(75) மீண்டும் சிவாஜி-சரோஜாதேவி ஜோடி!
ஒரே நேரத்தில் அப்பா-மகன் என இருவரையும் இயக்கிய பெருமை எனக்கு உண்டு.
நடிகர் திலகம் சிவாஜியப்பாவை வைத்து "பாரம்பரியம்'’படத்தை இயக்கினேன்.
பிரபுவை வைத்து "மூடுமந்திரம்'’படத்தை இயக்கினேன்.
இந்த இரண்டு படங்களின் படப் பிடிப்பையும் ஒரேசமயத்தில் மாறி, மாறி நடத்தினேன்.
"மூடுமந்திரம்' த்ரில்லர் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட படம். ஏற்கனவே எங்க டைரக்டர் பாரதிராஜாவால் ‘"கடலோரக் கவிதை கள்'’படத்தில் கம்பீரமான டீச்சராக அறிமுகமாகியிருந்த ரேகாவை, ‘"மூடுமந்திரம்' படத்தில் மிடுக்கான கலெக்டராக நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தோம்.
"மூடுமந்திரம்' பட வேலையை தொடங்கியிருந்த நேரத்தில் "பாரம்பரியம்'’ படத்தை எடுத்தாக வேண்டும் என ஒருவர் விடாப்பிடியாக நின்றார்.
எஸ்.எஸ்.சந்திரன், டி.கே.சந்திரன் நடித்து மிகவும் பிரபல மாகியிருந்த நாடகம் "பாரம்பரியம்'. இதன் கதையை கலைமணி சார் தான் எழுதியிருந்தார். இந்த நாடகத்தில் நடித்ததற்காக இந்த இரண்டு சந்திரன்களும் பல்வேறு விருதுகளைப் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு மக்களால் வரவேற்கப்பட்ட நாடகம்.
"மூடுமந்திரம்' படத்தின் தயாரிப்பாளர் முத்துராமனும், "பாரம்பரியம்' படத்தின் தயாரிப்பாளர் சசியும் ஒரே நேரத்தில் தங்களின் பட வேலைகளை தொடங்கும்படி நிற்கிறார்கள்.
ஏற்கனவே பிரபு சாரிடம் "மூடுமந்திரம்' கதையைச் சொல்லி ஓ.கே. வாங்கிவிட்டேன்.
இனி "பாரம்பரியம்' கதையை சிவாஜியப்பாவிடம் சொல்லி, அவரின் கால்ஷீட் பெற வேண்டும்.
"நீங்க எழுதின கதைதானே "பாரம்பரியம்'’நாடகம். அதனால் நீங்களே போய் சிவாஜியப்பாகிட்ட கதையைச் சொல்லுங்க''’என கலைமணியிடம் சொன்னேன்.
"இல்ல டைரக்டரே, நீங்க போனாத்தான் சரியா இருக்கும். "பாரம்பரியம்' நாடகக் கதையைத்தான் படமா எடுக்கப்போறோம்னு சொன்னீங்கன்னாலே சிவாஜியப்பாவுக்கு தெரியும். அவருக்கு அந்தக் கதை நல்லாவே தெரியும். ஏன்னா அந்த நாடகக் கதை சிவாஜியப்பாவுக்காக எழுதினதுதான்''’என்றார் கலைமணி சார்.
நானும், டி.கே.சந்திரனும், தயாரிப்பாளரும் போக் ரோடு அன்னை இல்லத்திற்குச் சென்றோம். சிவாஜியப்பாவைப் பார்த்து விஷயத்தைச் சொன்னோம்.
"என்ன படம்? என்ன கதைடா?''’என சிம்மக்குரலோன் உறுமினார்.
"அது வந்துங்கப்பா...''”
"ஆமா... நீ யாரு?''”
நான் பாரதிராஜாவின் அஸிஸ்டெண்ட் என்பதில் தொடங்கி, இயக்கிய படங்களையும் சொன்னேன். பிரபு சாருக்கு "மூடுமந்திரம்' கதை சொல்லியிருப்பதையும் சொன்னேன்.
"என்ன கதை''”
"பாரம்பரியம்'’
"பாரம்பர்யம்னா அந்த நாடகக் கதையா? டி.கே.சந்திரன் நடிச்சிருப்பானே. இந்தா இருக்கான்ல... ஏண்டா நீயும், எஸ்.எஸ். சந்திரனும் நடிச்சிருப்பீங்களே, அந்த நாடகமா? அந்தக் கதைதான் எனக்குத் தெரியுமே... பெரிய பணக்காரன்... அடுத்தவங்களுக்கு கொடுத்துக், கொடுத்தே ஒண்ணுமில்லாம போவான். ஒண்ணுமில் லாம போனாலும், கொடுக்கணும்னு நினைப்பான். அந்தக் கேரக்டர்ல நடிச்சியே... அதுதானே இந்தக் கதை?''’என சிவாஜி யப்பா கேட்க...
"ஆமாங்க''’என டி.கே.சந்திரன் சொன்னார்.
"அந்தக் கதைதான். அதுல நீங்க நடிக்கணும்''’என்றேன்.
"அதுல உனக்கு ஜோடியெல்லாம் இருந்ததே''’என சந்திரனைப் பார்த்துக் கேட்டார்.
அந்த நாடகத்தில் ஜெமினிசந்திரா எனும் நடிகை, டி.கே. சந்திரனுக்கு ஜோடியாக நடித்தார். வயதான தம்பதியாக, சினிமாவில் சிவாஜியப்பாவுக்கு யாரை ஜோடியாக நடிக்க வைப்பது? என்கிற குழப்பம் எனக்கு.
"சரோஜாதேவியம்மா நடிச்சா நல்லாருக்குமே''னு எனக்குத் தோணுச்சு.
சிவாஜியப்பாவிடம் "பாரம்பரியம்' படத்தில் நடிக்க சம்மதம் வாங்கிக் கொண்டு திரும்பினோம்.
"அவர் நடிக்கிறதை நிறுத்தி ரொம்ப நாளாச்சு. சம்மதிப்பாரா?' என்கிற கேள்வி யோடு சரோஜாதேவியம்மாவை ஒப்பந் தம் செய்ய உடனடியாக பெங்களூரு கிளம்பினேன்.
"வாழ்ந்து கெட்ட குடும்பம்னு கிராமங்கள்ல சொல்வாங்களேம்மா... அப்படியான ஒரு கதை. சிவாஜியப்பாவுக்கு ஜோடியா நீங்கதான் நடிக்கணும்''’என்றேன்.
"நல்லாருக்கே மனோ... நான் நடிக்கி றேன்''’எனச் சொல்லி சம்மதிச்சார் சரோஜாதேவியம்மா.
"பாரம்பரியம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
"சரோஜா மேக்-அப்பை குறைச்சுக்கோ...''”
"நீங்க மட்டும் ஃபுல் மேக்-அப் போட்டி ருக்கீங்க?''”
(பறவை விரிக்கும் சிறகை)
படம் உதவி: ஞானம்
_________
முந்திக்கொண்ட நட்சத்திரம்!
கதைப்படி சிவாஜியப்பா- சரோஜா தேவியம்மா தம்பதிக்கு மகளாக ஒரு புதுமுகத்தை அறிமுகம் செய்ய விரும்பினேன்.
எங்க டைரக்டர் பாரதிராஜாவிடம் அஸிஸ் டெண்ட்டாக நான் இருந்த காலத்திலிருந்தே ராதிகா வுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. தமிழ்ப் படங்களில் நடிக்க முடியாதபடி, தெலுங் கில் பிஸியாகிவிட்ட ராதிகாவை, நான் டைரக்டரானதும், மீண்டும் தமிழுக்கு அழைத்துவந்தேன். எனது படங்களில் தொடர்ந்து நடித்தார் ராதிகா. அதனால் எங்களிடையே நல்ல புரிதல் உண்டு. ராதிகாவின் அம்மாவிடம் எனக்கு நல்ல பழக்கம்.
ராதிகாவுக்கு ஒரு தங்கை உண்டு என்பது எனக்குத் தெரியும். அவர்தான் நிரோஷா.
"பாரம்பர்யம் படத்துல சிவாஜி-சரோஜாதேவி மகளா, இளம் நாயகியா நிரோஷாவை அறிமுகப்படுத்த விரும்புறேன்''’என ராதிகாவிடம் சொன்னேன்.
என்னை நம்பி ராதிகாவும், அவரின் அம்மாவும் தங்கை நிரோஷாவை போட்டோ ஷூட் எடுக்க அனு மதித்தார்கள். போட்டோவில் திருப்தியாக இருந்ததால், நிரோஷாவை ஒப்பந்தம் செய்தேன்.
ஆக... தமிழ் சினிமாவில் மிக முக்கிய நாயகியாகத் திகழ்ந்த நிரோஷாவை... இன்று கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் நிரோஷாவை, சினிமாவுக்கு அறிமுகப் படுத்தியவன் நான்தான்.
ஆனால் மணிரத்னத்தின் "அக்னி நட்சத்திரம்' முந்திக்கொண்டு வெளியானதால், நிரோஷாவின் முதல் படமாக ‘"அக்னி நட்சத்திரம்'’ஆனது.