம கேட்கணும்''’என்றார்.
"நீங்க மட்டும் இவ்ளோ மேக்-அப் போட்டிருக்கீங்க?''’என சிவாஜியைப் பார்த்துக் கேட்டார் சரோஜாதேவி.
"தாத்தா வேஷம்னா மேக்-அப் இல்லாம நடிக்கலாம். அப்பா வேஷம்ல... அதான் லைட்டா மேக்-அப் போட்டிருக்கேன். சரி... சரி... போய் மேக்-அப்பை குறைச்சுக்கிட்டு வா, இல்லேன்னா உன் கேரக்டரை, இந்த டைரக்டர் பய பாட்டினு மாத்திறப் போறான்''’என்றார். சிரித்துக்கொண்டே போன சரோஜாதேவி, மேக்-அப்பை கொஞ்சமே கொஞ்சம் டல் பண்ணிக்கிட்டு வந்தாங்க. அழகாக இருந்தது.
ஒரே ஷாட்டில் ஒரு சீன் கம்போஸ்பண்ணி வைத்திருந்தேன். அது என்னன்னா....
சிவாஜியப்பா அப்படியே தளர்வா நடந்து வருவார். அவரோட தோள்ல கிடக்கிற அங்கவஸ்திரம் கீழ விழும். அதைப் பார்த்திட்டு சரோஜாதேவியம்மா வந்து, அங்கவஸ்திரத்தை எடுத்து சிவாஜியோட தோள்ல போட்டு விட... உடனே சிவாஜி, "நான் சொல்லாம தானா இந்த அங்கவஸ்திரம் எப்ப கீழ விழுந்துச்சோ... அப்பவே இந்த ரங்கமன்னார் செத்துட்டான்'னு சொல்லணும். உடனே சரோஜாதேவி, ‘"மனசில எதையும் போட்டு குழப்பாதீங்க. கடைசிவரைக்கும் உங்க கௌரவத்துக்கு எந்த பங்கமும் வராது'’என்பதாக சிவாஜியை ஆறுதல்படுத்த வேண்டும்.
இந்த ஒரே ஷாட் சீன்ல ரெண்டுபேருமே சிலிர்க்கிற மாதிரி நடிச்சாங்க. அதன் தொடர்ச்சியா... இரவில் தூங்க முடியாமல் தவிப்பார் சிவாஜி.
காசு, பணம் அப்பாகிட்ட இல்லேன்னதும், பிள்ளைங்கள்லாம் அப்பாவுக்கு எதிரி ஆகிடும். அதை நினைச்சு சோகமா நிற்பார். அப்போ சிவாஜி ஷோல்டர்ல சரோஜாதேவி கை வைப்பாங்க. சிவாஜி திரும்பிப் பார்த்து, ஏதோ சொல்ல வர... அந்தம்மா சிவாஜியோட வாயை, தன் கையால் பொத்துவாங்க. உடனே சிவாஜி அந்தக் கையை விலக்கிவிட்டு... "ஒரு காலத்துல நான் பேச ணும்னு நினைச்சதையெல் லாம் நீ பேசணும்னு நினைச்ச. இன்னிக்கும் நான் பேச நினைக்கிறத பேசவிடாம அடக்கிட்டியே'’என்பார்.
இதுதான் அந்த காட்சியோட கான்செப்ட்.
ரெண்டுபேரும் நடிச்சு முடிச்சதும் ஒட்டுமொத்த யூனிட்டும் கை தட்டி பிரமிச்சாங்க.
"பார் மகளே பார்'’ படத்துக்குப் பிறகு வி.கே.ராமசாமியண்ணே, சிவாஜியப்பாவை எதிர்த்துப் பேசுற லென்த்தி டயலாக். அதாவது....
ஊரே திரண்டு நிற்கும்.
சிவாஜியப்பா கேரக்டர்... படத்துல வர்ற ரங்கமன்னார் கேரக்டர் இப்ப வெறும் காத்துல தான் வாழுது. அதாவது பழைய பந்தாவுல, பழைய செல்வாக்குல, பழைய கௌரவத்துலதான் ரெங்கமன்னார் வாழ்ந்துக்கிட்டிருக்கார். இப்ப அவர்கிட்ட ஒண்ணுமில்லங்கிறத ஊருக்கு முன்னாடி உடைச்சுச் சொல்ற மாதிரி வி.கே.ஆர். பேசணும்.
"உன்கிட்ட ஒண்ணு மில்லாததுனாலதான் உன்னை விட்டு எல்லாரும் போய்ட்டாங்க'’என வி.கே. ஆர். சொல்லி முடிச்சதும்...
நிதானம் இழக்கும் நிலைக்கு வந்த வந்த சிவாஜி பதிலுக்கு... “"ராமு, உன்னை எங்க வைக்கணுமோ, அங்க வச்சிருக்கணும். கூடக் கூட வச்சிருந்ததாலதான்டா இப்படி காறித் துப்புற'’என சிவாஜி பேசணும்.
சிவாஜி அப்படிப் பேசியதும்.....
"நாய் ஒண்ணுதாண்டா எஜமானுக்கு ஆபத்து வந்தா கத்தும். நான் நாய். கத்திட்டேன்'னு வி.கே.ஆர். சொல்லிட்டுப் போவார்.
"என்னப்பா நீ, சிவாஜிகிட்ட ‘அப்பா... அப்பான்னு அப்படி உருகுற? பிரபு கூட அப்படி உருகாதுபோல. ராம் கூட (ராம்குமார்) அப்படி உருகாது போல... நீ உருகுறியே? சூரக்கோட்டைல பொறந்தவன் மாதிரியே சொல்றியே''’என வியந்து சொல்லுவார் வி.கே.ராமசாமி.
வி.கே.ராமசாமியண்ணன் பற்றி நிறைய சொல்லலாம். அவர்போல கேரக்டர் ரோலில் நடிக்க ஆளேது... பிரமாதம் பண்ணுவார். நாடக உலகத்துலருந்து நல்ல அனுபவத்தோட, சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் நோக்கத்தோடு இண்டஸ்ட் ரிக்குள் வந்தார். ஆனால் தன்னோட 19 வயசுல சினிமாவுல அறிமுகமாகி நடிக்க ஆரம்பிச்சாலும், அறிமுகப் படமே அப்பா வேஷம்தான்.
"ஹீரோவா நடிக்கணும்னு ஆசையோட வந்த நமக்கு, அப்பா வேஷம் கிடைக்குதே'’என மனம் நொந்துபோனாலும், வந்த வாய்ப்பை விடக்கூடாதுனு வாலிப வயதில் வயசாளியா நடிச்சிருக்கார்.
வி.கே.ஆருக்கு கையெழுத்து நன்றாக இருக்குமாம். அதனால் அன்றைய புகழ்பெற்ற பாடலாசிரியர்களான தஞ்சை ராமையாதாஸுக்கும், உடுமலை நாராயணகவிக்கும், உதவியாளரா வேலை பார்த்திருக்கார்.
"ராமசாமி... வாடா... நான் சொல்லச் சொல்ல எழுதிக்க'’என்பாராம் தஞ்சை ராமையாதாஸ்.
ஆடு திம்பாங்க அத பாக்கணும்
ஆன, புலி, கரடி போல
ஆடு திம்பாங்க அத பாக்கணும்’
-இப்படி கவிஞர் சொல்லச் சொல்ல, எழுதி, பிரதி யெடுத்துக் கொடுத்துவிட்டு, உடுமலையாரிடம் போவாராம்.
தஞ்சை ராமையாதாஸுக்கு கொஞ்சம் காது மந்தம். அதனால் வி.கே.ஆரிடம், "அந்த செவிடன் என்ன எழுதினான்?'’என கேட்பாராம்.
"ஆடு திம்பாங்க'’ என வி.கே.ஆர். சொன்னதும், “"நான் சொல்றேன் பாரு.... எழுதிக்கோ... ‘பன்னு திம்பாங்க அத பாக்கணும்'’என போட்டிக்கு எழுதுவாராம்.
இப்படி பொறாமை இல்லாத ஜாலியான போட்டி மனப்பான்மையுடன் இருந்து கலை வளர்த்திருக்காங்க.
பழம்பெருமை பேசிப் பேசி விக்கித்துப்போய் நடிக்க... சிவாஜியப்பாவை விட்டால் வேறு ஆள் ஏது? மிகச்சிறப்பாக நடித்திருந்தார் சிவாஜியப்பா. என்னை அவருக்கு மிகவும் பிடிக்கக் காரணமாக இருந்தது "பாரம்பரியம்'’படம்தான்.
அன்னை இல்லத்தின் முன்வாசல் வழியாகவும், பின் வாசல் வழியாகவும் செல்லக்கூடிய சலுகை எனக்குக் கிடைத்தது.
"பாரம்பரியம்'’படம் சிறப்பாக இருந்தபோதும், தயாரிப்பாளர் மரணம் உள்ளிட்ட சில சிக்கல்களால் மூன்றாண்டுகள் தாமதமாகத்தான் வெளியானது.
"பாலா... இது என்னோட பெரியப்பா எம்.ஜி.ஆர் கிட்டருந்து நான் கத்துக்கிட்ட குணம்''” என்றார் பிரபு...
(பறவை விரிக்கும் சிறகை)
மக்கள் சந்திப்பு!
"பாரம்பரியம்'’படப்பிடிப்பு நடந்துக் கிட்டிருந்த அந்தச் சமயம்... சிவாஜியப்பா "தமிழக முன்னேற்ற முன்னணி'’என்கிற கட்சியைத் தொடங்கி நடத்தினார். அதனால் ஒருவித அரசியல் பரபரப்போடு பொது மக்கள், அவரை சந்திப்பது வழக்கமாக இருந்தது.
ஒருநாள் தன்னைச் சந்திக்க வந்த மக்களையெல்லாம் ஒரு காட்சியில் படம்பிடித்து படத்தில் சேர்க்கச் சொன்னார். நானும் அந்த மக்களை படம் பிடித்தேன்.